தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் கட்சித் தாவல் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் பேசு பொருளாகியுள்ளன. தமிழ் இனத்தில் இன்றைய காலப் பகுதியில் விலைபோன ஒரு துரோகியாக வியாழேந்திரனின் பெயர் பதிவாகியுள்ளது. ஆனாலும் இந்த விடயத்தை அவதானத்துடன் கையாள வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களிடம் இருப்பதை இன்றைய ஆசிரியர் தலையங்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
வியாழேந்திரன், புளொட் அமைப்பினை சேர்ந்தவர். அந்த அமைப்பின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டவர். சிங்களப் பேரினவாத அரசாலும், இஸ்லாமிய கடும்போக்கு அரசியல்வாதிகளாலும் வேட்டையாடப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து, தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இவர்.
தமிழ் மக்கள் தரப்பு, வியாழேந்திரனை துரோகி என்பதற்கு வலுவான காரணங்கள் உண்டு. மகிந்தவின் பக்கத்தில் நின்று தேர்தலில் போட்டியிட்டவர்களை, குறிப்பாக கருணா போன்றவர்களை தமிழர்கள் கிழக்கில் தோற்கடித்தார்கள். வியாழேந்திரன் மகிந்த பக்கம் தாவுவது சரி என்றால், அன்றைக்கே கருணாவையையோ அல்லது அவரைப் போன்றவர்களையோ தமிழ் மக்கள் தேர்வு செய்திருக்கலாம்.
தமிழ் நிலத்தையும் தமிழ் இனத்தையும் எம் உரிமையையும் மீட்பதற்காகவே வியாழேந்திரனுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின் ஆணையை சிங்கள அரசுக்கு விற்று அப் பணத்தில் கூத்தடிக்கும் உரிமை வியாழேந்திரனுக்கு இல்லை. இது மக்களுக்கு செய்யும் துரோகமே. கருணாவை மக்கள் நிராகரித்திருந்த நிலையில், அக் கருணாவுடன் கூட்டு வைத்து மகிந்தவின் பக்கம் தாவிய வியாழேந்திரன் இன்னொரு கருணாதான்.
வியாழேந்திரனை நம்பிக்கை்ககுரிய அரசியல்வாதியாக தமிழர்கள் பார்த்தனர். இனத்திற்காக குரல் கொடுக்கும் இளைஞராக பார்த்தனர். இப்போதும் ஒன்றும் கெட்டுப்போவதில்லை. அவர் தனது அமைச்சுப் பதவியை துறந்து தமிழ் மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்கலாம். இந்த இடத்தில் முகப்புத்தகத்திலும் சில ஊடகங்களிலும் வியாழேந்திரனின் துரோகத்தை கிழக்கு பிராந்தியத்துடன் தொடர்புபடுத்தி “பிரதேச வாதத்தை” துண்டும் வகையில் சிலர் அணுகுகின்றனர்.
இந்த விடயம் குறித்தே, நாம் நிதானமாக கிழக்கு மக்களின் உணர்வுகளை புரிந்தவர்களாக, மட்டக்களப்பு மக்களின் மனங்களை மதிப்பவர்களாக இதனை அணுக வேண்டும். உண்மையில் கிழக்கை காட்டிலும் வடக்கிலேயே வியாழேந்திரன்கள் அதிகம் உள்ளன என்று இப் பத்தி உறுதியாக கூறுகின்றது. அது மாத்திமரமல்ல, மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட துரோகிகளே சிங்கள அரசுக்கு காலம் காலமாக ஆதரவு கொடுக்கின்ற நிலையும் வடக்கில்தான் உள்ளன.
கருணா புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து போராட்டத்தை அழிப்பதற்கு சிங்கள அரசுக்கு உதவியவர்தான். ஆனால் டக்ளஸ் தேவானந்தா காலம் காலமாக சிங்கள அரசுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர். கருணாவுக்கு எந்த வித்திலும் குறைவான அளவு துரோகத்தை டக்ளஸ் செய்யவில்லை. டக்ளஸ் மற்றும் சந்திரகுமார், விஜயகலா, அங்கஜன் என்று வடக்கில் எத்தனை பேர் உள்ளனர்,? ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் துரோகி, மாத்தையா எந்தப் பகுதியை சார்ந்தவர்? அவர் வடக்கை சேர்ந்தவர். ஒரு சிலருக்காக வடக்கு கிழக்கை குற்றம் சொல்லத் தேவையில்லை.
அண்மையில் அங்கஜன் இராநாதன், அம்மாச்சி உணவத்தின் பெயரை இனி மாற்றுவோம் என்று கூறியிருந்தார். வடக்கு மாகாண அரசின் காலம் நிறைவடைவதால் இனி மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி அம்மாச்சி என்ற பெயரை மாற்றுவோம் என்று சொன்ன அங்கஜனும் அமைச்சராக இருந்தவர். அவரது அமைச்சுப் பதவியும் இப்போது போய்விட்டது. இப்போது அவருக்கு எதிரியான டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகிவிட்டார்.
டக்ளஸ் தேவானந்தா முள்ளிவாய்க்காலில் ஒரு பொதுமக்களும் இராணுவத்தால் கொல்லப்படவில்லை என்று கூறியவர். துணை இராணுவக் குழுவை வைத்து தமிழ் மக்களை படுகொலை செய்தவர். சந்திரகுமார் என்ற ஆயுதாரியை வைத்து, அற்புதனையும் நிமலராஜனையும் கொன்றவர்கள். அந்த சந்திரகுமாரும் டக்ளசும் மகிந்த மீண்டும் பிரதமர் ஆனதும் வெடி கொளுத்தி கொண்டாடுகிறார்கள்.
இவர்கள் செய்யாததை வியாழேந்திரன் செய்யவில்லை. அதனால் வியாழழேந்திரன் விடயத்தில் கிழக்கு மாகாணத்தை குற்றம் சுமத்தமால், கிழக்கு மாகாண மக்களை கொச்சைப்படுத்தாமல் அணுக வேண்டும். கிழக்கு மாகாணம் எத்தனையோ உன்னதமான போராளிகளை தந்த மாகாணம். ஒரு சில துரோகிகளுக்காக எண்ணற்ற மாவீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தக் கூடாது. இவர்களை மறந்து அவர்களை கொண்டாடுவோம். அவர்களின் கனவுகளை சுமப்போம்.
காலம் காலமாக கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்திலிருந்து துண்டாட சிங்கள அரசு முயற்சித்து வருகின்றது. இந்த நிலையில் வியாழேந்திரன் விடயத்தில் பொறுப்பின்றி, தவறான அணுகுமுறைகளுடன் கருத்துக்களை பரப்புவது சிங்கள அரசுக்கே சாதகமாய் அமையும். வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை நாம் ஒன்றாக நின்று வெல்ல வேண்டும். அதுவே மாவீரர்களின் கனவு. அதுவோ தலைவரின் இலட்சியம். அதுவே தமிழர்களின் தாகம்.
-eelamnews.co.uk

























