வட மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன், தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பில் தமிழ் மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் ஒன்றுகூடல் எதிர்வரும் 24ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு யாழ். நல்லூர் ஆலய வடக்கு வீதியில் அமைந்துள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,
தமிழ் மக்களின் தற்போதைய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது.
இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்கான வழித்தடம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும், இதில் தமிழ் மக்கள் பேரவையின் வகிபாகம் தொடர்பிலும் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்தக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விசேட உரையாற்றவுள்ளதோடு, தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும் தமிழ் மக்களுக்கு அறிவிக்கவுள்ளார்.
இதேநேரம், சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் ‘போருக்குப் பின்னரான தமிழ் சமூகத்தில் பிரதிநிதித்துவ அரசியல் மற்றும் மக்கள் அணிதிரள் அரசியல் ஆகியவற்றின் வகிபாகமும் தொடர்புறு நிலையும்’ என்ற தலைப்பில் உரையாற்றுவார்.
மேற்படி ஒன்றுகூடலுக்கு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பொதுமக்கள், பொதுஅமைப்புக்கள், தொழில் சங்கங்கள் கல்விச் சமூகத்தினர் ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர் – யுவதிகள் போன்ற அனைத்து தரப்பினரையும் கலந்து பங்களிக்குமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-athirvu.in