பேரம்பேசும் சக்தியாக மீண்டும் கூட்டமைப்பு உருவாகவேண்டும்!

இலங்கையின் தற்கால அரசியல் நிலைவரங்களைப் பார்க்கின்றபோது ஆட்சிப்பீடத்தை அரியணையில் ஏற்றுகின்ற, இறக்குகின்ற சக்தியாகக் கூட்டமைப்பு மாற்றம் பெற்றுள்ளமையை தமிழ்மக்கள் பெருமையுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி பால சிறிசேனவை நாட்டின் அரச தலைவராக்கிய பெருமை எம்மையே சாரும். வடக்கு – கிழக்கைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே அவரை ஜனாதிபதி என்ற அரசாசணத்தில் ஏற்றிவைத்தன.

கடந்த 09 ஆம் திகதி இரவு நாடாளுமன்றம், ஜனாதிபதியால் நாட்டின் சட்டத்தையும் அரசமைப்பையும் கையில் எடுத்து, ஜனநாயக விரோதமாக கலைக்கப்பட்டுள்ளது. அதற்கும் காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. ஜனாதிபதி திடுதிப்பென இரவோடு இரவாக காதும் காதும் வைத்தாற்போல் ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக்கினார். நாட்டில் பாரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தன்னிடமிருந்து நீக்கப்பட்ட அல்லது மட்டுப்படுத்தப்பட்ட ஓர் அதிகாரத்தைக் கையிலெடுத்து ஜனாதிபதி மஹிந்தவைப் பிரதமராக்கினார்.

பிரதமராக்கப்பட்ட மஹிந்த, விரும்பியோ விரும்பாமலோ நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அவரால் அந்தப் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ஏதுநிலைகள் இல்லாத காரணத்தால், ஜனாதிபதி எப்படியாவது குட்டிக்கரணம் அடித்தாவது தான் கொண்டுவந்த பிரதமரின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக தலையால் நடந்தார். 10 இல் இருந்து 50 கோடி ரூபாக்கள் வரை குதிரைப்பேரங்களும் அமைச்சுப் பதவிகளும் வேறும் சலுகைகளும் வழங்கப்பட்டன. பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டிலிருந்தும் மாறிமாறி கட்சிதாவல்கள் 13 நாள்கள் நடந்தன. என்னதாவல் நடந்தாலும், எத்தனை பேரை விலைக்கு வாங்கினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிiலைப்பாடு மைத்திரி – மஹிந்த கூட்டுக்குப் பெரும் தலையிடியாய் இருந்தது.

கூட்டமைப்பு தலைவர்களை விடுத்து, அதிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோடி குதிரைப்பேரம் விட்டுவைக்கவில்லை. அதில், அந்த பண, அதிகார மோகத்துக்கு ஆட்பட்டு கூட்டமைப்பின் புளொட் உறுப்பினர் வியாழேந்திரன் அரை அமைச்சுப் பதவியோடு கோடிகளும் பெற்று மஹிந்தவின் வலைக்குள் அகப்பட்டார். கூட்டமைப்பின் ஏனையோரை மாற்றும் திட்டம் புஷ்வானமாயிற்று. சாம, பேத, தான, தண்ட முறைகள் அனைத்தையும் மஹிந்த – மைத்திரி கூட்டு பிரயோகித்துப் பார்த்தும் கூட்டமைப்பு எதற்கும் அசையவில்லை. தமது கொள்கை நிலைப்பாட்டில் அவர்கள் ஒற்றுமையாக உறுதியாக நின்றார்கள். இறுதியில் நாடாளுமன்றைக் கலைப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் கடந்த 07 ஆம் திகதி கூட்டமை;பின் தலைவர் சம்பந்தன் ஐயா தலைமையிலான நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரி, அவர்களிடம் நடுநிலைமை வகிக்குமாறு கெஞ்சிக்கூடப் பார்த்தார். அவர்கள் அதற்கும் மசியவில்லை.

இதில் இன்னொரு விடயத்தையும் கூட்டமைப்பு ஆணித்தரமாகத் தெளிவுபடுத்தியிருந்தது.  தாம் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கோ ஆதரவளிக்கவில்லை என்றும் ஜனநாயகத்துக்கு விரோதமான – அரசமைப்புக்கு முரணான – அரச தலைவரின் செயற்பாட்டுக்கு எதிராகவே தாம் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றும், நாட்டின் நீதியை நிலைநாட்டுவதற்காக – அரசமைப்பை நிலைநாட்டுவதற்காக – மைத்திரியின் இந்த சட்டவிரோத பிரதமர் நியமனத்துக்கு எதிராக வாக்களிக்க முடிவுசெய்துள்ளோம் என்ற ஒரு திடமான நிலைப்பாட்டை கூட்டமைப்பு எடுத்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன்போது பலர் கூட்டமைப்பு நடுநிலை வகித்தால் என்ன? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், அவ்வாறு தாம் செயற்படுவது அநீதிக்குத் துணை போவதற்கு ஒப்பாகும் என்கிறார்.

கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டால் நாடாளுமன்றத்தை வேறுவழியின்றி கலைக்கவேண்டிய நிலைக்கு நாட்டின் அரச தலைவர் தள்ளப்பட்டார். அரசமைப்புக்கு முரணான நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராகவும் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகியன தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளன. இது இவ்வாறிருக்க தேர்தலில் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் இனி ஆராய்வோம்

மீண்டும் பேரம்பேசும் சக்தியை கூட்டமைப்பு பெறவேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடைபெறவிருக்கும் 2019 ஆம் ஆண்டுத் தேர்தலிலும் வடக்கு – கிழக்கு அனைத்துப் பகுதிகளிலும் பாரிய வைற்றியைப் பெறவேண்டிய கடப்பாடு உள்ளது.

தென்னிலங்கை கட்சிகள் சிதறிக் காணப்படுகின்ற இந்தத் தருணம் எமக்கு மிகவும் நல்ல சகுணம். மஹிந்தவை தன்னோடு இணைத்து தலைமை அமைச்சு வழங்கிய மைத்திரியை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் உதறித் தள்ளிவிட்டு சுதந்திரக் கட்சியின் 50 எம்.பி. சகாக்களோடு தாமரை மொட்டில் மலரப் புறப்பட்டுவிட்டார் மஹிந்தர். இதனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட்டு அவர்களின் வாக்கு வங்கி சிதறிக்காணப்படுகின்றது.

இரண்டாவது தென்னிலங்கையில் மைத்திரியின் முட்டாள் தனமான அண்மைய செயற்பாடுகளால் பல மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஆகையால், மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இந்தமுறை வாக்குகள் மிகவும் குறைவாகவே கிடைக்கப்பெறும் ஏதுநிலை காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டமை போன்று அவரது அரசியல் வாழ்வு ஆறடி மண்ணில் புதைபடும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது.

தென்னிலங்கையில் பாமர மக்களைப் பொறுத்தவரையிலும் கடும் பேரினவாத சிங்களவர்களும் மஹிந்தவை தெய்வமாகப் போற்றுமளவுக்கு அவருக்கான ஆதரவு காணப்படுகின்றது. ஆயினும், அந்த மக்களின் ஆதரவோடு தனித்து மஹிந்த வெல்வது என்பது இயலாத காரியம். இங்கு வடக்குக் கிழக்கு தமிழர்கள் ஒன்றாகி – ஒருமித்து கூட்டமைப்பை ஆதரித்து கூட்டமைப்பின் பலத்தை உயர்த்துவார்களாயின் மஹிந்தவை பெட்டிப்பாம்பாக்கலாம். இந்தவிடயத்தில் கூட்டமை;பின் தலைமையுடையதும் மக்களினதும் சிந்தித்து செயற்படும் ஆற்றல் முக்கியமானது.

மக்கள் சிந்தனைக்கு

வடக்குக் கிழக்கு தமிழர் பிரதேசத்தில் பல கட்சிகள் தேர்தலில் நிற்கவிருக்கின்றன. சரி, பிழைகளுக்கு அப்பால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்தவேண்டிய தேவை ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது. தென்னிலங்கை பெரும்பான்மைக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜனபெரமுன ஆகிய கட்சிகள் தமது வேட்பாளர்களை எமது வடக்கு – கிழக்கு பகுதிகளில் நிறுத்துவார்கள். யு.என்.பி. தலைமையில் விஜயகலா வேட்பாளர்களை நிறுத்துவார். அங்கஜன் இராமநாதன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வேட்பாளர்களை நிறுத்துவார். பொதுஜன பெரமுன தலைமையிலும் தமிழர் பிரதேசத்தில் ஒரு முதன்மை வேட்பாளர் தலைமையில் வேட்பாளர்களை நிறுத்தமுடியும். இவர்களுக்கு எமது மக்களும் வாக்களித்து மக்கள் பிரதிநிதியாக்குகின்றமைதான் வேதனையான விடயம். இந்த வேட்பாளர்களுக்கு எமது மக்கள் அநாவசியமாக வாக்களிப்பதால் எமது பேரம் பேசுகின்ற வலு குறைகின்றது.

இவர்களை விட, வடக்கில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. போட்டியிடுகின்றது. இதுவரை அந்தக் கட்சியும் குறைந்தது ஓர் ஆசனத்தையாவது பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், ஈ.பி.டி.பி. எப்பவும் மஹிந்த தரப்புடன்தான் தமது உறவை வலுப்படுத்திக் கொள்கின்றது. ஈ.பி.டி.பி. மீண்டும் வருமானால் அல்லது ஈ.பி.டி.பிக்கு ஓர் ஆசனம் வடக்கில் கிடைத்தால் கூட மஹிந்த நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நாம் – தமிழ் மக்கள் – ஓர் ஆசனத்தை வழங்கியதற்கு ஒப்பாகும்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டோ, அல்லது கஜேந்திரகுமார் தலைமையிலான கூட்டோ தேர்தலில் நின்று வெற்றிபெற்று மக்களுக்கு எதுவும் ஆக்கபூர்வமாக ஆகப்போவது கிடையாது. முதலமைச்சர் வடக்கு மாகாண அரசை நடத்திய சீத்துவம் அவர் எதுக்கும் லாயக்கற்றவர் என்பதை மக்களுக்குப் படம்பிடித்துக் காட்டியுள்ளது. கஜேந்திரகுமார் கூட்டும் போலித் தேசியம் பேசி மக்களை உசுப்பேத்தி, எதற்கும் பயனற்ற போலித் தேசியவாதிகளாகத்தான் காணப்படுகின்;றார்கள். அவர்களுக்கு வாக்களித்து மக்களுக்கு எந்தப் பயனும் கிடையாது.

மக்கள் நன்கு சிந்திக்கவேண்டும். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கை சிங்களப் பகுதியில் வேட்பாளரை இறக்கி ஒரு வேட்பாளரையாவது வெற்றிபெறச் செய்ய முடியுமா? சிங்கள பெரும்பான்மை மக்கள் ஒரு தமிழ்க் கட்சிக்கு வாக்களிப்பார்களா? அப்படி வாக்களிப்பார்களாயின் அவர்கள் ஒன்றில் சித்த சுவாதீனமுற்றவராகவோ, அல்லது மது போதையில் உள்ளவராகவோதான் இருக்கவேண்டும். ஏன் எமது மக்கள் மட்டும் இவ்வான ஓர் இழிவான செயலை செய்கின்றார்கள்.

ஆகவே, ஜனநாயகத்தை நிலைநாட்டி, எமது தமிழ் மக்களுகளின் அரசியல் அபிலாஷைகளை தென்னிலங்கை ஆட்சியாளர்களுடன் பேரம் பேசுகின்ற திறனுள்ளவர்களாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது பலத்தை நிலைநாட்டி கூட்டமைப்பை பலப்படுத்தி நாடாளுமன்றுக்கு அனுப்பவேண்டும். கடந்த 2015 தேர்தலில் 16 ஆசனத்தைப் பெற்ற கூட்டமைப்பு இம்முறை வடக்குக் கிழக்கில் உள்ள 29 ஆசனங்களில் குறைந்தது 20 ஆசனங்களைப் பெற தமிழ் மக்கள் வழி ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். கொடுப்பார்கள் என்று நம்புகின்றேன்.

அத்துடன், தமிழ்மக்கள் பெரிதும் வாழ்கின்ற பிரதேசங்களாள கொழும்பு, மலையகம், புத்தனம், சிலாபம் போன்ற பகுதிகளிலும் கூட்டமைப்பு வேட்பாளர்களை நிறுத்தவேண்டும். ஆசனம் ஏதும் இந்தப் பகுதிகளில் இருந்து கிடைக்காவிட்டாலும் கடந்தமுறை 2 விகிதாசார பிரதிநிதித்துவம் கிடைத்ததை இம்முறை இரட்டிப்பாக்கலாம்.

கூட்டமைப்பின் சிந்தனைக்கு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் விட்ட தவறுபோன்று கட்சிகளுக்கு என்று ஆசனங்களை ஒதுக்காமல் ஒவ்வொரு கட்சிகளில் இருந்தும் சகல பிரதேசங்களில் இருந்தும் பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பொதுவாகத் தேர்தல் நியமனக் குழு என்று கட்சி பாகுபாடின்றி நியமித்துவிட்டு சுயாதீனமாக அந்தக் குழு வேட்பாளர்களை நியமிக்கவேண்டும்.

சகல தொகுதிகளுக்கும் முன்பு தேர்தலில் நின்றவர்கள் என்று சிந்தித்து களமிறக்காது அவரிலும் விட மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள ஒருவர் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருப்பின் அவரைத் தெரிவுக்குழு தெரிவுசெய்யின் அதனை ஏற்கின்ற பக்குவம் கட்சித் தலைமைகளிடத்தும் முக்கியஸ்தர்களிடத்தும் இருத்தல் வேண்டும். கூட்டமைப்பின் கட்சிகளின் பெயர் இந்த இடத்தில் பாவித்தல் ஆகாது.

இன்னொரு விடயத்தையும் முக்கியம் கவனத்தில் கொள்தல் வேண்டும். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றிலாவது உறுப்பினராகக் குறைந்தது 2 வருடங்கள் இருந்து கட்சிக்காக உழைத்து கட்சியின் நன்மதிப்புப் பெற்றவரையே தேர்தலில் நிறுத்தல் வேண்டும். ஏனென்றால், அண்மைக்காலமாகத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை ஐயா வேதனையுடன் தெரிவிக்கின்ற விடயம், வடக்கு மாகாண சபைக்கு கல்வியியலாளர்களை வெளியில் இருந்துகொண்டுவந்து நிறுத்தினோம் ஆனால் மாகாண அரசு பயனற்றுப் போய்விட்டது என்று வேதனையுற்றார். அந்த நிலை இனியும் ஏற்படக்கூடாது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 வேட்பாளர்களில் தற்போது ஐவர் கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் இருக்கின்றனர். சரி அவர்கள் மீண்டும் தேர்தல் களத்தில் நிறுத்தினாலும், புதிதாக நியமிக்கின்ற ஐவரில் 3 இளைஞர்களையும் இரண்டு பெண்களையும் நிச்சயம் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதைவிட, சாவகச்சேரி தொகுதிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க – மக்கள் சேவையாற்றிய ஒருவரை நிறுத்தல் வேண்டும். கடந்த காலங்களில் கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்பட்ட க.அருந்தவபாலன், முதலமைச்சர் தலைமையில் ஒரு குழு இறங்குவதாகவும், அதில் அவர் இறக்கப்படுகிறார் எனவும் இணையத் தளங்களில் செய்தி வைரலாகப் பரவுகின்றது.

ஆகவே, மக்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என்ற ஆணவத் திமிரைக் கைவிட்டு, மக்கள் விருப்புடன் வாக்களிக்கும் வகையில் நல்ல – ஆளுமை படைத்த – மக்கள் செல்வாக்கு மிக்கவர்களைத் தேர்தலில் கூட்டமைப்பு நிறுத்துமாயின் எத்தடைவந்தாலும் அத்தனையும் தகர்த்தெறியப்பட்டு 20 ஆசனங்களுக்கு மேல் கூட்டமைப்பு பெற்று மீண்டும் பேரம்பேசுகின்ற சக்தியாக 2019 இல் அமையவிருக்கும் அரச அவையில் திகழும் என்பது வெள்ளிடைமலை.

(தெல்லியூர் சி.ஹரிகரன்)

-tamilcnn.lk

TAGS: