“அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும். இதுவரை இலங்கை மூன்று அரசியலமைப்புக்களை நிறைவேற்றியுள்ள போதிலும், அவற்றில் ஒன்றுகூட சமூக ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கவில்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக, இரத்தினபுரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும். இதுவரை நாம் 3 அரசமைப்பைக் கொண்டிருந்த போதிலும், ஒரு சமூக ஒப்பந்தத்தைக் கூடக் கொண்டிருக்கவில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தெற்கைச் சேர்ந்த 6 முதலமைச்சர்களால் பரிந்துரைக்கப்பட்ட அதிகார பரவலாக்க திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் 7வது முதலமைச்சர், ஆளுநர் பதவியை இல்லாதொழிப்பது தொடர்பில் கூறியிருந்தார். எனினும் அதனை நாங்கள் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கவில்லை.
எனவே முன்மொழியப்பட்ட சமூக ஒப்பந்தத்தின் பிரதான நோக்கம், பிரிக்கப்படாத ஒரே நாட்டினுள் இலங்கையில் வசிக்கும் சகலருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே ஆகும்.
இந்த நாட்டில் கூட்டாட்சியை முதலில் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் அவ்வாறு அமையப்பெற்ற பிரதான இரண்டு கட்சிகளும் அரசாங்கத்தில் இருப்பது இதுவே முதல்முறையாகும். அதுமட்டுமன்றி சகல அரசியல் கட்சிகளும் இதில் பங்கேற்றுள்ள நிலையில், இந்த சந்தர்ப்பத்தை ஒருபோதும் தவறவிடக்கூடாது.” என்றுள்ளார்.
-4tamilmedia.com