தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக புதிய சட்டம் பயன்படுத்தக் கூடாது! நாடாளுமன்றில் இரா.சம்பந்தன்

“பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக நடைமுறைக்கு வரவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது, தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடாது. அவர்கள் நீண்டகாலம் சிறைகளில் வாடிவிட்டனர். எனவே, குற்றம் புரிந்தார்களோ, புரியவில்லையோ அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும்.”

– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற இழப்பீட்டுச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக நீதி முறையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை. அவர்களால் வழங்கப்பட்ட வாய்க்கூற்றுகளைத் தவிர வேறு எந்த ஆதாரமும் கிடையாது. அநீதியான முறையில் அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இது சர்வதேசக் கோட்பாடுகளுக்கு முரணான செயலாகும்.

இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது கைதுசெய்யப்பட்ட பலர் விடுவிக்கப்பட்டமை போல் தமிழ் இளைஞர்களும் விடுவிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் இழப்பீடுகள் குறித்த அலுவலகமும் கவனம் செலுத்தவேண்டும்.

அதேவேளை, பயங்கரவாத் தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலமானது தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடாது. குற்றம் இழைந்திருந்தாலும், புரிந்திருக்காவிட்டாலும் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும்” – என்றார்.

-tamilcnn.lk

TAGS: