நாட்டில் பெரும் இரத்த ஆறு பெருக்கெடுக்கலாம்; விடுத்துள்ள எச்சரிக்கை!

சிறிலங்கா அரசியலில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள பெரும் குழப்பத்திற்கு நாடாளுமன்றத்திற்குள் தீர்வு காணாது அதனை வெளியில் எடுத்துச் சென்றால் நாட்டில் பெரும் இரத்த ஆறு பெருக்கெடுக்கலாம் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

இதனால் இனியும் தாமதிக்காது நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்திருக்கின்றார். இதற்கு மகாநாயக்கத் தேரர்கள் உரியவர்களுக்கு பணிப்புரை விடுக்க வேண்டும் என்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று அவசரமாக கண்டிக்கு விஜயம் செய்து மகாநாயக்கத் தேரர்களை சந்தித்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தி, மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கண்டி மல்வது மகாநாயக்கத் தேரர்கள், அஸ்கிர பீட மகாநாயக்கத் தேரர் மற்றும் துணை மகாநாயக்கர்களையும் தனித்தனியே சந்தித்து, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு அறிவுறுத்துமாறும் சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“ இரண்டு தரப்பினரும் தமக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறி வருகின்றனர். அதனால் நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதற்கு வாய்ப்பு அளிப்பதன் ஊடாக புதிய பிரதமரை தெரிவு செய்துகொள்ளமுடியும். நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தது தொடர்பிலோ, நாடாளுமன்றத்தை கூட்டுவதோ குறித்த அரசியல் யாப்பு ஏற்புத் தன்மைகள் தொடர்பில் எனக்கு பிரச்சனையும் இல்லை.

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதே எனது அவசர தேவையாக இருக்கின்றது. அதற்காகவே மகாநாயக்கத் தேரர்களையும் சந்தித்து அவர்களுக்கு தற்போதைய நிலமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றேன். இதற்கமைய அவர்கள் தமது கடமையை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகின்றேன்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை நாடாளுமன்றத்திற்குள் தீர்த்துக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்ற நிலையில், அதனை தடுத்து நாடாளுமன்றத்திற்கு வெளியில் எடுத்துச்செல்ல சிலர் முற்படுவதாகவும் சபாநாயகர் குற்றம்சாட்டினார்.

துரதிஸ்டவசமாக அவ்வாறான நிலமையொன்று நாட்டில் ஏற்படுமானால் ஏராளமானோரின் உயிர்களை இழக்க நேரிடும் என்றும் சபாநாயகர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

“ மிகவும் முக்கியத்துவம் மிக்க தேசிய கடமையை நிறைவேற்றுவதற்காகவே நான் இன்று இங்கு வந்தேன். எமது நாட்டில் இன்று அரசியல் ரீதியாக ஸ்திரமற்ற நிலமையொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டு இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு நாடாளுமன்றத்திற்கு பாரிய பொறுப்பொன்று இருக்கின்றது.

நாடாளுமன்றத்தின் ஊடாக இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் பெரும் ரத்த ஆற்றை பெருக்கெடுக்க வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சில ஊடகங்களை பலவந்தமாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றனர். இந்த முறைகேடான நடவடிக்கைகள் காரணமாக எமது நாட்டிற்கு சர்வதேச அரங்கில் பெரும் அபகீர்த்திக்க முகம்கொடுக்க நேரிட்டிருக்கின்றது.

இந்த நிலையில் குறித்த பிரட்ச்சனையை நாடாளுமன்றத்திற்குள் தீர்த்துக்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியன அறிவுறுத்தியுள்ளன. தற்போதைய பிரச்சனைக்கு தியவன்னா ஓயாவிற்குள் தீர்த்துக்கொள்ள முடியும்.

இதனை அதற்கு வெளியில் கொண்டுசென்றால் பாரிய உயிர் இழப்புக்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது போய்விடும். இதற்காகவே ஜனாதிபதியிடம நேற்றைய தினம் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்தேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

-athirvu.in

TAGS: