நாட்டில் அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் நாளை புதன்கிழமை சந்திப்பிற்கு வருமாறு ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கமைய கட்சியின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் தாம் சந்திப்பிற்குச் செல்லவுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்களை பேசுவதற்காக ஐனாதிபதி எங்களை அழைக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டும் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை நேரடியாக தெரிவிப்பதற்காகவே ஐனாதிபதியுடனான சந்திப்பிற்குச் செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கந்தரோடையில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்றுத் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..
நாளையதினம் தன்னைச் சந்திக்க வருமாறு ஐனாதிபதி எங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். இதற்கமைய கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில்; பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரைச் சந்திக்க இருக்கின்றனர்.
இன்றைக்கு நாட்டில் அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் ஐனாதிபதி சந்திப்பிற்கு வருமாறு எம்மை அழைத்திருக்கின்ற போதிலும் தமிழ் மக்களின் நலன்சார்ந்த விடயங்களைப் பேசுவதற்கான அழைப்பாக நாம் கருதவில்லை. இதனை நாம் அறிந்து கொண்டாலும் ஐனாதிபதியின் அழைப்பை ஏற்று கூட்டமைப்பு நிச்சயமாக பேச்சுவார்த்தைக்குச் செல்லும்.
இன்றைய நெருக்கடியான நிலைமையில் மகிந்த மற்றும் ரணில் என இரு தரப்பினரும் எங்களது கட்சியுடன் பேசியிருக்கின்றனர். அதே போன்று தற்போதும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் மகிந்த தரப்பினர் எங்களுடன் பேசிய விடயங்களை பொது வெளியில் தெரிவித்தால் பெரும் குழப்பங்களே ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.
அவ்வாறு; நாட்டின் ஜனாதிபதியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்தும் சந்திப்பில் தமிழ் மக்கள் நலன் சார் விடயங்கள் தொடர்பில் உடன்பாடுகள் அல்லது எழுத்து மூலமான உறுதிமொழிகள் வழங்கப்படும் பட்சத்தில், அரசியல் அமைப்புக்கு முரனான பிரமர் நியமனத்திற்கு எதிராக வாக்களிப்பதாக கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவில் மாற்றங்கள் ஏதும் ஏற்படுமா என அங்கிருந்த ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளயிக்கையில்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பில் கூட்டமைப்பு தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் பேசும். அதன் பின்னர் அது தொடர்பான உறுதிமொழிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலில் வழங்கட்டும் அதன் பின்னர் முடிவில் மாற்றம் ஏற்படுத்துவதை பற்றி பார்ப்போம்.
ஜனாதிபதி உறுதிமொழி வழங்குவார் என்ற ஊகத்தை மட்டும் வைத்துக் கொண்டு கூட்டமைப்பு சட்டத்திற்கு முரனான பிரதமர் நியமனத்தை எதிர்க்கும் என்று எடுத்திருக்கும் முடிவை மாற்றுவோம் என்று கூற முடியாது. அவ்வாறு ஊகங்களில் பதில்களைச் சொல்லுவோமானால் அரசியலில் அது பெரிய பிழையாக மாறிவிடும்.
ஆகவே எம்மைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி கூட்டமைப்பை பேச அழைத்திருப்பது தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் பேசுவதற்காக அல்ல. அது குறித்து கூட்டமைப்புக்கு தெரியும். ஆனால் அவருடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தத் தான் எண்ணியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் பேசுவதற்கு கூட்டமைப்பை ஜனாதிபதி அழைக்கவில்லை என்று தெரிந்து கொண்டும், என்ன விடயங்களை பேசுவதற்காக கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்திக்கின்றது என்று அங்கிருந்து ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் கேள்வி எழுப்பினர்.
இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலேயே அவரை சந்திப்பதற்கான கூட்டமைப்பு செல்கின்றது. அதைதவிர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை ஏன் உங்களுடைய பக்கம் இழுத்தீர்கள் என்று நேரில் கேட்க வேண்டிய தேவையும் கூட்டமைப்புக்கு உள்ளது.
மஹிந்த சார்பானவர்கள் தொடர்ந்து கூட்டமைப்புடன் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். கூட்டமைப்பின் தலைவருடன் மட்டுமல்லாமல் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பேசும் விடயங்களை பொது வெளியில் சொன்னால் குழப்பங்கள் ஏற்படும். இதனால் ஜனாதிபதியுடன் நாளை புதன்கிழமை சந்தித்து பேசிவிட்டு சகலதையும் வெளிப்படையாக சொல்வோம் என்றார்.
-athirvu.in