மீண்டும் ரணில் வசம் செல்லும் இலங்கையின் ஆட்சிப்பொறுப்பு?; மகிழ்ச்சியில் ஜ.தே.க தொண்டர்கள்!

சிறிலங்கா உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாளைய தினம் நாடாளுமன்றத்தில் கூடி சட்டவிரோதமாக பறிக்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக சூளுரைத்துள்ளார்.

அதேவேளை எந்தவொரு அழுத்தங்கள் வந்தாலும், நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பு சுயாதீனமாகவே செயற்படுகின்றது என்பதை உச்ச நீதமன்றம் இன்றைய தினம் நிரூபித்துக் காண்பித்திருப்பதாகவும், அதற்காக தலைமை நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் ரணில் விக்கிரமசிங்க அலரிம மாளிகையில் அவசரமாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக தெரிவித்தார்.

அதேவேளை நாடாளுமன்றத்தின் உரிமைகளை பாதுகாக்க சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கொண்ட முயற்சிகளுக்கும் நன்றித் தெரிவித்துள்கொண்டார்.

அத்துடன் ஜனநாயகத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக கிடைத்த இந்த வெற்றிக்காக அனைத்து மதத் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, மக்களின் அடிப்படை உரிமைகளை காப்பாற்றுவதற்கான தமது போராட்டத்தின் முதல் வெற்றியினை இன்றைய தினம் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

இதற்கமைய நாட்டில் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும், நீதியையும் நிலைநாட்டுவதற்கான தமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவித்த ரணில், நாட்டின் அதியுயர் சட்டமான அரசியல சாசனத்தை பயன்படுத்தி விளையாட அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல அரசியல் சாசனத்தை தாம் வழிரும்புவது போல் மாற்றியமைத்துக்கொள்ளவும் முடியாது என்றும் கூறிய ரணில், இதனையே உச்ச நீதிமன்றம் இன்றைய தினம் வழங்கிய அதிரடி தீர்ப்பின் மூலம் நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றின் இன்றைய தீர்ப்பை அடுத்து நவம்பர் 14 ஆம் திகதியான நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதாக அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவே அறிவித்திருந்தார் என்றும் தெரிவித்துள்ள ரணில் அதற்கமையவே தாங்கள் நாடாளுமன்றில் கூடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அவரால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச மற்றும் அவர்களது விசுவாசிகள் கூறுவது போல் சபாநாயகர் கரூ ஜயசூரிய தான்தோன்றித் தனமாக நாடாளுமன்றத்தை கூடடவில்லை என்றும் தெரிவித்த ரணில், நாடாளுமன்றம் கூடியதும் பெரும்பாண்மையினை நிரூபிக்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மைத்ரி – மஹிந்த தரப்பினரின் நடவடிக்கைகளால் பெரும்பாண்மையானது அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்த ரணில், அதை பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் துணையாக இருப்பதாகவும் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

அனைத்து அரச பணியாளர்களையும், அரசியல் சாசனத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் மதிப்பளித்து செயற்படுமாறும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை மைத்ரி – மஹிந்த கூட்டணியின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக நவம்பர் 15 ஆம் திகதியான நாளை மறுதினம் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை லிபட்டன் சுற்றுவட்டத்தில் நடத்தவுள்ளதாகவும் ரணில் அறிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: