உலகில் ஒழுக்கம் அற்ற இராணுவமாக ஸ்ரீலங்கா இராணுவம் திகழ்கிறது!

மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுமாயின் விபரீதமான விளைவுகள் ஏற்படும் என அதன் ஏற்பாட்டு குழுவினர் எச்சரித்துள்ளனர்.

சட்டங்களை மீறுகின்றவர்கள் கைதுசெய்யப்பட வேண்டுமாயின் முதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைதுசெய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு, மாவீரர் துயிலும் இல்லங்களை துப்புவரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மஹிந்த ராஜபக்ச நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவித அச்ச உணர்வுடனேயே இந்த நினைவேந்தல் பணிகளுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

இதன்ஒரு கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள காணி வளாகம் மாவீரர் குடும்பங்களால் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள காணி ஸ்ரீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

தாம் முன்னெடுக்கப்படும் இந்த சிரமதான செயற்பாட்டிற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என துப்பரவு பணியில் ஈடுபட்ட செந்தில்வேல் ஸ்ரீஸ்கந்தன் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

கிளர்ச்சியை தூண்டிய மக்கள் விடுதலை முன்னணியினருக்கு ஒரு சட்டமும் தமிழர்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டால் விபரீதிமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் சிரமதானப் பணிகளில் ஈடுபட்ட சி.லோகேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் அரசியல் அமைப்பிற்கு எதிராக செயற்படுவோர் கைதுசெய்யவேண்டுமானால் முதலில் ஜனாதிபதியை கைதுசெய்ய வேண்டும் என்றும் முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணியில் ஈடுபட்ட ஒருவர் குறிப்பிட்டார்.

உலகில் ஒழுக்கம் அற்ற இராணுவமாக ஸ்ரீலங்கா இராணுவம் திகழ்வதாக இந்த சிரமதானப் பணிகளில் பங்கேற்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

-athirvu.in

TAGS: