கடந்த ஒக்டோபர் 26ம் திகதி முதற்கொண்டு 22 நாட்களாக தொடர்ந்துகொண்டிருக்கும் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமையானது பொதுமக்கள் மத்தியில் செய்திகளை அறிந்துகொள்வதற்கான ஆர்வத்தை பெரிதும் அதிகரித்திருக்கின்றது. உண்மையில் ஏன் இந்த அரசியல் நெருக்கடி ஏற்பட்டது என்பதற்கான ஆரம்பப்புள்ளியைத் தேடிச் சென்றோமானால் அதிகார பேராசையே இதற்கான முழுமுதற்காரணமாக இருந்துள்ளதென்பதை எவ்வித சந்தேகங்களுக்கும் இடமின்றி புரிந்துகொள்ளமுடியும்.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ந்திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து ஜனாதிபதியாக பதவியேற்ற போது ,தாம் ஒரு முறை மாத்திரம் தான் ஜனாதிபதியாக இருப்பேன் என நாட்டு மக்களுக்கு கூறியிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அதிகாரங்களை தாமாக முன்வந்து குறைத்த முதலாவது ஜனாதிபதி தாமே என 19வது திருத்தத்தை நிறைவேற்றிய போது கூறியிருந்தார்.
ஆரம்பத்தில் உண்மையிலேயே அதிகாரத்தின் மேல் ஆசை இல்லாதவராக இருந்திருப்பார் போலும். ஆனால் அரசியல்யாப்பின் 19வது திருத்தத்தின் மூலம் சில அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட பின்னரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் இருந்த அளவற்ற அதிகாரங்களால் ஈர்க்கப்பட்ட ஜனாதிபதி சிறிசேன ,மீண்டுமாக 2வது தடவையாக ஜனாதிபதியாக வேண்டும் என்ற விருப்பை தனக்குள் வளர்த்துக்கொண்டார். அன்றேல் சூழ்ந்திருந்த ஆலோசகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் இடைவிடாத ஆசைத்தூண்டலால் 2வது தடவை போட்டியிடும் எண்ணம் மேலோங்கியது.
கடந்த இருவருடகாலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் சிறிசேன களமிறங்குவார் என்ற கருத்துக்களை வெளிப்படுத்தினர். அதன்பின்னர் ஊடகங்களின் பிரதானிகளுடன் நடத்துகின்ற சந்திப்புக்களில் கலந்துகொண்டபோது வினவிய போதெல்லாம், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் மீண்டும் நீங்கள் ஜனாதிபதி ஆக வேண்டும் என கூறுகிறார்கள் ,உங்களின் நிலைப்பாடு என்ன என வினவியபோது தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என கூறியிருந்தார். நிலைப்பாடு என்பது 2015 ஜனவரி 9 ம்திகதி பதவியேற்ற போது வெளியிட்ட கருத்தாக இருக்குமோ என எண்ணிக்கொண்ட தருணங்களும் இருந்தன.
இந்த ஊகங்களுக்கும் கருத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போன்று இவ்வருடம் மட்டக்களப்பு செங்கலடி விளையாட்டு மைத்தானத்தில் மே மாதம் 7ம்திகதி இடம்பெற்ற மே தினக்கூட்டத்தில் ஆற்றிய உரையில் தாம் 2020ம் ஆண்டுடன் அரசியலில் இருந்து ஓய்வுபெறப்போவதில்லை என்ற அறிவித்ததுடன் இந்த நாட்டு மக்களுக்கும் நாட்டிற்கும் சேவையாற்றும் நோக்கத்தை பூர்த்திசெய்வதற்கு 2020ம் ஆண்டிற்கு அப்பாலும் அரசியலில் தொடரவேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இவ்வாண்டு மே மாதத்திற்கு பின்னர் எப்படி மீண்டும் ஜனாதிபதியாக வருவது என்ற வேட்கை அதிகரிக்கத்தொடங்கியது. இதன்பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய தலைவர்களிடம் தாம் மீண்டுமாக ஜனாதிபதியாக வரவிரும்புவதாகவும் பொது வேட்பாளராக முன்னிறுத்துவீர்களா? என்ற வகையில் வினவப்பட்டுள்ளது. இதனை கடந்த செப்டம்பர் மாதமளவில் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனாதிபதி சிறிசேன தரப்பின் வேண்டுகோளை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டனர். இதன்பின்னர் மஹிந்த ராஜபக்ஷவை கடந்த ஒக்டோபர் 3ம் திகதி ஜனாதிபதி பத்தரமுல்லையிலுள்ள எஸ்.பி. திஸாநாயக்கவின் வீட்டில் சந்தித்து மீண்டும் ஜனாதிபதியாவதற்கான தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார் சிறிசேன.
இந்த நிலையில் தாம் ஏற்கனவே இரண்டு தடவை ஜனாதிபதியாக பதவிவகித்துவிட்ட நிலையிலும் அரசியல்யாப்பின் 19வது திருத்தத்தின் கீழ் மீண்டுமாக ஜனாதிபதியாக வரமுடியாத நிலையிலும் தனது தரப்பில் சரியான ஜனாதிபதி வேட்பாளர் இல்லாத நிலையிலும் ஜனாதிபதி சிறிசேனவின் வேண்டுகோளுக்கு பூர்வாங்க இணக்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என அறியமுடிகின்றது.
இந்த இணக்கத்துடன் மீண்டுமாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையை அணுகி தாம் 2வது தடவையாக ஜனாதிபதியாக வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி சிறிசேனரி தம்மை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த ராஜபக்ஷ தரப்பு இணங்கியுள்ள விடயத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்றார். நிலைமையை சுதாகரித்த ஐக்கிய தேசியக்கட்சித்தரப்பினரோ நிறைவேற்று அதிகாரமற்ற ( இந்தியாவில் இருப்பதைப் போன்ற சம்பிரதாயபூர்வ) ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தமுடியும் என ஐக்கிய தேசியக்கட்சி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த யோசனை ஜனாதிபதி சிறிசேன தரப்பில் இருந்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்குப் பின்னர் இலங்கை அரசியலில் நடந்ததெல்லாம் தற்போது உள்நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி முழு உலகிற்குமே வெளிச்சம் .
-eelamnews.co.uk