மலையக தமிழ் அரசியல் தலைவர்கள் தோட்ட தொழிலாளர்களின் உரிமைக்காக உண்மையாக போராட முடியாதவர்களாக உள்ளனர்

பெரும்பாலான மலையக தமிழ் அரசியல் தலைவர்கள் பெருந்தோட்டங்களின் உரிமையாளர்களாக இருப்பதால் தோட்ட தொழிலாளர்களின் உரிமைக்காக உண்மையாக போராட முடியாதவர்களாக உள்ளனர். திருகோணமலை நகராட்சி மன்ற உறுப்பினர் நந்தன் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை (24) திருகோணமலையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
அரச சேவையிலுள்ள சாதாரண தொழிலாளி மாதச்சம்பளமாக முப்பதாயிரம் ரூபாவுக்கும் மேல் பெற்றுக் கொள்ளும் போது தோட்ட தொழிலாளியின் மாத வருமானம் சராசரியாக அரைப்பங்கு அளவிலேயே உள்ளது. அரச சேவையிலுள்ள தொழிலாளிக்கு வருடாந்த சம்பள உயர்வுண்டு.

ஆனால் மழையும், வெயிலையும், பனியையும் பொருட்படுத்தாது மலையில் ஏறி அட்டைக் கடிக்கும், பாம்புக் கடிக்கும் இலக்காவதுடன் குளவிக் கொட்டுக்கும், சிறுத்தை கடிக்கும் அஞ்சி தொழில் செய்யும் நாட்டின் பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித்தந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க மறுப்பது என்ன நீதி…..? என்ன தர்மம்….? ஆயிரம் ரூபாவை வழங்கினாலும் வேலை செய்யும் நாட்களுக்கு மட்டுமே என்ற போது பத்தாயிரமோ, இருபதாயிரமோ தான் கிடைக்கும்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமது உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையே கேட்கின்றனர். பாடுபட்டளவுக்கு தோட்டத் தொழிலாளர்களிற்கு சம்பளமில்லை, வாழ்வதற்கு ஏற்ற குடியிருப்புகள் இல்லை, போதுமான சத்துள்ள உணவுக்கு வழியில்லை, பிள்ளைகளின் கல்வி, உடைகளுக்கான போதிய பணமில்லை, போக்குவரத்து சுகாதார வசதிகளின்மை, இவ்வாறான வசதிகளில்லாத போதிலும் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட அவர்கள் வாழ்வு வளமடையவில்லை.

காரணம் பெரும்பாலான மலையக தமிழ் அரசியல் தலைவர்கள் பெருந்தோட்டங்களின் உரிமையாளர்களாக இருப்பதனால் தொழிலாளர்களின் உரிமைக்காக உண்மையாக போராட முடியாதவர்களாக உள்ளனர் இதுவே உண்மை. எனினும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தோட்ட தொழிலாளர்களின் 1000 சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து முன்னெடுக்கும் ஜனநாயக போராட்டங்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் நடவடிக்கையாக அமையும் என தெரிவித்துக் கொள்கின்றேன்.

-tamilcnn.lk

TAGS: