இரண்டு சர்வாதிகாரிகளுக்கு இடையிலான போர் ஆரம்பம்!

உண்ட சட்டிக்குள் மலம் கழிப்பவன் என்றும் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவன் என்றும் சில பழமொழிகள் தமிழ் மக்களின் உரையாடல்களில் வரும். இதற்கு இன்றைய எடுத்துக்காட்டு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தனக்கு வாக்களித்த மக்களுக்கு மிகக் கேவலமான நம்பிக்கை துரோகத்தை ஒரு பைத்தியக்காரன் போல செய்கிருக்கிறார் மைத்திரிபால சிறிசேன.

கடந்த 2015ஆம் ஆண்டு மகிந்தவின் அரசாங்கத்தில் இருந்து மைத்திரிபால சிறிசேன வெளியேறியது எவரும் எதிர்பாராத ஒன்று. சந்திரிக்கா, ரணில், ராஜித முதலியோருடன் சேர்ந்து ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சியை அழிக்கப் போவதாகவும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வந்த நல்லவன் என்றும் மைத்திரிபால சிறிசேன தன்னை காண்பித்தார். 2015 ஜனாதிபதித் தேர்தலில் அவர் பேசிய வாசகங்களை அவளவு எளில் மறக்க முடியாது.

மகிந்தவை சர்வாதிகாரி என்றார். குடும்ப ஆட்சி செய்பவர் என்றார். தமிழ் மக்களை மாத்திரமின்றி சிங்கள மக்களையும் வதைத்த மகிந்தவை தோற்கடிக்க பலர் உயிரை பணயமாக வைத்து தேர்தலில் வேலை செய்து மைத்திரியை கொண்டு வந்தார்கள். பல அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இதற்காக கடுமையாக பணியாற்றின. மனித உரிமையாளர்களும் ஜனநாயக செயற்பாட்டாளர்களும் கடுமையாக பணி புரிந்தனர்.

மகிந்தவும் மைத்திரியும் ஒன்று என்பதை ஈழம்நியூஸ் தன்னுடைய பல ஆசிரியர் தலையங்களில் சுட்டிக்காட்டி இருக்கிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மைத்திரி இன்னொரு மகிந்தவே என்பதை உறுதியாக கூறியிருக்கிறோம். தமிழ் மக்களின் உரிமைகளை மறுப்பது, தமிழ் அரசியல் கைதகளின் விடுதலை, நில விடுவிப்பு போன்ற பல விடயங்களில் மைத்திரி மகிந்தவே. சர்வதேச ரீதியாக இனப்படுகொலை குறித்த சிக்கல்களிலிருந்து மகிந்தவை மைத்திரி காப்பற்றியதை வெளிப்படையாக பெருமையாக கூறியுள்ளார்.

இதனை எமது ஆசிரியர் தலையங்கள் பலவற்றில் சுட்டிக்காட்டி உள்ளோம். ஆனால் இன்று மகிந்த ராஜபக்சவையோ மைத்திரி பிரதமர் ஆக்கியுள்ளார். எமக்கு ரணிலோ, மகிந்தவோ, மைத்திரியோ எல்லோரும் ஒன்றே. ஆனால் மகிந்தவை வீட்டுக்கு அனுப்பி மைத்திரியை ஜனாதிபதியாக்கியதில் தமிழர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. உழைப்பு இருக்கிறது. அது ஒரு போராட்டம். அப்படி இருக்க மீண்டும் அந்த கொடுங்கோலனை மைத்திரி அழைத்துள்ளார்.

இனம் இனத்துடன் சேரும் என்பதுபோல கொடிய சர்வாதிகாரியுடன் இன்னொரு கொடிய சர்வாதிகாரி சேர்ந்துள்ளார். இப்போது மிக முக்கியமான விடயம் மைத்திரி புரிந்திருக்கும் ஜனநாயகப் படுகொலைதான். பாராளுமன்றத்தை தனது அதிகார வெறிக்காக மைத்திரி கலைத்திருப்பதன் மூலம் தான் ஒரு கொடிய சர்வாதிகாரி என்பதை உலகிற்கு காட்டியுள்ளார். இரா. சம்பந்தரின் நெல்சன் மண்டேலாவின் முகம் இப்போதுதான் வெளித்துள்ளது.

கடந்த 2015இல் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது. மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. உண்மையில் 19ஆவது அரசியல் திருத்தத்தின்படி நான்கு ஆண்டுகளின் பின்னரே கலைக்க முடியும். அரசியலமைப்பு சட்டத்தை மீறி பாராளுமன்றத்தை மைத்திரி கலைத்துள்ளார். இதனால் அடுத்த தேர்தலுக்கு 500 கோடி தேவையாக உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் கூறுகிறார்.

இதற்கான பணத்தை தமிழ் மக்களும் செலுத்த வேண்டியுள்ளது. தமிழர்களின் உழைப்பும் சுறண்டப்படும். சிங்கள தேசத்தின் அதிகார வெறிக்கு தமிழர்களின் உழைப்பு சுறண்டப்படுகின்றது. மிகவும் நல்ல மனிதர் போல நடித்து நடித்து அதிகாரத்தை கைப்பற்றிய மைத்திரி இன்று கொடூரமான சர்வாதிகாரியாக வெளிப்பட்டு நிற்கிறார். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல தமிழ் மக்கள் மாத்திரமின்றி சிங்கள மக்களும் மைத்திரியை கண்டு அஞ்சி நிற்கிறார்கள்.

மகிந்தவுக்கு துரோகம் செய்துவிட்டு ரணிலுடன் சேர்ந்து ஜனாதிபதியாகிய மைத்திரி, இப்போது ரணிலுக்கு துரோகம் இழைத்துவிட்டு, மீண்டும் மைத்திரியுடன் சேர்ந்து தனது அதிகாரத்தை நிலை நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச மைத்திரிக்கு எதிரான ஆட்டத்தை துவங்கியுள்ளார். விரைவில் மைத்திரியை வீட்டுக்கு மகிந்த அனுப்பி வைப்பார்.

அதன் முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சியில் போட்டியிடாமல் அக் கட்சியை விட்டு வெளியேறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துள்ளார். அத்துடன் தன்னுடன் சுதந்திரக் கட்சியை சேர்ந்த 50பேரையும் மைத்திரி அழைத்துச் சென்றுள்ளார். இக் கட்சியின் ஊடாகவே பாராளுமன்றத்தை கைப்பற்ற மகிந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை கழற்றிவிட்டு, கோத்தபாயவை மகிந்த இறக்குவார்.

2015இல் மைத்திரி தனக்கு இழைத்த துரோகத்திற்கு 2020இல் மகிந்த பழிவாங்குவார். மைத்திரி வீதிக்கு வருவார். அப்பாவி மக்களுக்கும் அவர்களால் வழங்கப்பட்ட ஆணைக்கும் எதிராக செயற்பாடும் மைத்திரிக்கு தண்டனை உண்டு. அதைப்போலவே தமிழ் மக்களை அழித்த கொடுங்கோலன் மகிந்தவுக்கும் தண்டனை உண்டு. அதற்காகவே மகிந்தவாக வந்து ஆப்பை தேடி வந்து உட்கார்ந்துள்ளார். தமிழர்கள் விட்டாலும் உலகம் விடாது. ஈழத் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்த, எவரும் இணைப்படுகொலை புரிந்த எவரும் நீதியின் தீர்ப்பில் இருந்து தப்பிக்கொள்ள முடியாது.

-http://eelamnews.co.uk

TAGS: