ரணிலின் உரையும்… கதாநாயகியாக காத்திருக்கும் விஜயகலாவும்

இலங்கைத்தீவின் இன்றைய கடும் காலநிலை சீர்கேட்டு மத்தியில் தெரிந்த ஊடககுவிய மையம் எதுவென வினவினால் அது நிச்சயமாக கொழும்பு நீதிமன்றமாகவே இருக்கும்.

அரபிக்கடலின் உருவாகிய வளிமண்டல தாழழுக்க மண்டலம் சாம்பிராணி என அர்த்தப்படும் அரபிமொழி சொல்லான லூபனில் அச்சுறுத்தினாலும் இந்த அச்சுறுத்தலுக்கும் மத்தியில் பரபரப்புக்குரிய இடமாக இந்த நீதிமன்ற வளாகம் மாறியிருந்தது.

தமிழ்மக்கள் மத்தியில் உற்றுநோக்கலை ஏற்படுத்திய ஒரு செய்திக்குரிய முகமும் அதேபோல தெற்கில் பரபரப்பை ஏற்படுத்திவரும் சதிமுயற்சி ஒன்று குறித்து பேசப்படும் முகங்களும் இன்று இதே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டன.இதனால் அந்த நீதிமன்ற முன்றலை ஊடகக் கருவிகள் மொய்த்துப்பிடித்திருந்தன.

தமிழ் ஊடகங்களில் முக்கிய இடத்தைப்பிடித்த விஜயகலா மகேஸ்வரனின் கைது மற்றும் பிணை குறித்த செய்தியைப்பார்க்க முன்னர் தெற்கில் உன்னிப்பை ஏற்படுத்தி செய்தியை முதலில் பார்த்துவிட வேண்டும்.

சிறிலங்கா பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் பிரதி காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வாவும் ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல்குமாரவும் இதே நீதிமன்றத்தில் தாமாக முன்னிலையாகிய விடயத்தை முதலில் நோக்க வேண்டும்

மேற்படி இருவரையும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு

கடந்த வெள்ளியன்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் படியே அவர்கள் இருவரும் மன்றத்தில் தோன்றினர். அதன்பின்னர் நீதிமன்றத்தின் அங்கீகாரம் இல்லாமல் நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்ற உத்தரவைப்பெற்று அவர்கள் மன்றை விட்டு வெளியே வந்தனர்.

சிறிலங்கா அரசதலைவர் மைத்திரி மற்றும் முன்னாள் பாதுபாப்பு செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித்திட்டம் ஒன்று குறித்து ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமாரவால் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில் பிரதி காவற்துறை மா அதிபர் நாலக்க டி சில்வாவின் குரலும் இருந்தது அவர் இந்த சதியை இயக்கினார் என சொல்லப்பட்ட கதைகளின் நீட்சியாக இந்த நீதிமன்ற காட்சிகள் இருந்தன.

இந்த சதித்திட்டம் தொடர்பாக சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் பரபரத்ததால இவ்வாறான நகர்வுகள் வந்திருந்தன.

எனினும் நாலக டி சில்வா எதிர்வரும் நாட்களில் கைதுசெய்யப்படக்கூடிய சாத்தியங்களே உள்ளன

ஆனால் தன் மீதான கொலை முயற்சி குறித்து கொழும்பில் இவ்வாறான பரபரப்புகள் இடம்பெற்றாலும் அவைகுறித்து சட்டை செய்யாமல் இன்று அதிகாலையே மைத்திரி சீசெல்ஸ் தீவுக்கு இன்று பயணப்பட்டார்.

கடந்த வாரம்தான் அமெரிக்காவிழல் இருந்து நாடுதிம்பியவர் இப்போது 3 நாள் பயணமாக சீசெல்ஸ்சுக்கு பறந்தார்.

அதேபோல பிரதமர் ரணிலும் நோர்வேயில் வைத்து அதன் பிரதமர் அர்னா சோல்பேர்க் சகிதம் செய்தியாளர்களை சந்தித்தார். இலங்கை கடலின் பலன்களுக்கும் பெற்று சுற்றுலா தொழில்துறை மேம்பாட்டுக்கும் ஒஸலோவின் உதவிபெறப்படும் என்ற செய்தியை வழங்கினார்

அதன் பின்னர் லண்டன் வந்தார். லண்டனிலும் ஒகஸ்போட் யூனியன் உரை மற்றும் பிரித்தானியப்பிரதமர் திரேசமேயுடன் சந்திப்பு போன்ற ஒரு செய்திகளும் வந்தன.

