தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக நாளை நடத்தப்படவுள்ள பேச்சுக்களின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு தீர்வை வழங்குவார் என்று நம்புவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“சிறிலங்கா அதிபருடன் பேச்சு நடத்திய போது, அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு வரும் 17ஆம் நாள் ஒரு தீர்வை வழங்குவதாக உறுதியளித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அதிபரைச் சந்தித்த போது, இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நீதியமைச்சர் தலதா அத்துகோரளவுடன் கலந்துரையாடுவதாகவும், அதன் பின்னர் நாளை 17ஆம் நாள் ஒரு தீர்வை வழங்குவதாகவும், சிறிலங்கா அதிபதி கூறினார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துடன் சிறிலங்கா அதிபருக்கு உடன்பாடு உள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான தமது கொள்கையை சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூறியுள்ளது.
அந்த வாக்குறுதிகளை விட, சிறிலங்கா அதிபர் குறிப்பிட்ட நாளில் தீர்வை வழங்குவதாக கூறியுள்ளார். எனவே, சாதகமான முடிவுகளை நாங்கள் எதிர்பார்க்க முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-puthinappalakai.net