தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி 25 நாட்களுக்கும் மேலாக உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். எந்த காரணங்களுமின்றி, விசாரணைகளுமின்றி, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அந்த இளைஞர்கள் தமது வாழ்க்கையையே சிறையில் கழித்து வருகின்றனர். பெரும்பாலான கைதிகள் ஒன்பது ஆண்டுகளை கடந்து சிறையில் இருக்கின்றனர் என்பதுதான் அதிர்ச்சியான செய்தி.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ந்தும் கைதிகளின் விடுதலைக்காக போராடுவதாக கூறுகிறது. மைத்திரிபால சிறிசேன – ரணில் ஆட்சிக்கு ஆதரவளித்த போதும் கடந்த மூன்று ஆண்டுகளாக மைத்திரிபாலவிடம் சம்பந்தர் கைதிகளை விடச்சொல்லி கேட்டு வருகிறார். நெல்சன் மண்டேலாவுக்கு நடிக்கும் மகா நடிகன் மைத்திரி, மௌனம் கலைக்காமல் இருந்து வருகிறார். ஆனால் சிங்கள அரசின் வேறு அமைச்சர்கள், எம்பிக்கள், சிங்கள மக்கள் மைத்திரி சொல்ல வேண்டிய பதிலை சொல்லி விடுகிறார்கள்.
அண்மையில் தலா அத்துகே என்ற சிங்களப் பெண் அமைச்சர் இலங்கையில் அரசியர் கைதிகள் என்று எவரும் இல்லை என்று கூறினார். வேறு சில அமைச்சர்களை வைத்தும் சிங்கள அரசு இதனை சொல்லி வந்திருக்கிறது. இனப்பிரச்சினை காரணமாக அரசியல் ரீதியயாக கைது செய்யப்பபட்ட அப்பாவி இளைஞர்களை வைத்துக் கொண்டு சிங்கள அரசு விளையாடுகிறது. மனைவியர், குழந்தைகள் பெரும் போராட்டத்தில் இருக்க, இந்த அப்பாவி இளைஞர்களுடன் ராஜபக்ச விளையாட்டையும்விட மைத்திரி விளையாட்டு மிகுந்த மோசமாக இருக்கிறது.
உலகிற்கு நல்ல பாடம் எடுப்பவர் மைத்திரி. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போகிறோம். அது பொல்லாத சட்டம் என்றெல்லாம் பாடம் எடுத்தவர்கள் இந்த அரசில் உள்ளனர். ஆட்சியில் இல்லாத காலத்தில் வாக்குகளுக்காக இந்த அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராடியவர்கள் உள்ளனர். இதே ரணில் அரசியல் கைதிகளுக்காகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் போராட்டங்களில் கலந்தும் குரல் கொடுத்தும் வந்தார்.
ஆனால் இன்று எல்லாமே மறந்துவிட்டது. ஆட்சிக்கு வர முதல் மகிந்த எதிரி. ஆட்சிக்கு வந்ததும் மகிந்த நண்பன். தன் இனத்தவன் என்று ஆகிவிட்டது. மகிந்தவை பாதுகாத்துக் கொண்டு, மகிந்தவுக்காக அரசியல் கைதிகளை விடுவிக்க தயங்குகிறோம் என்று சொல்லும் சிங்கள இனவாதத்தை என்ன என்பது? இதற்கு எமது தமிழ் தலைவர்களும் முண்டு கொடுப்பது எத்தனை வேதனை?
கைதிகளின் விடுதலைக்கான உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகவே முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தப் பத்தியில் வலியுறுத்த வேண்டிய முக்கிய விடயம் இப்போதே முன் வைக்கப்படுகிறது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தும் அவர்களின் விடுதலையை வடக்கு கிழக்கு மக்களின் சார்பில் வலியுறுத்தியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தமது வளாகத்தில் இருந்து நடைபயணப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்கள்.
இந்த மாணவர்களின் போராட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சிலர் கிண்டல் அடித்ததும் அறிந்ததே. அவர்களைப் போல போராட்டம் என்ற அரை மணிநேர, ஒரு மணிநேர நாடகத்தை இந்த மாணவர்கள் செய்யவில்லை. தொடர்ச்சியாக வீதி வழியாக நடந்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்து கஷ்டப்பட்டுள்ளார்கள். இதனை கொச்சைப்படுத்துபவர்கள், உண்மையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க முடியாது. அவர்கள் சிங்கள அரசின் கைக் கூலிகளே.
இப்போது எல்லாமே விசித்திரம் ஆகிவிட்டது. டக்ளஸ் தேவானந்தாவும் சந்திரகுமாரும் காணமல் ஆக்கப்பட்டவர்களுக்காக வீதியில் வந்து குரல் கொடுக்கிறார்கள்.தமிழ் மக்களை காணாமல் ஆக்கியதே இந்த நபர்கள்தான். அவர்கள் தமிழ் அரசியல் கைதிகளையும் பொய் வாக்குமூலம் சொல்லி காட்டிக் கொடுத்தவர்கள். இப்போது வந்து இவர்களுக்காக போராடுவதாக சொல்கிறார்கள். ஈழத் தமிழர்களுக்கு எதிரியை விடவும் துரோகிகளே அதிகரித்து வருகின்றனர்.
இதைவிடவும் இன்னொரு விடயத்தை இங்கே இப் பத்தி வலியுறுத்துகின்றது. நேற்றைய தினம் மாணவர்களின் நடைப் போராட்டம் முடிவுக்கு வந்தபோது, அநுராதபுரம் சிறைச்சாலை வாசலில் நின்ற சிங்கள காடை இளைஞர்கள் நடந்து கொண்ட விதம் பற்றி தமிழ் தலைவர்கள் வாய் திறக்கவில்லை. பிறகு எப்படி சிங்கள அரசு இதனை தடுக்கும்? அந்த சிங்கள இளைஞர்கள் தம்மைப் போலவே தமிழ் இளைஞர்களும் இந்த நாட்டு பிரசைகள் என கருதவில்லை.
அந்நிய நாட்டிலிருந்து தமது எதிரிப் படைகளை கொண்டு வந்து சிறையில் இட்டதைப்போலவும் அந்த நாட்டிலிருந்து வந்த இளைஞர்களை துரத்தியடிப்பதுபோலவுமே அவர்கள் கூச்சலிட்டனர். துரத்தியடித்தனர். தமிழ் மாணவர்களை கடுமையாக திட்டினார்கள். கடுமையாக மிரட்டினார்கள். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி அனுராதபுரத்திற்கு வர வேண்டாம் என்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளார்கள்.
சிங்கள அரசே, இனியும் நல்லிணக்கம் பேசாதே. நீங்களும் நாங்களும் ஒரு நாட்டில் வாழ முடியாது. எங்களை விட்டுவிடு. நாங்கள் எங்கள் நாட்டில் வாழ்கிறோம். எங்களை சிறையில் அடைத்து கொல்லாதே. உனக்கு நாங்கள் பயங்கரவாதிகளாகவே தெரிவோம். புலிகளாகவே தெரிவோம். நீங்கள் வேறு நாடு. நாங்கள் வேறு நாடு. நாங்கள் தமிழீழம். நீங்கள் ஸ்ரீலங்கா. உங்களுக்கும் எங்களுக்கும் ஒருபோதும் சரிவராது. எங்களை அடிமைப்படுத்தி, சிறையில் அடைத்து உங்கள் சிங்கள தேச ஆட்சியை நடத்தாதீர்கள்.
-http://eelamnews.co.uk