சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு

அண்மையில் ஏற்பட்ட சிறிலங்கா அரசியல் குழப்பத்தில்-  அரசியல் கட்சிகள், ஆர்வலர்கள், புலம் பெயர்ந்த மக்கள்,  தமிழக இளையவர்கள் , அனைத்துலக  ஊடகங்கள் உள்ளிட்ட எல்லோர் மத்தியிலும் ஒரு பொதுவான கேள்வி எழுந்தது. அது என்னவெனில்,  சிறிலங்காவில் இனி வரும் காலங்களில் தமிழ் மக்களது நிலை என்ன, என்பது தான்.

இந்த கேள்வி புதிய தொரு அரசியல் தெளிவை நாடி சென்றுள்ளது. அரசியல் யாப்பு மீறப்பட்டுள்ளது, மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார். தமிழர்கள் சார்பாக ஒரு நல்ல தலைமைத்துவம் இல்லை. தற்போது உள்ள மென்போக்கான தலைமைத்துவத்தில் பலருக்கும் நம்பிக்கை இருப்பதாக தெரியவில்லை .

அதேவேளை தமிழ் நாட்டிலும் கூட, தற்போது உள்ள ஆட்சித்தலைமை ஆளுமை நிறைந்த குணாதிசயங்களை கொண்டதாக தெரியவில்லை.

பூகோளத்தில்,  இலங்கைத்தீவு உலக கவனத்தை ஈர்க்கும் நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச தலையீடுகள் அந்த தீவில் உள்ளன

இந்த அரசியல் நிலையை  புலம் பெயர்ந்த மக்களுக்கும்  தமிழ்நாட்டிற்கும்  எடுத்து செல்வதில் நவீன கால சர்வதேச  ஊடகங்களும் சமூகத் தளங்களும் கணம் தவறாது செய்திகளை பரப்பி வருவது மிகவும் சுவாரஸ்யமானதாகும்.

பல்வேறு சிறு சிறு நிகழ்வுகளையும் உள்நாட்டு அரசியலில் இருந்து திசை திருப்பும் நோக்குடன் ஒவ்வொரு ஒளிபரப்பு நிறுவனங்களும் செய்தியாகவும் விவாதமாகவும் நடத்தி வந்த நிலையில், அனைத்தையும் நிறுத்தி கொழும்பு அரசியலில் கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டது.

சர்வதேச நாடுகளின் பாராளுமன்றங்களிலும் கூட இந்த அரசியல் மாற்றம் முக்கிய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகள் மீண்டும் தமிழர்களின் நிவர்த்தி செய்யப்படாத அபிலாசைகள் மேசைமேல் எடுத்துப் போடப்பட்டது போன்ற ஒரு எண்ணப்பாட்டை தோற்றுவித்துள்ளது.

புதிய பல இளம் ஆய்வாளர்கள் துணிவுடன் தமது எண்ணக் கருத்துகளை வெளிப்படையாக எடுத்தாள்வது வர வேற்கத்தக்கது. அதேபோல மூத்த ஆய்வாளர்கள் மதிப்பளிக்கப்பட்டு  அவர்களது உளக் கிடைக்கைகளை வெளிப்படுத்தவும் அனுபவங்களை பாடமாக கொண்டு புதிய ஆய்வாளர்களுக்கு மூலோபாய பாதைகளை எடுத்துக்காட்டவும் இந்த சிறிலங்கா  குளறுபடி ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது

அதற்கும் அடுத்து கூட்டு சிந்தனை ஒன்று முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் பிறந்திருப்பதையும் இது காட்டுகிறது. தமிழ் நாட்டில் தமிழர்கள் மத்தியில் தமது மொழி பண்பாடு குறித்த பாதுகாப்பு  சிந்தனை எழுந்திருக்கும் அதேவேளை ஈழத்தமிழர்கள் கடந்த எழுபது வருடங்களாக ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பது குறித்த சிந்தனையும் எழுந்திருக்கிறது.

பிராந்திய அளவில் தெற்காசியாவில் தமிழின பாதுகாப்பும் அந்த இனம் தனது அடையாளத்தை தக்க வைத்து கொள்வதற்கும் ஆன புதிய ஒரு சிந்தனை ஓட்டம் இது என தெரிகிறது . அதற்கான தேவையை புதிய தலைமுறை ஒன்று தனது கைகளில் எடுத்து செயலாற்றி வேண்டிய நிலையை உணர்ந்திருப்பது முக்கியமானதாகும்.

தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் எம் கே ஸ்ராலின் அவர்கள் காவி உடைக்கெதிராக எழுப்பிய அறை கூவலும் அனைத்தொடர்ந்து. சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது ஈழத்தமிழர்கள் அரசியல் பாதுகாப்பு குறித்த கவனமும் இங்கே குறிப்பிட தக்கது.

இரவோடு இரவாக அரங்கேறிய ஆட்சிக்கவிழ்ப்பு நாடகம் ஏற்கனவே கடலோரப் பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் தமிழர்களை மீண்டும் நின்மதியற்ற வாழ்கைக்கு இட்டு சென்றுள்ளதுடன் ஈழத்தில் தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளது குறித்து தனது கவலையை ஸ்ராலின் அவர்கள் வெளியிட்டிருந்தார்.

சிறிலங்காவில் புதிதாக தலைமை ஏற்றுள்ள ராஜபக்ச அவர்கள் இந்திய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு, சீன ஆதரவு கொள்கையை கொண்டவர் என்ற பொதுவான ஒரு பார்வை சர்வதேச ஆய்வாளர்கள் மத்தியில் உள்ளது.

இத்தகைய சர்வதேச பார்வையின் மத்தியில் தமிழர் பாதுகாப்பு குறித்த புதிய விழிப்புணர்வின் பால் ஆர்வம் கொண்ட  இளம் தலை முறையினர் தமது U TUBE  தயாரிப்புகளில் அரசியல் வரலாற்றை மிக சிறிய சச்சரவாக குறுகிய காலஎல்லைக்குள் எமுந்த பிரச்சனையாக பார்க்க முனைவது கவனிக்கக் கூடியதாக உள்ளது.

உதாரணமாக 1987 ஆம் ஆண்டு இந்திய விமானப்படை விமானங்கள் சிறிலங்காவில் அத்துமீறி உணவுக்பொதிகளை போட்டதும், சிறிலங்காவின் இறையாண்மைக்கு மதிப்பளிக்காது  இந்தியப்படையினர் வந்திறங்கியமையும் சிங்கள மக்களுக்கு இந்தியா மீது வெறுப்பு ஏற்பட காரணமாயிற்று என்று சில ஆய்வாளர்கள் காரணம் கற்பிக்கின்றனர்.

மேலும் சிலர் ராஜபக்ச அவர்களது ஆட்சிகாலத்தின் போது ஜெனீவா மனித உரிமை விவகாரத்தில் இந்தியா ஒத்துழைக்காமையே எனவும்  இதனால் ராஜபக்ச, இந்திய எதிர்ப்பு அரசியல் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளார் எனவும் காரணம் கற்பிக்க முனைகின்றனர்.

ஆனால் இத்தகைய தற்காலிக காரணங்களை,  காரணம் காட்டுவதன் மூலம் தமிழர்களுக்கு இதை தவிர வேறு எந்த அரசியல் பிரச்சினையும் இல்லை என்று காட்ட எண்ணுவது சரியானதாக தெரியவில்லை.

சிங்கள பௌத்த தேசியவாதம் என்பது  இலங்கைத்தீவிலே பெரும்பான்மையாக இருக்கின்ற போதிலும், தெற்காசியாவில் தாம் சிறுபான்மையினர் என்ற குறுகிய மனோநிலையை கொண்டது.

இலங்கைத்தீவு அனைத்தையும் தனது ஆட்சிக்குள் வைத்து ஏனைய மத, மொழி, இனங்களை வெளியேற்றவதன் மூலமே சிங்கள பௌத்தம் பாதுகாப்பாக வாழ முடியும் என்ற மனப்பாங்கை கொண்டது.

தமிழினம் இலங்கையில் இந்தியாவுடன் இணைத்தே பார்க்கப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள்  தமிழ் நாட்டின் மொழி கலாச்சார தொடர்ச்சியை கொண்டவர்களாக இருப்பதால், தமிழர்கள்  சிங்கள பௌத்தத்தை அழித்து விட கூடிய சக்தியாக பார்க்கின்றனர்.

சிங்கள பௌத்தம், தேரவாத பெளத்த சிந்தனைகளை பின்பற்றும் ஒரு மதமாகும். தேரவாத பௌத்தம் பல சங்கங்களையும் , நிக்காய என்று கூறக்கூடிய தேரர்களின் தனித்துவமான அமைப்புகளையும் தனது சமயத் தலைமையாக கொண்டிருக்கிறது.

தேரவாத பௌத்தசிந்தனையின் படி தேரோக்கள் சாதாரண சிங்கள குடிமக்களின் சிந்தனை உருவாக்கத்தில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றனர். மொழி, பண்பாடு பாதுகாப்பு போன்றவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் ஆட்சி அதிகாரத்தில் அதிக செல்வாக்கு கொண்டவர்களாக தேரர்கள் திகழ்கின்றனர்.

ஆக சிறிலங்கா  ஒரு பௌத்த சிங்கள நாடு என்ற சிந்தனையும்  இந்தியா சிங்கள பௌத்ததிற்கு  எப்பொழுதும் ஆபத்தானது என்ற சிந்தனையும் சிங்கள மக்கள் மத்தியில் வேரூன்றி உள்ளது.

இந்த பின்புலத்தில் இந்தியாவுடன் என்றும் நண்பனாக இருப்பது போல் வெளித்தோற்றத்திற்கு காட்டிகொண்டாலும் தெற்காசியாவில் பெரிய நாடான இந்தியாவின் அரசியல் பொருளாதார பாதுகாப்பு ஏற்பாடுகளின் பலனாக  ஏற்படக்கூடிய தாக்கங்களில் இருந்து தன்னை பாதுகாக்கும் நடவடிக்கை களில் சிறிலங்கா  எப்பொழுதும் கவனம் செலுத்தி வருகிறது.

தெற்காசிய  பிராந்தியத்திலேயே இந்தியாவிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்வதன் பொருட்டு இந்தியாவின் வளர்ச்சிக்கும், அதன் பாதுகாப்பு முக்கியத்துவத்திற்கும் சவாலாக இருக்கக்கூடிய வல்லரசுகளுடன் துணைநிற்கும் வெளியுறவுக் கொள்கையை  வகுத்துக் கொள்வதில் சிறிலங்கா  என்றும் முனைப்புடன் செயற்பட்டு வந்துள்ளது.

அதன் பூகோள நிலை முக்கியத்துவத்தின் காரணமாக சிறிலங்கா  வகுத்துக் கொள்ளும் வெளியுறவுக் கொள்கைகளுக்கு இந்தியாவின் போட்டி வல்லரசுகள் மத்தியில் எப்பொழுதும் அதிக வரவேற்பு  பெறுவது கவனிக்கத்தக்கதாகும்.

இருந்த போதிலும் சிங்கள தேசம் தன்னை இந்தியாவின் நேரடி எதிர்ப்பு தன்மை கொண்ட நாடாக என்றும் வெளிக்காட்டி கொண்டது கிடையாது. பதிலாக சர்வதேச இராஜதந்திர நெறி முறைகளின் படி நாடுகளின்  இறையாண்மையை தனது கவசமான  முன்நிறுத்தி இந்தியாவை கையாளுகிறது.

2009 ஆம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சிறிலங்கா  அரச படைகளால் கொன்றொழிக்கப்பட்ட போதிலும்  தமிழ் நாட்டு மக்களின் எந்தவித கொந்தளிப்பையும் எடுபடாத வகையில் செய்யப்பட்டது,  மத்திய அரசின் ஊடாக இறையாண்மையின் பெயரால் கையாள கூடிய பலமே எனலாம்.

இந்தியாவை தனது பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்க கூடிய நாடாக எண்ணுகின்ற போதிலும் இந்தியாவிற்குள்ளேயே ஒருசில அலகுகளை தெரிந்தெடுத்து சிறிலங்கா  தனது நட்பு கைகளாக பயன்படுத்துகிறது.

இவற்றில் அடிப்படை திராவிட-ஆரிய இன கோட்பாட்டு  வேறுபாட்டையும், பிராமணீயம்-நாஸ்திக சுயமரியாதை கோட்பாட்டு வேறுபாடுகளையும், இந்திய அரசியல் கட்சி வேறுபாடுகளையும் பௌத்த சிங்களம் நேரம் காலம் அறிந்து தேவைக்கு ஏற்றாற்போல் பயன்படுத்துகிறது.

நேரகாலத்திற்கு ஏற்றவகையில் பேசும் விவகாரத்தில் செய்தி தகவல் காரணிகளை மாற்றி அமைத்தும்  வரலாற்றினை திரிபு படுத்தியும்   நுண்ணிய யுக்திகளாக கையாளும் விதத்தில்  கொழும்பு இராஜதந்திரம் இதுவரை காலமும் இந்திய- இலங்கை உறவு விவகாரத்தில் வெற்றியே கண்டு வந்துள்ளது.

சிறிலங்காவில் ஆட்சிக்கு வரும் எந்த அரசியல்  கட்சியும் பௌத்த சிங்கள தேசியவாதத்தின் செல்வாக்கின் பேரிலேயே ஆட்சி செய்ய முடியும் என்றவகையில் ,   பௌத்த சிங்கள தேசியவாதத்தின் பாதுகாப்பும், இந்திய எதிர்ப்புமே அடிப்படை சிறிலங்காவின் நகர்வாக இருக்கும் என்பதில் இங்கே சந்தேகம் எதுவும் இல்லை.

பொருளாதார நலன் என்பதை மையமாக வைத்து பார்த்தாலும் அதீத கடன் பளுவின் பின்விளைவுகளை எதிர் நோக்க வேண்டும் என்ற கோட்பாட்டை தெரிந்து கொள்ளாத ஒரு அரசா சிறிலங்கா  என்ற கேள்வி எழுகிறது.

சீனாவிடம் அதிக கடன் பெற்று கொண்டதே இந்தியாவின் பிராந்திய வட்டத்திற்குள் வைத்து பேரம் பேசி கொள்ளலாம் என்ற துணிவுடனேயே  என்பதை காணக் கூடியதாக உள்ளது.

கடந்த காலத்தில் சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களிடமும் மேலைநாடுகளிடமும் வாங்கிய அதிக தொகை கடன்கள் யாவும் விடுதலைப்புலிகளை அழிக்கும் யுத்தத்தில் முடிவடைந்ததாகவும், சீனாவின் பலம் சிறிலங்காவில் அதிகரிப்தை தடுக்க வேண்டிய நிலையையும் முன்நிறுத்தி கடன் தொகைகளில் இருந்து தன்னை விடுவித்து கொண்ட அனுபவம் ஏற்கனவே சிறிலங்காவுடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆக இன்று இந்தியாவின்  பிராந்திய பாதுகாப்பிற்கு சவாலாக சீனாவின் நகர்வுகளை  சிறிலங்காவில் மாறி மாறி  ஆட்சிக்கு வந்திருந்த  இரண்டு அரசாங்கம்களுமே தெரிந்து கொண்டே ஏற்றுக் கொண்டு உள்வாங்கி உள்ளன.  இதனை இந்திய மத்திய அரசு தடுத்துவிட முடியாது என்பதை கண்கூடாக  கண்டு வருகிறோம்.

அது பாரதீய சனதா கட்சி யாக இருந்தாலும் சரி அகில இந்திய காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, சிறிலங்கா  தனது சிங்கள தேசியவாத பாதுகாப்பு சிந்தனையிலிருந்து விலகியதாக தெரியவில்லை

இந்த நகர்வுகளை இந்திய அரசின்   நட்பு கைகளான நாடாளுமன்ற உயர் சபை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி   போன்றவர்களால் கூட கையாள முடியவில்லை என்பது முக்கியமானது.

2015 ஆம் ஆண்டு வரை சிறிலங்கா  அரசாங்கத்தை நடத்திய மகிந்த ராஜபக்சவின்  நண்பராக இருந்தவர் சுப்ரமணியன் சுவாமி. அந்த காலப்பகுதியிலே கொழும்பில் திறந்த வாகனத்தில் வெளிப்படையாக உலா வரக்கூடிய ஒரே ஒரு இந்திய அரசியல் தலைவர் என பெயர் பெற்றவர் அவர்.

சிறிலங்காவின் யுத்த வெற்றி பரப்புரை கூட்டங்களில் எல்லாம் பங்குபற்றி உரையாற்றியவர். இவர் கூட மகிந்த ராஜபக்சவின் சீன சார்பு நிலையை மாற்ற முடியவில்லை என்பது இந்திய ஆளும் இந்து மேலதிக்க வாதம் சிங்கள பௌத்தத்திடம் தோற்று விட்டதோ என்ற கேள்வியை  எழுப்புகிறது .

இந்த நிலையை நோக்கிய சிந்தனை சிறிலங்காவை கைக்குள் கொண்டு வருவதற்கு  இந்தியா படும் அவஸ்தையை வைத்தே எடுத்து கொள்ளப்படுகிறது. தமிழர்களின் அழுத்த பலம் குறைந்ததும் சிறிலங்காவுக்கு இந்தியாவின் தேவை அற்ற நிலையையே இது எடுத்து காட்டுகிறது.

இந்த வகையில் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து புதிய சிந்தனைகள் எழுவது சரியானதாகவே தெரிகிறது. அரசியல் கட்சிகளின் செல்வாக்குகளுக்கு அப்பால் அரசுகளின் கட்டுப்பாடுகளுக்கு  அப்பால் தனித்துவமான தமிழர் பாதுகாப்பு குறித்து சிந்திக்க வேண்டிய தேவையை இது வெளிப்படையாக உணர்த்துகிறது.

-லண்டனில் இருந்து ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி

TAGS: