தமிழர்களை மீ்ண்டும் யுத்தத்திற்குள் தள்ளிவிட முயற்சி!

இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பையே ஐனாதிபதியும், அவரால் பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஐனாதிபதியும் சேர்ந்து அப்பட்டமாக மீறும்போது அரசியலமைப்பினூடாக தமிழர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள உரிமைகள் ஏன் மீறப்படாது என்ற கேள்வி எழுந்துள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சரான மருத்துவர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டிருக்கின்றார்.

தமிழர்கள் நாட்டின் அரசியலமைப்பை நம்பாமல் தனிநாட்டுக் கோரிக்கைக்கு போகவேண்டுமா என்ற கேள்வியை மைத்ரி – மஹிந்த கூட்டணி ஏற்படுத்தியிருப்பதுடன், இதனால் நாட்டில் மீண்டுமொரு சிவில்யுத்தம் ஏற்படுவதற்கான சூழலை உருவாக்கியுள்ளதை அவர்கள் இருவரும் உணரவேண்டும் என்றும் மருத்துவர் சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா சிதம்பரபுரம் பழனிநகர் அறிவொளி சனசமூகநிலைய திறப்பு விழாவும் புதிதாக அமைக்கபட்ட வீதியை மக்களிற்கு கையளிக்கும் நிகழ்வும் நவம்பர் 17 ஆம் திகதியான சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்துகொண்டு கட்டடத்தை திறந்துவைத்த வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார். இதன்போது நாடாளுமன்றில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கடும் விசனத்தை வெளிப்படுத்தினார்.

“இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினை முழுநாட்டையும் ஏதோவொரு விதத்தில் பாதித்துள்ளது. ஐனாதிபதி தூரநோக்கில்லாமல் அரசியலமைப்பை மீறி மேற்கொண்ட செயற்பாடுகளால் நாடாளுமன்றில் இன்று மிளகாயதூள் வீசும் நிலமை ஏற்பட்டுள்ளது” என்று சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை “சபாநாயகரின் கதிரையை தூக்கிகொண்டு ஓடுகிறார்கள். மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றிற்கு சென்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் கதிரைக்குமேலே தண்ணீரை ஊற்றிவிட்டு சபாநாயகர் பயத்தினால் சிறுநீர் கழித்துவிட்டார் என்று சொல்வோம் என்று கூறுகிறார்கள். இன்னுமொருவர் கத்தியோடு நிற்கிறார், கதிரையால் தூக்கி அடிக்கிறார்கள், காவல்துறையினர் கூட காயமடைந்துள்ளனர். நாடாளுமன்றத்தின் இந்த சம்பவங்களை பார்க்கும் போது மிகவும் அசிங்கமாகவும் வெட்கமாகவும் இருந்தது” என்று முதலாவது வட மாகாண சபையின் உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தரான மருத்துவர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

‘வீதிகளில் நின்று மிளகாய்தூள் வீசி நகைகளை அறுத்தவர்களும், கத்தியைகாட்டி கொள்ளையடித்தவர்களும் நாடாளுமன்றம் அனுப்பி வைக்கப்பட்டதாலேயே இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டிய வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர், . மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டினால் என்ன மாதிரியான தெருகூத்தெல்லாம் நடக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை “மகிந்த ராஜபக்ச உண்மையிலேயே மக்கள் மீது அக்கறைகொண்டவராக இருந்தால் நாட்டிலே ஐனநாயகம் ஏற்படுவதை விரும்புபவராக இருந்தால் தனக்கு பெரும்பாண்மை காட்டமுடியாது என்பதை உணர்ந்து விலகிக்கொள்ளவேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் அந்த எண்ணம் அவரிற்கில்லை என்றும் கூறும் சத்தியலிங்கம், அதனால் ஐனாதிபதி இனியும் தாமதிக்காது ஒரு முடிவை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் தமக்கு கிடைக்கவேண்டிய உரிமையை இந்த நாட்டினுடைய அரசியலமைப்பின் மூலம்தான் பெற்றுகொள்ளமுடியும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் தெரவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர், அப்படியிருக்கும் போது ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசியலமைப்பையே ஐனாதிபதியும், முன்னாள் ஐனாதிபதியும் சேர்ந்து அப்பட்டமாக மீறும்போது அரசியலமைப்பினூடாக தமிழர்களிற்கு கொடுக்கபடும் உரிமைகள் ஏன் மீறப்படாது என்ற கேள்வி எழுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் தமிழர்கள் அரசியலமைப்பை நம்பாமல் தனிநாட்டுக் கோரிக்கைக்கு போகவேண்டுமா என்ற கேள்வியை தமிழ் மக்கள் முன்னால் மைத்ரி – மஹிந்த அரசாங்கம் கொண்டுவந்துவிட்டிருக்கின்றது என்றும் குற்றம்சாட்டியுள்ள அவர், நாட்டில் மீண்டுமொரு சிவில்யுத்தம் ஏற்படுவதற்கான சூழலை உருவாக்கியுள்ளதையும் மஹிந்தவும் – மைத்ரியும் உணரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

-athirvu.in

TAGS: