‘ஜனவரி 8’ இலட்சியங்களில் இருந்து ஜனாதிபதி விலகிவிட்டார் – ரணில். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இந்த நல்லாட்சி அரசாங்கம் கொண்டிருந்த இலட்சியங்களில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகிவிட்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தாம் இன்னும் அந்த இலட்சியங்களுடனேயே செயற்பட்டு வருவதாகவும் அரசியல் அமைப்புக்கு ஏற்ப தேர்தலை நடத்தினால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சியினர் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுத்துள்ள பாரிய ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் இன்று நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை கலைத்துவிட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நாம் ஒரு அரசாங்கத்தை அமைக்க அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் தேர்தலுக்கு செல்லலாம் என்றும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை நாம் நடத்துவோம் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் எமது மக்கள் பலத்தை வெளிக்காட்ட நாம் நாடாளுமன்ற தேர்தல் அல்ல ஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம் என்றும் கூறியுள்ளார்.
ஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க சவால்!
ஒரே நாளில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சியினர் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுத்துள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டு வெற்றிபெற்று காட்டட்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
இதேவேளை அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதியை சந்தித்து தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மஹிந்த-மைத்திரிக்கு எதிரான போராட்டம் கொழும்புடன் நிறவடையாது என்று கூறிய ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், யாழ்ப்பாணத்திலும் தொடரும் என கூறியுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் மக்கள் எழுச்சிக் கூட்டத்தின்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் குறிப்பிட்ட மனோ கணேசன்,
“எங்கள் எல்லாரையும் ஒற்றுமைப்படுத்தியமைக்காக முதலில் மைத்திரிக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்… இந்த நல்லாட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு எங்கள் ஆட்சியை நாங்கள் கொண்டுவருவோம். கொழும்புடன் இந்த மக்கள் போராட்டம் நிற்காது . கண்டி , குருநாகல், யாழ்ப்பாணம் , மட்டக்களப்பு என நாடளாவிய ரீதியில் மக்கள் முன் வருவோம்.” என்றார்.
இதேவேளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இங்கு உரையாற்றுகையில்,
”முடிந்தால் ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள். ஜனாதிபதியிடம் இதனை நான் சவாலாக கேட்கிறேன்.என்னையும் றிஷார்ட்டையும் நீங்கள் விலைக்கு வாங்க முடியாது . நாங்கள் யார் என்பதை உங்களுக்கு காட்டுவோம்.” என்றார்.
2015 இல் பெற்ற ஜனநாயக வெற்றி காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது – முன்னாள் ஜனாதிபதி கவலை!
2015 ஆம் ஆண்டு பலரின் இணைவால் பெற்ற ஜனநாயக வெற்றி தற்போது காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இந்நிலைமையானது நாட்டை அதளபாதளதிற்கு கொண்டு செல்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இன்று (வியாழக்கிழமை) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஒழுக்கமான நேர்மையான வளமிக்க இலங்கைக்கான போராட்டத்திற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏனைய கட்சிகள், சிவில் சமூகத்துடன் இணைந்து முன்னொருபோதும் இல்லாத பாரிய இயக்கத்தை கட்டியெழுப்பியது என அவர் தெரிவித்துள்ளார்.
2015 இல் வெற்றி பெற்ற சிறந்த இலங்கைக்கான மக்களின் வேண்டுகோளிற்கு துரோகமிழைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த சிலர் முயல்வதும் எங்கள் அடிப்படை உரிமையை, ஜனநாயகத்தை பறித்த, ஜனநாயக ஸ்தாபனங்களை அழித்து ஊழல் இலஞ்ச வலையமைப்பை உருவாக்கிய கட்சியுடன் அரசியல் குழுவுடன் இணைய முயல்வதும் கவலையடைய செய்கின்றது.
நாடாளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் கடந்த சில வாரங்களாக இடம்பெறுகின்ற காட்சிகள் அனைத்து இலங்கையர்களாலும் மிக நீண்ட காலமாக மிகப்பெறுமதி வாய்ந்தவையாக கருதப்பட்ட பாதுகாக்கப்பட்ட ஜனநாயக அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையை அழித்து வருகின்றன.
ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மிகவும் பெறுமதியான விடயங்களாக கருதும் இலங்கையர்களும் அதனை நிலைநாட்டும் அமைப்புகளும் இந்த நாட்டில் சுதந்திரத்திற்காகவும் நல்லாட்சிக்காவும் எழுச்சி பெற வேண்டிய முன்னெப்போதும் இல்லாத தருணம் தற்போது வந்துள்ளது.
இலங்கை முன்னொருபோதும் இல்லாத ஆபத்தான குழப்பம், நாட்டை அதளபாதளதிற்கு கொண்டு செல்கின்றது” என சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
-eelamnews.co.uk