கவிழ்க்கப்பட்டது அரசு! பின்கதவால் தப்பி ஓடிய மஹிந்த!!

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவர் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கும் எதிராக ஜே.வி.பியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று பகல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசுக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் வைத்து அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் விசேட வர்த்தமானிக்கு எதிராக உயர்நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணியளவில் சபாநாயகர் தலைமையில் கூடியது.

இதன்போது ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பியால் புதிய பிரதமருக்கும் அவர் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கும் எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். அப்போது பிரதமர் கதிரையில் அமர்ந்திருந்த மஹிந்த ராஜபக்ஷவும், அவரின் அணியினரும் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியின் வேண்டுகோளுக்கிணங்க சபாநாயகரின் அனுமதியுடன் குரல் பதிவு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மஹிந்த அணியினரின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடத்தப்பட்ட குரல் பதிவு வாக்கெடுப்பில், புதிய அரசுக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சபாநாயகர் அறிவித்தார். அத்துடன், சபை அமர்வை நாளை வரை ஒத்திவைத்தார்.

சபாநாயகரின் அறிவிப்பு வெளியான கையோடு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் எம்.பிக்களில் பலர் ஆசனங்களிலிருந்து எழுந்து நின்றும், சிலர் சபைக்குள் நடுவில் இறங்கி வந்தும் வெற்றிக்கோஷம் எழுப்பினர். இதைப் பொறுக்க முடியாத மஹிந்த அணியினர் சபையிலிருந்து பின்கதவால் வெளியேறிச் சென்றனர்.

-http://eelamnews.co.uk

TAGS: