தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை ஏற்றது கூட்டமைப்பு! – போராட்டம் கைவிடப்பட்டது

கடந்த ஒருமாத காலமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை இன்று (சனிக்கிழமை) கைவிட்டுள்ளனர்.

தமது விடுதலைக்கான நிபந்தனைகளை முன்வைத்த தமிழ் அரசியல் கைதிகள், நிராகாரத்துடன் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த நடைபவனி இன்று அநுராதபுரம் சிறைச்சாலையை சென்றடைந்தது. இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்தார்.

இதன்போது, 107 தமிழ் அரசியல் கைதிகளையும் தரம்பிரிக்காது விடுவிக்க வேண்டுமெனவும், அவ்வாறு விடுவிப்பதற்கு ஏதேனும் தடையாக இருக்குமாயின் குறுகிய கால புனர்வாழ்வுடன் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக மாவை சேனாதிராஜா குறிப்பிட்டதாக, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

இதேவேளை, அரசியல் கைதிகளும் தமிழ் மக்களும் விரும்பும் சாதகமான பதில் கிடைக்காவிட்டால் எதிர்வரும் வரவு செலவுத்திட்ட இறுதிக்கட்ட வாக்கெடுப்பில் கூட்டமைப்பினர் எதிராக வாக்களிக்க வேண்டுமென்றும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த கோரிக்கையை மாவை சேனாதிராஜா ஏற்றுக்கொண்டதாகவும், அதன் பின்னரே போராட்டத்தை கைவிட்டனர் என்றும் அருட்தந்தை சக்திவேல் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

-eelamnews.co.uk

TAGS: