”இலங்கையில் வாழும் இந்திய மரபினர் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்”

இலங்கையின் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டை கிராமத்துக்கு வடக்கு மாகாணசபை அவைத்ததலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையிலான மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்துள்ளனர்.

வவுனியா வடக்கில் மிக பழைய கிராமமான காஞ்சிரமாட்டை கிராமத்தில் வாழ்ந்த சுமார் 300 குடும்பத்தினர் நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவிற்கும் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெயர்ந்திருந்தனர்.

இந் நிலையில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இக் கிராம மக்களுடன் உள் நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டை கிராமத்தில் குடியேற்றப்பட்டனர்.

எனினும் அவர்கள் அங்கு வாழ்வதற்கு இலங்கையின் வன இலாகாவினர் அனுமதி மறுத்து வந்திருந்ததுடன் குறித்த பகுதி வன வளத்திணைக்களத்திற்குரிய பகுதி என தெரிவித்து குடியேறிய மக்களுக்கு தொடர்ச்சியாக இடையூறுகளை ஏற்படுத்தி வந்திருந்தனர்.

இதன் காரணமாக அம் மக்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களும் இடைநடுவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

"இலங்கையில் வாழும் இந்திய மரபினர் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்"

குறித்த விடயம் தொடர்பாகவும் வவுனியாவில் வனவளதிணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாக நேரில் வந்து ஆராயவேண்டும் என மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கடந்த 133 வது வடக்கு மாகாண சபை அமர்வில் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்திருந்தார்.

அதற்கமைவாகவே மாகாணசபை உறுப்பினர்கள் குழு இன்றையதினம் காஞ்சூரமோட்டைக்கு விஜயம்செய்ததுடன் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் கேட்டு அறிந்ததுடன் அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வட மாகாணசபையின் அவைத்தலைவர் சி. வி. கே. சிவஞானம் தலைமையில் வடக்கு விவசாய அமைச்சர் க. சிவநேசன், உறுப்பினர்களான சபா. குகதாஸ், எம். கே. சிவாஜிலிங்கம், இ. ஜெயசேகரன், அ. பரஞ்சோதி, ப. அரியரட்ணம், கே. தர்மலிங்கம், வ. கமலேஸ்வரன், ஆ. புவனேஸ்வரன், து. ரவிகரன், சு. பசுபதிப்பிள்ளை,ஜி.ரி.லிங்கநாதன் ஆகிய உறுப்பினர்கள் அடங்கிய குழு குறித்த பகுதிக்கு வருகைதந்து நிலைமைகளை பார்வையிட்டிருந்தனர்.

இதன்போது அப்பகுதியில் இடிந்து போயுள்ள நாவலர் பண்ணை அரசினர் கலவன் பாடசாலையினையும் பார்வையிட்டிருந்ததுடன் அதனை மீள் இயக்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பது தொடர்பாகவும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துரையாடினர்.

இதன்போது கருத்து தெரிவித்திருந்த வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் குறித்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான பல அடையாளங்கள் உள்ளது. எனினும் வன வளத்திணைக்களம் மக்களை இங்கு குடியேற தடை விதித்து வருகின்றனர். இது தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்தி இந்தியாவில் இருந்து வந்த மக்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக இந்தியாவின் கவனத்திற்கும் கொண்டு செல்வோம் என தெரிவித்தார். -BBC_Tamil

TAGS: