“முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனிக்கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால், அவருடன் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை.” என்று முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வில் தனது நிறைவுரையை ஆற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைப்பதற்கு நான் தயாராக இல்லை. அண்மையில் பருத்தித்துறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய சி.வி.விக்னேஸ்வரன், எதிர்கால அரசியலில் சிவாஜிலிங்கம் தன்னுடன் இணைந்து பயணிப்பார் என கூறியுள்ளார். இதே விடயத்தை நேரில் சந்திக்கும்போதும் கூட முதலமைச்சர் ஒருதடவை கூறினார்.
ஆனால் நான் அவருக்கு அப்போது கூறியதையே இப்போதும் கூறுகிறேன். தமிழ் மக்களுக்கு இப்போது தேவையானது அடுத்த முதலமைச்சரோ, மாகாண சபை உறுப்பினர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்ல. தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றே சமகால இன்றியமையாத தேவையாகும்.” என்றுள்ளார்.
-4tamilmedia.com