கடைசி சமரச முயற்சியையும் நிராகரித்தார் மைத்திரி – மனோ கணேசன்

அரசியல் நெருக்கடியைத் தீர்க்க நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட கடைசி முயற்சிகளையும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது முகநூலில் அவர், இதுகுறித்து தகவல்களை வெளியிட்டுள்ளார்.

“தடாலடியாக பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்ட 26 ஆம் நாள் முதல் உருவாகி இருந்த அரசியல் நெருக்கடியை தீர்க்கும் முகமாக, சில முயற்சிகள் நேற்று எடுக்கப்பட்டன.

ரணில் மீண்டும் பிரதமர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டால், அதை எக்காரணம் கொண்டும் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என மைத்திரி அடம் பிடித்தார்.

அது ஜனநாயக விரோதம் என்றாலும், மைத்திரி அதிபர் பதவியில் இருப்பதால், அவரை ஏதாவது ஒரு முறையில் அனுசரிக்க வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டது.

14ஆம் நாள் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணி வாக்கெடுப்பில் வெற்றிபெறும் பட்சத்தில், புதிய பிரதமராக பதவியில் நியமிக்கப்பட போகின்றவர் யார் என்பது தொடர்பில் உரையாடுவோம் என்று நேற்றுமுன்தினம் காலை அவரிடம் சொல்லப்பட்டது.

அதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்களுடனும் பேசப்பட்டது. அவர்களும் இணங்கினர்.

அவசியமானால், நெருக்கடியை தவிர்க்க வேறு ஒருவரை பிரதமராக நியமிக்க ஆலோசிப்போம் என்று ஐதேக முக்கியஸ்தர்கள் இணங்கினர். ஐதேமு பங்காளி கட்சிகளுடன் மைத்திரி பேசியுள்ளார். ஆனால், ஐதேகவுடன் பேசி இருக்கவில்லை.

ஆகவே எங்களிடமும் பேசினால், சிக்கலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இது தொடர்பில் ஆராயலாம் என அந்த ஐதேக முக்கியஸ்தர்கள் கூறினார்கள்

இதையடுத்து, இது விடயமாக நேற்றுமுன்தினம் இரவு மைத்திரியின் சகோதரர், ஐதேமு முக்கியஸ்தர்கள் இருவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் இந்த பேச்சுகள் நடந்து கொண்டிருந்த போதே, சிறிலங்கா அதிபர் மைத்திரிக்கு பிழையான ஆலோசனை கொடுக்கப்பட்டது. அதையடுத்து அவர் நாடாளுமன்றத்தை கலைக்கும் ஆணையில் கையொப்பமிட்டார்.

சிறிலங்கா அதிபரின் ஆணையின்படி நாடாளுமன்றம் 14ஆம் நாளே கூட்டப்பட இருந்தது. நேற்றுமுன்தினம்  ஆம் நாள் என்றபடியால், 14ஆம் நாள் வரை இன்னமும் 5 நாட்கள் இருந்தன.

ஆகவே இன்னமும் 5 நாட்கள் இருந்தபடியால், அது கடைசியாக எடுக்கப்பட்ட முயற்சியே தவிர, கடைசி நேர முயற்சி அல்ல. ஆகவே கடைசியாக எடுக்கப்பட்ட பேச்சும் முடிவுக்கு வந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

-puthinappalakai.net

TAGS: