‘தூக்குத் தண்டனை இரத்துச் செய்யப்படுவதைத் தடுக்காதீர்’- எதிரணி எம்பிகளுக்கு, செனட்டர்களுக்கு என்ஜிஓ கோரிக்கை

தூக்குத் தண்டனை மற்றும் சித்திரவதையை எதிர்க்கும் மலேசிய அமைப்பு(மாட்பெட்), எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் செனட்டர்களும் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யும் புத்ரா ஜெயாவின் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.

தூக்குத் தண்டனையை இரத்துச் செய்ய அமைச்சரவை எடுத்துள்ள முடிவு தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள 1,267 பேருக்கு நல்ல செய்தியாகும் என மாட்பெட் பேச்சாளர் சார்ல்ஸ் ஹெக்டர் கூறினார்.

“எதிரணி எம்பிகளும் செனட்டர்களும் தூக்குத் தண்டனையை இரத்து செய்யும் நடவடிக்கைக்கு ஆதரவளிப்பார்கள் என மாட்பெட் எதிர்பார்க்கிறது”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

புத்ரா ஜெயா முடிவு எடுத்ததுடன் நின்று விடாமல் தொடர் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று ஹெக்டர் வலியுறுத்தினார். முந்தைய பிஎன் அரசாங்கமும் இப்படித்தான் சொல்லிவிட்டுப் பிறகு எதுவும் செய்யாமல் இருந்து விட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.