மகிந்தவை விட்டு இன்னும் 15பேர் வருவார்கள்! என்கிறது ஐ.தே.க

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மனுஷ நாணயக்கார அப்பதவியிருந்து இராஜினாமா செய்து, மீளவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும், ஜனநாயக விரோத செயற்பாடுகளை முறியடிப்பதற்கு எம்மோடு இணைந்து எமக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளமையானது அரசியலமைப்பினையும், ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக நாம் மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றியாகும் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்ததுள்ளார்.

மேலும் மனுஷ நாணயக்காரவைப் போன்று இன்னும் 15 பேர் வரையில் எம்மோடு இணைந்து கொள்வதாக உறுதியளித்துள்ளனர் என அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார். அத்துடன் தத்தமது கட்சிகளின் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கான கட்சித்தாவல்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், நேற்றையதினம் மனுஷ நாணயக்கார புதிய அரசாங்கத்தில் தான் பெற்றுக் கொண்ட அமைச்சுப்பதவியினை இராஜினாமா செய்துள்ளதுடன், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாகவும், ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படுவதற்கு தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பதவியேற்ற புதிய அமைச்சரவையில் ஜக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மனுஷ நாணயக்கார எம்.பி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியினால் இன்று செவ்வாய்கிழமை அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அஜித் பி பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

-eelamnews.co.uk

TAGS: