விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியாக இருந்தவரும், மகிந்தவின் தீவிர அபிமானியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித்தலைவராக இருந்தவருமான ‘கருணா அம்மான்’ என்று அறியப்பட்ட வினாயகமூர்த்தி முரளீதரன், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது முகப்புத்தகத்தில் ஒரு பதிவினை இட்டிருந்தார்.
‘அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கை தீவில்; தீடிர் சம்பவங்கள் இடம்பெறும். அப்பொழுது தெரியும் என் அருமை புலம்பெயர் தமிழர்களுக்கு’ – இதுதான் கருணா தனது முகப்புத்தகத்தில் மேற்கொண்டிருந்த அந்தப் பதிவு.
2018 ஓகஸ்ட் 31ம் திகதி அவர் இந்தப் பதிவினை மேற்கொண்டிருந்தார்.
கருணாவின் அந்த முகப்புத்தகப் பதிவினை அப்பொழுது யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால், கருணாவின் அந்தப் பதிவு வெளியாகி இன்றைக்கு சுமார் ஒரு மாதமும் 26 நாட்களுமே ஆகிவிட்டிருந்த நிலையில் முக்கியமான இரண்டு காட்சி மாற்றங்கள் இலங்கைத்தீவில் நடைபெற்றுள்ளன.
1.விக்னேஸ்வரனின் புதிய கட்சி அறிவிப்பு
2.மகிந்த பிரதம மந்திரியாக திடீரென்று நியமிக்கப்பட்டது
கருணா கூறியதன்படி இந்த இரண்டு காட்சி மாற்றங்களுமே புலம்பெயர் தமிழர்களின் கோணத்தில் இருந்து பார்க்கின்ற பொழுது, அவர்களுக்கு சங்கடங்களை விளைவிக்கும்படியாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஏன் என்று பார்ப்போம்:
26.10.2018 அன்று இலங்கையில் ஒரு அதிரடி ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மகிந்த ராஜபக்ஷவை பிரதம மந்திரியாக நியமித்திருக்கின்றார் சிறிலங்காவின் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன.
வல்லரசு நாடொன்றின் பலமான பின்னணி இல்லாமல் இப்படி ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய துணிவு நிச்சயமாக மைத்திரிக்கு கிடையாது.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய அந்த வல்லரசு எது என்கின்ற விடயம் (பரகசியம்) ஊடகங்களில் பெரிதாக இதுவரை பேசப்படவில்லை. ஆனால், இந்த ஆட்சிமாற்றத்தை இந்தியாவே மேற்கொண்டது என்கின்றதான பேச்சு அரசியல் வரட்டாரங்களில் அதிகம் தற்பொழுது பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. அப்படிப் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்ற விடயங்கள் பற்றித்தான் இங்கு நாங்கள் சுருக்கமாகப் பார்க்க இருக்கின்றோம்.
‘வெல்ல முடியாத யுத்தம்’ என்று சிங்கள மக்கள் உறுதியாக நம்பிய ஈழ யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, சிங்கள மக்கள் மத்தியில் ஒரு நவீன துட்டகெமுனுவாக வலம் வந்துகொண்டிருந்த மகிந்த ராஜபக்ஷவை அடுத்த இரண்டு தசாப்த காலத்திற்கு ஆட்சியைவிட்டு அகற்றவே முடியாது என்றுதான் அந்தக் காலகட்டத்தில் அனைவரும் நம்பிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட மகிந்தவை பெரிதாக யாருக்குமே தெரியாத, அரசியல் கவர்ச்சி அற்ற மைத்திரியைக்கொண்டு தோற்கடித்த பெருமை இந்தியாவையே சாரும். மேற்குலகின் ஆசியுடன் இந்தியா நேரடியாகக் களத்தில் குதித்து அந்தச் சாதனையை நிறைவேற்றியிருந்தது.
மகிந்த சீனாவின் பக்கம் சாய்ந்து நின்றது, இந்தியாவின் கைக்குள் முற்றாக வரத் தயங்கியது ஒரு காரணம்.
ஆனால், அண்மையில் சாதாரண ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இந்தியா சென்ற மகிந்த இந்தியப் பிரதமர் உட்பட இந்திய ஆட்சியாளர்களை, உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடியதும், அங்கு மகிந்தவுக்கு ஒரு அரச தலைவருக்கான மரியாதை வழங்கப்பட்டிருந்ததும், மகிந்த சீனாவின் பக்கம் இருந்து இந்தியாவின் கைக்குள் விழுந்துவிட்டார் என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது. (பார்க்க வீடியோ இணைப்பு)
அந்த வீடியோவில் மகிந்தவுடன் துணைநிற்கக்கூடிய தமிழ் அரசியல் தலைவர் பற்றி இந்தியாவின் சிரேஷ;ட தலைவர் ஒருவர் பிரஸ்தாபிப்பதையும் கேட்கக்கூடியதாக இருக்கின்றது.மகிந்த நேற்றைய தினம் பிரதமராக நியமிக்கப்பட்ட உடனேயே குறிப்பிட்ட அந்த தமிழ் அசியல்வாதி தனது ஆதரவை மகிந்தவுக்கு வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.மகிந்தவுக்கான ஆதரவு அணியை இந்தியாவில் வைத்து இந்தியாவே நிரல்படுத்தியிருந்தது இதிலிருந்து தெரியவருகின்றது.
மகிந்த என்கின்ற குதிரையை இந்தியா களமிறக்குவதற்கு அதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன.
முதலாவது, மேற்குலகின் செல்லப்பிள்ளையான ரனிலை இந்தியா தனது கைக்குள் முற்றாகப் போடுவது கடினம். பெரிதான மக்கள் செல்வாக்கு இல்லா ரனிலை நம்பி அதிக காலம் ஓடவும் முடியாது.ஆனால், மகிந்த என்பது இந்தியாவைப் பொறுத்தவரை நன்றாக ஓடக்கூடிய குதிரை. மகிந்தவுக்கு நல்ல மக்கள் செல்வாக்கு இருக்கின்றது. இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் தேர்தல் முடிவுகள், அதிகரித்துவரும் மகிந்த செல்வாக்கை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றது.
அடுத்ததாக, மகிந்த மேற்குலகின் அடிவருடி அல்ல. சீனாவை மாத்திரம் அவர் விவாகரத்து செய்துவிட்டால், இந்தியாவுடன் கைகோர்ப்பதற்கு சிறந்த ஒரு தலைவர். இந்தியா மகிந்தவை தனது பக்கம் இழுத்து களம் இறக்குவதற்கு இதுதான் முக்கிய காரணம்.
இந்த இடத்தில் முக்கியமானதொரு கேள்வி எழலாம்.தமிழர் தரப்பை இந்தியா எப்படி கையாளப்போகின்றது?
அப்படியான கையாழுதலையும் இந்தியா ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது என்றுதான் கூறவேண்டும்.கொழும்பில் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் முன்நாள் வடமாகான முதலரமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தனிக்கட்சி ஒன்றை உருவாக்கிய செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. விக்னேஸ்வரனின் அந்த கட்சி அறிவிப்பின் போது இந்தியாவின் தீவிர விசுவாசிகள் என்று நன்கு அறியப்பட்ட, சுரேஸ் பிரேமச்சந்திரன், மறவன்புலம் சச்சிதானந்தன், ஊடகவியலாளர் வித்தியாதரன் போன்றவர்கள் விக்னேஸ்வரனுக்கு மிக நெருக்கமாக அமர்ந்திருந்தது, விக்னேஸ்வரின் கட்சி உருவாக்கத்தின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்கின்ற ரகசியத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
கருணா தனது முகப்புத்தகப் பதிவில் ‘புலம்பெயர் தமிழ்கள்’ பற்றி குறிப்பிட்டிருந்த விடயம் இந்த இடத்தில்தான் காட்சிக்கு வருகின்றது.
புலம்பெயர் அமைப்புக்களின் ஒட்டுமொத்தமான வட கிழக்கு அரசியல் நகர்வு என்பது முழுக்க முழுக்க கஜேந்திரக்குமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை அடிப்படையாக வைத்துத்தான் வடிவமைக்கப்பட்டு வருகின்றது. விக்கியின் தனித்துவமான வருகையோ, த.தே.கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளைச் சிதறடித்து, த.தே.ம.முன்னணியை பெரிதும் பலவீனப்படுத்தக்கூடியது.
இது புலம்பெயர் அமைப்புக்களுக்கு ஒரு அரசியல் வெற்றிடத்தை வடக்கு கிழக்கில் பாரிய அளவு உருவாக்கிவிடும்.
அத்தோடு, மகிந்த தரப்பு ஒரு பலமான ஆட்சியை இலங்கையில் அமைக்கும் பட்சத்தில், 2015 இற்கு முன்னர் போன்ற ஒரு இறுக்கத்தை இலங்கையில் கொண்டுவந்து, புலம்பெயர் தமிழர்களின் வருகை, முதலீடுகள் உட்பட அவர்களின் செல்வாக்கை முற்றாகவே வடக்கு கிழக்கில் தடுத்துவிடவும் முடியும்.
இந்தியாவின் மத்திய பா.ஜ.க அரசைப் பொறுத்தவரை, தமிழர்கள் என்பவர்கள் பிரச்சனைக்குரியவர்கள். தீவிரவாதிகள். சமூகவிரோதிகள். தேசவிரோதிகள். தமிழ் நாட்டுத் தமிழர்களை மாத்திரமல்ல, ஈழத்தமிழர்களையும் அவர்கள் அப்படித்தான் பார்க்கின்றார்கள். குறிப்பாகப் புலம்பெயர் தமிழ்கள் என்பவர்கள் இந்தியாவும் ஆழும் சக்திகளால் மிகவும் சந்தேகத்துடனேயே பார்க்கப்பட்டு வருகின்றார்கள். எனவே தமிழ் தரப்பினூடாக இந்தியாவுக்கு நன்மையோ அல்லது பாதுகாப்போ கிடைக்கமாட்டாது என்பது அவர்களது அண்மைக்கால பார்வையாக இருக்கின்றது.
இந்தியா தனது தென் பிராந்தியத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்தை, சாட்சிக்காரனிடம் இருந்து பெறுவதை விட சண்டைக்காரனிடம் இருந்து பெறுவதற்கு தீர்மாணித்துவிட்டது போன்று தெரிகின்றது.
மகிந்தவை தன்பக்கம் இழுத்து, அவரைப்பலப்படுத்தி களமிறக்குவதன் மூலம், சீனா, மேற்குலகம், தமிழ் தரப்பு, புலம்பெயர் தமிழர்கள்.. என்று பல தரப்புக்களை சமாளிக்கலாம் என்று நினைக்கின்றது போலும் இந்தியா.
சரி, இதெல்லம் கருணாவுக்கு எப்படி முன்கூட்டியே தெரியும்?
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணா றோவின் கண்ணாணிப்பில் இந்தியாவில் தங்கியிருந்தது, றோவின் கீழ் செயற்பட்ட ஈ.என்.டீ.எல்.எப். கருணா அணியுடன் இணைந்து செயற்பட்டது, கருணா அணியில் இந்தியப் பிரஜைகள் நேரடியகாக் களமாடியது புலிகளால் நிருபிக்கப்பட்டது அனைவரும் அறிந்த விடயம்.
கருணா தனது முகப்புத்தகத்தில் கூறியபடி மேலும் ‘திடீர் சம்பவங்கள்’ ஏற்படுகின்ற பொழுது அந்த விடயங்களை விலாவாரியாகப் பார்க்கலாம்.
-http://eelamnews.co.uk