ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரும் யோசனை இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி முடிவு செய்துள்ளது.
அலரி மாளிகையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவரே பிரதமர் பதவியை வகிக்க முடியும். அந்தப் பெரும்பான்மை எனக்கு இருக்கின்றது.
அரசமைப்புக்கு அமைய தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமரை பதவி விலக்க இரண்டு முறைகளே உள்ளன அதாவது பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் அல்லது பிரதமர் சமர்பித்த வரவு செலவு திட்டம் தோல்வியடைந்தால் மாத்திரமே அவரை பதவி விலக்க முடியும்.
அப்படியும் இல்லாவிட்டால் பிரதமர் தனது பதவியில் இருந்து தாமாகவே விலக வேண்டும். தற்போது சட்டபடியான பிரதமர் பதவியை நான் வகிக்கின்றேன். நாடாளுமன்ற பெருபான்மை எனக்கு இருக்கின்றது. அவ்வாறு பெரும்பான்மை இல்லாவிட்டால் நான் பதவிவிலக தயார்.
இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அவ்வாறு பதவி விலகியுள்ளேன். தற்போதைய பிரச்சினையை நாடாளுமன்றத்தின் ஊடாகவே தீர்க்க முடியும். இந்த சூழ்நிலையில் பொது மக்கள் மத்தியில் தனக்கு நம்பிக்கை இல்லை என உணர்ந்த படியாலேயே நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவது தொடர்பில் யோசனை உள்ளது. முதலில் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என கூறினார்.
-athirvu.in