கடந்தவார இறுதியில் விடாக்ககண்டன் கொடாக்கண்டனான ஆளுனர் ரெஜினோல்ட் குரே லண்;டனில் நடத்திய சந்திப்புக்களும் தமிழர்களின் எதிர்ப்புக்காரணமான சில சந்திப்புகள் மீளெடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் பதிவு செய்யப்பட்டன.

ஆனால் இன்று தமிழ் ஊடகங்களின் அதிர்வாக சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், இனறு காலை கைதுசெய்யப்பட்ட செய்தியே இருந்தது.

விஜயகலா மகேஸ்வரன ஏன் கைசெய்யப்பட்டார் என்பதற்கான காரணம் ஏற்கனவே பகிரங்கப்பட்ட விடயம்.

கடந்த யூலைமாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டஅவர், தமிழர்கள் நிம்மதியாக வாழவும், நிம்மதியாக வீதியில் நடக்கவும், தமிழ் பிள்ளைகள் பாடசாலைகளில் இருந்த பாதுகாப்பாக மீண்டும் வீடு திரும்பவும் வேண்டுமானால் வடக்கு கிழக்கில் விடுதலைப்புலிகளின் கை ஓங்கவேண்டும் என்றார்.

இதனையும்விட 2009 க்கு முன்னர் புலிகள் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது தான் உணர்கின்றோம் என்றவர் இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே தங்களுடைய முக்கிய நோக்கம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன்பின்னர் கடந்த யூன் மாதத்தில் சுழிபுரம்பகுதியில் படுகொலைசெய்யபட்ட 6 வயது சிறுமி றெஜினாவின் விடயத்தை தொட்ட அவர் ஜனாதிபதி மைத்திரி தனது கட்சியை வளர்த்தபோதும் தமிழ் மக்களை அவர் காப்பற்றவில்லை எனவும் குற்றஞ்சாட்டி முடித்தார். விஜயகலா தனது கருத்தை தெறிக்கவிட்ட போது சிறிலங்காவின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிரஅபேவர்தன, வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன,முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட்ட அரசியல்வாதிகள்;,அரச அதிகாரிகள் எல்லோரும் அதே மேடையில் இருந்தனர்.

ஆயினும் பின்னர் நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லையென தனது கருத்தில் ஒரு திருப்பத்தை எடுதது சமாளித்;தாலும் அவர் கூறிய கருத்து சர்ச்சைக்குரியதாக மாற்றப்பட்டது.

விடுதலைப்புலிகளின் டி பக்ரோ ஸ்ரேற் எனப்படும் நடைமுறை அரசு இருந்த அந்தக்காலத்தை சிறிலங்காவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒரு தமிழ் அமைச்சர் ஏன் ஒரு பொற்காலமாக நினைவுகூர்ந்தார் என்பதற்குரிய யதார்த்த நிலையின் பின்னணியை கூட விளங்கிக்கொள்ளாமல் பிரிவினையைத் தூண்டுவதான வியாக்கியானங்கள் தீவிரமாக தெற்கில் முன்வைக்கப்ட்டன

இதன் அடிப்படையில் விஜயகலாவின் உரையை மையப்படுத்தி யாழிலுள்ள தமிழ்ப்பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊடகர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன

விஜயகலா மீதான ஒழுங்காற்று நகர்வுகளுக்கு என ஐக்கிய தேசியக் கட்சி நியமித்த நால்வர் அடங்கிய குழுவும் தனது தர்பபில் சில நகர்வுகளை எடுத்தது

இப்பொது ஏறக்குறைய 3 மாதங்கள் கழித்து இது தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அதுவும் தனது யூலை உரை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்கு சென்ற வேளையில் சிறிங்காவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டார்.

அதன் பின்னர் அவரும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கபட்டார்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர்; 7இல் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஒரு வேளை இந்த வழக்குகள் சற்று கடுமையாக மாறினால் என்ன நடக்கும் எதிர்வரும் மாகாணசபைத்தேர்தலில் ஒரு கதாநாயகியாக கூட விஜயகலா மகேஸவரன் களம் இறங்கக்கூடும்.

கடந்த முறை மாகாண சபைத்தேர்தல் இடம்பெற்றபோது எவ்வாறு அனந்தி சசிதரன் அந்ததேர்தல் களத்தில் உற்றுநோக்கலை ஏற்படுத்தினாரோ அந்த இடம் இந்தமுறை விஜயகலா மகேஸ்வரனுக்கு இடம்மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லை. ஏனெனில் அரசியலில் தான் எதற்கும் சாத்தியங்கள் உண்டாச்சே!

-athirvu.in

TAGS: