இலங்கையில் அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் கைதிகள் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் உண்ணாவிரதப்போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு மெகசின் சிறையில் உள்ள தமிழ் கைதிகள் 43 பேரும் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இலங்கையில் தற்போது தமிழ் அரசியல் கைதிகள் 107 பேர் இருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் இந்த அரசியல் கைதிகள், தமது விடுதலையை வலியுறுத்தியும், வழக்குகளை துரிதப்படுத்தக் கோரியும் போராட்டம் நடத்துகின்றனர். இவர்களின் போராட்ட வடிவங்களில் மாற்றம் இருக்கும். ஆனால், ஆண்டுதோறும் இவர்கள் போராட்டங்களை நடத்துகின்றனர் என்று அருட்தந்தை மா.சக்திவேல் குறிப்பிட்டார்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் தரப்பினரால் நீண்டகாலமாக முன்வைக்கப்படுகின்ற போதிலும், அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லையென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள அண்மையில் கண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.
- இலங்கை: சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தல்
- இலங்கை: போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் மருத்துவமனையில் அனுமதி
”அரசியல் கைதிகள் என்று யாரும் சிறைச்சாலைகளில் இல்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி, குற்றவாளிகளாக காணப்பட்டவர்களும், நீதிமன்ற விசாரணைகளில் இருப்பவர்களும், விசாரணைக்காக காத்திருப்பவர்களும்தான் சிறைகளில் உள்ளனர். பிரதமர ரணில் விக்ரமசிங்கவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் நடத்திய சந்திப்பில் இதனைத்தான் தெளிவாகக் கூறினேன். தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் மனக்குறைகளைத் தீர்க்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தியதாக அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நீண்டகாலமாக போராடிவரும், அருட்தந்தை மா.சக்திவேலுடன் இதுகுறித்து பி.பி.சி. தமிழ் பேசியது.
”பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதான அனைவரையும் அரசியல் கைதிகளாக ஏற்க வேண்டும். இலங்கையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டமே பயங்கரமானது என்பதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது. அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவதாக மைத்திரிபாலவின் அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளது. எனவே, பயங்கரவாதத் தடைச்சட்டம் மாற்றப்பட்டாலே சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் விடுதலையாகிவிடுவர்.” என்றார்.
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா?
”சாத்தியம் இருக்கிறது. ஆனால், தற்போதுள்ளதைவிட பயங்கரமான சட்டமொன்றைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர். அரசியல் கைதிகளை விடுவிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை. அவர்களைத் தண்டிக்கும் நோக்கத்திலேயே அரசாங்கம் செயல்படுகிறது. புதிதாக கொண்டுவரப்படவுள்ள சட்டத்தை (பயங்கரவாத முறியடிப்புச் சட்டம்) மனித உரிமை ஆணையகமே எதிர்க்கிறது. மனித உரிமை ஆணையக அதிகாரிகளுடன் சந்திப்பொன்றை நடத்தியபோது, அவர்கள் இதனை என்னிடம் கூறினார்கள். ஏற்கனவே இருப்பதைவிட புதிய சட்டம் பயங்கரமானது என அவர்கள் கூறுகிறார்கள்.
- விடுதலை புலிகள் குறித்து பேசிய விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுதலை
- இலங்கை ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு – காரணமும் தீர்வும்
அரசியல் கைதிகள் யாரும் இல்லை என்று சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள கூறியிருப்பது குறித்து அவரிடம் கேட்டோம்.
‘இந்த அரசாங்கங்கள் பயங்கரவாத, இனவாத போக்குடையவை. இதனை மறைக்கவே சிறையில் இருப்பவர்களை பயங்கரவாதிகள் எனக் கூறுகின்றன. அதனாலேயே அரசியல் கைதிகள் என்று அவர்களைக் கூற மறுக்கின்றனர். சிறையில் உள்ளவர்களை பயங்கரவாதிகள் எனக் கூறிக்கொண்டிருந்தால் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படப் போவதும் இல்லை, அரசியல் தீர்வு ஏற்படப் போவதும் இல்லை” என்று கூறினார்.
சிறையில் உள்ளவர்களை நீதிமன்றத்தின் ஊடாக விடுவிக்க முடியாதா? என்ற கேள்விக்கு ‘நீதிமன்றத்தின் ஊடாக இவர்களை விடுவிக்க முடியாது என்பது கடந்த கால நடவடிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது. உள்ளே உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் ஒப்புதல் வாக்குமூலம் ஊடாகவே குற்றவாளியாக்கப்பட்டுள்ளனர். நீண்டகாலம் தடுத்து வைத்திருந்து, சித்திரவதை செய்து, தெரியாத ஒரு மொழியில் வாக்குமூலம் எழுதப்பட்டு, மொழி தெரியாத ஒருவர் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு, அதில் ஒப்பமிட வற்புறுத்தப்படுகின்றனர். நீண்டகாலம் இவர்கள் சிறையில் இருப்பதால், குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டால், தண்டனையை அனுபவித்த பின்னர் விடுதலையாகிவிடலாம் என்ற நோக்கில் அநேகமானோர் குற்றங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர்.”
குற்றங்களை ஏற்றுக்கொண்டால், குறைந்த தண்டனையுடன் விடுதலை செய்ய முடியும் என்ற ஒரு பேரம்பேசல் கைதிகளுடன் நடந்ததாக தகவல்கள் இருக்கின்றன. இதில் உண்மை இருக்கிறதா?
”பேரம் பேசுதலைவிட சில சட்டத்தரணிகளே அப்படியொரு நிலைக்கு வருகிறார்கள். இந்த வழக்குகளை வாதாடுவதென்றால் நீண்டகாலம் எடுக்கும். அப்படி நடத்தப்படும் வழக்குகள் அரசாங்கத்திற்கு சார்பாக இருந்தால் தண்டனைக் காலம் நீடிக்கும், அதனைவிட குற்றத்தை ஒப்புக்கொண்டால், விரைவில் விடுதலையாகலாம் என்று வாக்குறுதி வழங்கப்பட்டு, குற்றங்களை ஏற்றுக்கொண்ட அநேகமானோர் இருக்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் என்னிடமும் இருக்கின்றன. இது மிகப்பெரிய சமூக அநீதி. குற்றம் செய்யாத ஒருவர், வழக்குகள் இன்றி சிறையில் இருப்பதைவிட குறுகிய கால தண்டனையுடன் விரைவில் விடுதலையாகிவிடலாம் என்ற எண்ணத்தில், செய்யாத குற்றத்தை ஏற்கும் நிலை இருக்குமாயின், சட்டத்தில் ஏதோ பிழை இருக்கிறது. அவர்களிடம் பிழை இல்லை.”
அப்படியென்றால், அரசியல் கைதிகளின் விடுதலை உடனடியாக சாத்தியமாகாதா?
”பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கினால் விடுதலையாகலாம். சுமார் 50 மேற்பட்ட தண்டனைக் கைதிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கலாம். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்ததாக ஜெனீவன் என்ற ஒருவர் மீது இரண்டு வழக்குகள் இருந்தன. இதில் ஒரு வழக்கில் தண்டனைப் பெற்றிருந்தார். மற்றையது விசாரணையில் இருந்தது. எனினும், ஜனாதிபதி இவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்தார். விசாரிக்கப்பட்ட வழக்கும் மீளப்பெறப்பட்டது. அப்படியென்றால் தற்போது சிறையில் உள்ள தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யலாம். விசாரிக்கப்படும் வழக்குகளையும் மீளப் பெறலாம்.” என்று கூறினார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சனைக்கானத் தீர்வு குறித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் தொடர்புகொண்டு பேசினோம். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுவதுதான் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சாத்தியமாக்கும் என்று அவர் கூறினார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நகர்வு என்னவாக இருக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த சுமந்திரன் ”அரசாங்கம் அரசியல் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும். சட்டரீதியாக பார்க்கும்போது விட்டுக்கொடுப்புக்களால் பாதிக்கும் மேற்பட்டோர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எஞ்சியுள்ளவர்களுக்கும் விடுவிக்கப்பட வேண்டும். அதற்கு அரசாங்கம் ஒரு அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இதுசம்பந்தமாக ஜனாதிபதியையும், பிரதமரையும் அடுத்தவாரம் சந்திக்க எதிர்பார்த்துள்ளோம்.” என்றார்.
தமிழ் அரசியல் கைதிகள், ராணுவனத்தினர் ஆகியோருக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக்க ஹெல உறுமய என்ற கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க யோசனையொன்றை முன்வைத்திருந்தார். இந்த யோசனை குறித்தும் சுமந்திரனிடம் கேட்டோம்.
”சம்பிக்க ரணவக்க முன்வைத்த யோசனை தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு குறித்து அல்ல. அது ராணுவ வீரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது பற்றிய ஒரு விடயம். அதற்கு எந்த இராணுவ வீரர், என்ன குற்றம் புரிந்தார் என்று சொல்லப்படவில்லை. பெயரிடப்படாத, முகம் தெரியாத எல்லோருக்கும் பொதுமன்னிப்பு என்ற விடயத்தையே சம்பிக்க ரணவக்க முன்வைத்துள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விசயம். உண்மையைக் கண்டறியும் ஒரு முறை உருவாக்க வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிப்பதாகக் கூறி, மற்றுமொரு விசயத்தை மூடிமறைக்கும் நடவடிக்கைக்கு நாம் உடந்தையாக இருக்க முடியாது.”
தமிழ் அரசியல் கைதிகள் சட்டரீதியாக விடுதலைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்று சட்டத்தரணியான எம்.ஏ.சுமந்திரனிடம் கேட்டோம்.
”பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கான சட்டமூலம் ஒன்று இந்த வாரம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அதில் உள்ள பல ஏற்பாடுகள் தவறானது என்று அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. ஆகவே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, வழக்குகள் நடந்துவரும் கைதிகளுக்கும், ஒரு அரசியல் தீர்மானம் மூலமாக விடுதலை செய்யலாம். இதனைத்தவிர சட்டரீதியாக எதனையும் செய்ய முடியாது. அப்படியில்லை எனில், நீண்டகாலமாக தடுப்பில் உள்ளார்கள் என்பதைக் கருத்திற் கொண்டு அவர்களை விடுவிக்க முடியும்.”
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கான சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்திற்கு வருவதும், அடுத்த வாரம் பிரதமர், ஜனாதிபதி ஆகியோரைச் சந்திக்க எதிர்பார்த்திருப்பதும் சமகாலத்தில் நடக்கவிருப்பதால், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் காத்திரமான நகர்வுகள் எதுவும் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்க முடியுமா? எனும் கேள்விக்கு ”நாங்கள் எங்களால் இயன்றதைச் செய்வோம். அரசாங்கத்தின் தீர்மானத்தில்தான் அது தங்கியிருக்கிறது.” என்று கூறி முடித்தார்.
அரசியல் கைதிகளின் விடுதலை இழுபறியாக இருந்து வரும் நிலையில், அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகிக்கும் மனோ கணேசனிடம் தொடர்புகொண்டு, இதற்கான தீர்வு ஏதேனும் இருக்கிறதா என்று பி.பி.சி. தமிழ் கேட்டது.
திறந்த மனதுடன் பேசுவது மட்டுமே தீர்வைப் பெற்றுத் தரும் என்று பேசத் தொடங்கினார் அமைச்சர் மனோ கணேசன்,
தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினைக்குத் தீர்வு காண என்ன செய்யலாம்?
”தமிழ் அரசியல் கைதிகள் சம்பந்தமாக எந்தவித நிபந்தனைகளும் அற்ற, திறந்த மனதுடன் கூடிய கலந்துரையாடலை நடத்த வேண்டும். அரசாங்கத்தில் உள்ள அமைச்சரான சம்பிக்க ரணவக்க கூறிய பொதுமன்னிப்பு என்ற விடயத்தை ஆரம்ப புள்ளியாக வைத்து கலந்துரையாட வேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக அந்த யோசனையை எடுத்த எடுப்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்துவிட்டனர். அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் யோசனையை முழுமையாக நானும் ஏற்கவில்லை” என்று அவர் கூறினார்.
”ஆனால், அதனையொட்டி ஒரு பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்க வேண்டும். புலிகளைப் பற்றி பேசி அரசியல் செய்வதைவிட, புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. புலிகள் மீண்டும் எழுச்சி பெற்று வர வேண்டும் என்று சொல்வதுதான் சட்டசிக்கலை உருவாக்கும். தடைநீக்கம் கோரி யாரும் நீதிமன்றத்தை அணுகலாம். புலிகள் இயக்கம் இன்னமும் இருக்கிறது, அது ஆயுதப் போரில் ஈடுபடும் என்ற தோற்றப்பாட்டை சிங்கள மக்கள் மத்தியிலே, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சில குழுக்கள் ஏற்படுத்த முயற்சிக்கின்றன. போரில் கை, கால்களை இழந்த ஏராளமானோர் இலங்கையில் இருக்கின்றனர். இவர்களுக்கு இதுகுறித்து பேசுவதற்கான தார்மீக உரிமை இருக்கிறது. புலித் தடை நீக்கத்திற்கான வழக்கை முன்கெடுக்கும்போது சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலையையும் துரிப்படுத்தலாம் என நினைக்கிறேன்” என்று மேலும் தெரிவித்தார்.
சிங்கள அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்த பொதுமன்னிப்பு என்ற யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. எனவே, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும்?
‘பொதுமன்னிப்பு என்ற யோசனையை அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறிய மறுதினமே, அரசாங்கத்தின் இந்த யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தனர். உண்மையில் இது அரசாங்கத்தின் யோசனை அல்ல. இது அரசாங்கத்தில் இருக்கும் ஒரு கட்சியின் யோசனை. நாங்களும் அரசாங்கத்தில் இருக்கிறோம். நாங்கள் சொல்வதெல்லாம் அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்காது. அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான் அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்க முடியும். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நிராகரிப்பதாக கூறிவிட்டனர். ஆனால். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசரப்பட்டிருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் சிறைக்குள் பல வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் விடுதலைக்காக காத்திருக்கும் உறவினர்கள் வெளியே போராட்டங்களை நடத்துகின்றனர். இவ்வாறு தனது விடுதலைக்காக அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாப் போராட்டம் நடத்திவரும் சுலஷன் என்ற அரசியல் கைதியின் தாயாருடன் பி.பி.சி. தமிழ் தொடர்புகொண்டு பேசியது.
- “இறுதிப் போரின் போது தமிழகத்திலிருந்து கொழும்பை தகர்க்கும் திட்டம் இருந்தது” – இலங்கை ஜனாதிபதி
- இலங்கை போரில் காணாமல் போனோர் பற்றி அறிய ஆர்.டி.ஐ. உதவுமா? அருணா ராய் பதில்
உண்ணாப் போராட்டம் நடத்திவரும் மகன் குறித்து பேசவே தொடர்புகொண்டோம் எனக் கூறியதும், ”மகனுக்காக இப்போதும் கோயிலில் இருந்து கடவுள்கிட்ட மன்றாடிக்கொண்டிருக்கிறேன் அப்பு.” என்று மதியரசன் புஸ்பமாலா என்று பேச ஆரம்பித்தார்.
”மகனுக்கு இப்போ 30 வயது. எனக்கு மூன்று பெண் பிள்ளைகள். இப்பொழுதும் மகனை நினைத்து மனம் பாடாய்படுகிறது. எனது கணவரும் நான்கு வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். கடந்த வருடம் இதே ஐப்பசி மாதம், எனது மகன் உள்ளிட்ட சிலர் 41 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் விடுதலை கிடைக்கவில்லை. இம்முறையும் போராட்டம் நடத்துகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.
“மகனின் உடல்நிலை மோசமாகியுள்ளதாக மருத்துவர்கள் கூறியதாக அறியக்கிடைத்தது. மகனைப் பார்க்கச் சென்ற சிலர் மூலம் இந்தத் தகவலை அறிந்தேன். மகனுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன். மகனின் விடுதலைக்காக பலரை, பல இடங்களில் சென்று பார்த்துவிட்டேன். கெஞ்சி, மன்றாடியும் எதுவும் நடக்கவில்லை. ஜனாதிபதியின் கால்களில் விழுந்து, அழுது கேட்டுவிட்டேன். ஆனால் மகனுக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. இறுதிப் போரின்போது மகனைக் கைதுசெய்ததாகக் கூறுகின்றனர். அவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இருந்ததாகக் கூறுகின்றனர். பலர் பலவற்றை கூறுகின்றனர். ஆனால் எனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது. மகனின் விடுதலைக்காக மூன்று பெண் பிள்ளைகளுடன் ஒரு தாயாக காத்திருக்கிறேன்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து, சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். இதுவே தமிழர்களுடனான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் என்றார் சமூக ஆர்வலர் இந்திரஜித்.