இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு கோரிக்கை: மாணவர்கள் போராட்டம்

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஒருநாள் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், அங்கு கல்வி கற்கும் இருபால் மாணவர்கள் கலந்து கொண்டு, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கைக்கு ஆதரவாக குரலெழுப்பினர்.

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிற்துறையான தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தற்போது ஒருநாள் அடிப்படைச் சம்பளமாக 500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருட்களுக்கான விலையேற்றம் ஆகியவற்றினைக் கருத்திற்கொண்டு, தமக்கான ஒருநாள் அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் வழங்க வேண்டுமென, தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகள் சம்மேளனத்துக்கும் இடையில் மேற்படி சம்பள விவகாரம் தொடர்பில், மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தன.

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

இந்த நிலையில்அதிகபட்டசமாக தொழிலாளி ஒருவருக்கு ஒருநாள் அடிப்படைச் சம்பளமாக 600 ரூபாவையே வழங்க முடியும் என்று, பெருந்தோட்ட முதலாளிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்க மறுத்துள்ள தோட்டத் தொழிலாளர்கள், தமது 1000 ரூபாய் சம்பளக் கோரிக்கையினை முன்வைத்து, தங்களின் பிரதேசங்களில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள், இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

இதே வேளை, இன்றைய தினம் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும், தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பளக் கோரிக்கைக்கு ஆதரவாக கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டிருந்தனர்.

மலையகத்திலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்திய வம்சாவழியினர் என்பது குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil

TAGS: