பாராளுமன்றம் ஒத்திவைப்பு ! களேபரத்தில் முடிந்த இன்றைய அமர்வு ! அதிரும் இலங்கை அரசியல்

இலங்கை பாராளுமன்றம் எதிரவரும் 21 ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் டிசம்பர் மாதம் 7 ம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது .

உயர்நீதிமன்றின் இடைக்கால தடையை அடுத்து ஜனாதிபதி ஏற்கனவே வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நேற்றையதினம் பாராளுமன்றம் கூட்டப்பட்டது .

நேற்றையதினம் பாராளுமன்றம் கூட்டப்பட்டபோது ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது .

இந்த வாக்கெடுப்பில் மகிந்தவுக்கு எதிராக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர் .இதன்படி மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெற்றதாக அறிவித்து 122 பேரின் கையொப்பம் அடங்கிய கடிதம் ஜனாதிபதிக்கு சபாநாயகரினால் அனுப்பிவைக்கப்பட்டது .

குரல் மூலமான வாக்கெடுப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த மகிந்த தரப்பினர் நேற்றையதினம் நாடாளுமன்றில் பெரும் கூச்சலிட்டனர் .இதனால் இன்றைய தினம் 10 மணிக்கு நாடுளுமன்றம் கூட்டப்படும் என்று சபாநாயகர் அறிவித்திருந்தார் .

இன்று காலை 10 மணிக்கு மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்பட்டபோது பிரதமர் மகிந்த ராஜபக்ச விசேட உரையொன்றினை நிகழ்த்தினார் .

இந்த உரையில் நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி ஊழல் , விலைவாசி அதிகரிப்பு , பணவீக்கம் தொடர்பில் மகிந்த குற்றம் சுமத்தினார் .

நல்லாட்சியின் போது நாடு அதால பாதாளத்தினை நோக்கி சென்றதாகவும் நாட்டினை வீழ்ச்சியில் இருந்து மீட்பதற்காக தான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதாகவும் மகிந்த தெரிவித்தார் .

ஆரம்பத்தில் இருந்தே மகிந்த உரையாற்றும் போது கூச்சலிட்ட ரணில் தரப்பினர் நல்லாட்சி மீதான மகிந்தவின் குற்றசாட்டுகளை தொடர்ந்து கூக்குரல் இட்டனர் .

மகிந்த தரப்பு மற்றும் ரணில் தரப்பினர் கூச்சலிட்டு பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

ஒரு கட்டத்தில் மகிந்த தரப்பு உறுப்பினர்கள் சபாநாயகரை நோக்கி ஓடி சென்றனர் .சபாநாயகரை பாதுகாக்கும் பொருட்டு ரணில் தரப்பு உறுப்பினர்கள் சபாநாயகரை சூழ்ந்து கொண்டனர் .

மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம சபாநாயகரின் ஒலிவாங்கியை பிடுங்கி எறிய முயற்சி செய்தார் .இதன் போது அவரது கையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது .

ரவுடிகளாக மாறிய மகிந்த தரப்பு உறுப்பினர்கள் சபாநாயகரை நோக்கி கழிவுகள் போடப்படும் வாளி, மற்றும் புத்தகங்களை எறிந்தனர் .

நாடாளுமன்றில் ஏற்பட்ட பெரும் அமளிதுமளியை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சபாநாயகர் தனது இருக்கையை விட்டு எழுந்து வெளியேறினார் .

அதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளியேறி சென்றார்கள் .

இதன் பின்னர் சபாநாயகர் கட்சி தலைவர்களை அழைத்து கலந்துரையாடினார் . இதன் போது எதிர் வரும் 21 ம் திகதி வரை நாடாளுமன்றினை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது .

-eelamnews.co.uk

TAGS: