இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருடைய அமைச்சரவைக்கும் எதிராக நாடாளுமன்றத்தில், இன்று (புதன்கிழமை) நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நவம்பர் 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்திருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடியது.

பிரதமர் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தார். ஆளும்கட்சி வரிசையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான, புதிதாக அமைச்சுப் பதவிகளைப் பெற்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். ஆரம்பம் முதலே சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

இலங்கை
இலங்கை

இந்நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்து, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வழிமொழிந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அதற்கு ஆதரவாக பெரும்பான்மையானோர் வாக்களித்ததாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, நம்பிக்கையில்லாப் பிரேரணையை உறுதிப்படுத்திய ஆவணம் தன்னிடம் வழங்கப்பட்டதாகவும் சபாநாயகரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, உறுப்பினர்களின் கையெழுத்துடன் இதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் சபாநாயகர் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறியதா?

காலை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ராஜ்பக்ஷவுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக ஊடகத்திடம் தெரிவித்தார் ரணில் விக்கரமசிங்க.

பிரதமர் ராஜபக்ஷவுக்கும், அவரது அரசுக்கும் எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் ஓட்டில் வெற்றி பெற்றதாக எதிர்க் கட்சியான தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் இரா.சம்பந்தனை மேற்கோள் காட்டி ராய்டர்ஸ் செய்தி முகமை செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிமன்றத்துக்குப் பாராட்டு

முன்னதாக, பல நாள்களாக நிலவிய அரசியல் உறுதியற்ற நிலைக்குப் பிறகு தற்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சனையை தேவையான அவசரத்துடனும், விரிவாகவும் அணுகி, நிலைமைக்கேற்ப செயல்பட்ட நீதித்துறை குறித்து தற்போது பொதுமக்கள் பெருமை கொள்ளலாம் என்று கரு ஜெயசூர்ய தமது அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.

தற்போதைய அரசாங்கம் சட்டபூர்வமாக செல்லத்தக்கதா என்பதைப் பற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முடிவெடுப்பதற்கு தற்போது நாடாளுமன்றம் வழிவகை செய்யவேண்டும் என்றும் கரு.ஜெயசூர்ய குறிப்பிட்டிருந்தார்.

இன்றைய நாளின் நிகழ்வுகள் குறித்து மக்கள் ஆறுதல் கொள்ளலாம் என்று கூறிய அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீதான தமது நம்பிக்கையையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

பொதுமக்களும், குறிப்பாக பொறுப்புள்ள பதவிகளில் உள்ளவர்களும் தேவையற்ற தூண்டுதல்களையும், நிச்சயமற்ற தன்மையையும் தவிர்க்கும் பொருட்டு அமைதியாகவும், கண்ணியத்துடனும் நடந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எல்லா இலங்கையர்களும், நீதிமன்றத்தின், நாடாளுமன்றத்தின் தீர்ப்பை அமைதியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ தரப்பு என்ன நினைக்கிறது?

ராஜபக்ஷ ஆதரவு எம்.பி.க்கள் நடத்திய செய்தியாளர் கூட்டம்.
முன்னதாக, நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்புவில் நடந்த ராஜபக்ஷ ஆதரவு செய்தியாளர் கூட்டத்தில், விமல் வீரவன்ச உள்பட 15-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் சபாநாயகரின் வேண்டுகோளைப் நிராகரிப்பதாகத் தெரிவித்தனர்.

”நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இறுதியானது அல்ல. அதனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனைவரும் பொறுமை காக்க வேண்டும். இடைக்கால தடை உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பதவியிழந்த எம்.பிக்களுக்கு அந்தப் பதவிகள் கிடைக்காது. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டால் மட்டுமே மீண்டும் எம்.பி.க்கள் பதவி பெறுவார்கள். ஒருவேளை, ஜனாதிபதி அறிவிப்பு சரியானது என நீதிமன்றம் டிசம்பர் 07ஆம் தேதி அறிவித்தால் என்ன நடக்கும் என சிந்திக்க வேண்டும். ஆகவே, நாடாளுமன்றத்தைக் கூட்ட சட்டரீதியாக எவ்வித அதிகாரமும் இல்லை. நாடாளுமன்றத்தைக் கூட்டும் முயற்சியை நாம் கண்டிக்கிறோம். புறக்கணிக்கிறோம்,” என அவர்கள் அறிவித்தனர்.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், எம்.பி.யுமான நமல் ராஜபக்ஷ தாங்கள் நாடாளுமன்றத்தில் பங்கேற்கப் போவதாகத் தெரிவித்திருந்தார்.

தேசியப் பாதுகாப்பு சபையை கூட்டிய ஜனாதிபதி

இதனிடையே, தேசிய பாதுகாப்பு சபையை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஜனாதிபதி அவசரமாக கூட்டி ஆராய்ந்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டம்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்புச் சபை கூடிய போது பாதுகாப்பு நிலைமை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.நாட்டில் நிலவும் அமைதியான சூழலை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி அனைத்து பாதுகாப்புத் துறை பிரதானிகளுக்கும் பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு?

இலங்கை

இன்று நாடாளுமன்றம் கூடும் போது மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் போது அதனை ஆதரித்து வாக்களிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

இலங்கையில் அரசியல் அமைப்புக்கு முரணாக செயற்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு உயர் நீதிமன்றம் வராலற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பின் மூலம் உரிய பாடம் புகட்டியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரவித்துள்ளார்

“நாட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஜானதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தனிப்பட்ட நலனுக்காக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை காட்டாமல் அவரை பிரதமாராக நியமித்திருந்தார்.

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்தின் மூலம் அவரை தோற்கடிக்கும் நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறங்கிய போது ஏற்படபோகும் தோல்வியை பொறுக்கமுடியாமல் நாடாளுமன்றத்தை கலைத்திருந்தார்.”

“அரசியலமைப்பின் 19வது திருத்தத்துக்கு முரணாக நடந்திருந்தார். அவர் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் உரையும் ஆற்றியிருந்தார்.”

“ஜனாதிபதியின் நடவடிக்கையை நியாப்படுத்தும் வகையில் சட்டமா அதிபரும் உயர் நீதிமன்றில் வாதங்களை முன்வைத்திருந்தார்.”

“உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் தலைமையிலான குழு ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நடுநிலைமையோடு ஆராய்ந்து உரிய தீர்ப்பை வழங்கியுள்ளது.”

“இன்று நாடாளுமன்றம் கூடும் போது மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் போது அதனை ஆதரித்து வாக்களிப்போம்.” என்று தெரிவித்தார் சம்பந்தன்

அரசியல் சிக்கலின் தொடக்கம்

அக்டோபர் 26-ம் தேதி திடீரென இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்வதாகவும், அவருக்குப் பதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதாகவும் அறிவித்ததை தொடர்ந்து இலங்கையில் தற்போது அரசியல் சிக்கல் தொடங்கியது. இந்த நியமனம் அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று கூறிய ரணில் தரப்பு, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டும்படி கேட்டுக்கொண்டது. ஆனால், ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார்.

இது குறித்துப் படிக்க: இலங்கை பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ; “நான்தான் பிரதமர்” என்கிறார் ரணில்

இந்நிலையில், இன்று கூடிய நாடாளுமன்றம், இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய முடிவினை எடுக்கும் என்று எதிர்பார்ப்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஒத்திவைப்பு நடந்துள்ளது. -BBC_Tamil

TAGS: