ஸ்ரீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய விசாரணை அதிகாரி நிசாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு இரத்துசெய்துள்ளது.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் இதனை இன்று தெரிவித்துள்ளது.
முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்த, ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்கள் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான நிசாந்த சில்வா, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்றைய தினம் இதற்கான அறிவித்தலை வெளியிட்டதை அடுத்து, இந்த விடயம் அரசியல் மற்றும், மனித உரிமை அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நிசாந்த சில்வாவின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், நேற்றைய தினம் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததுடன், உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் சங்கம் மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் என்பன ஊடக அறிக்கைகளை வெளியிட்டு இந்த விடயத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டன.
இதனையடுத்தே நிசாந்த சில்வாவுக்கு, வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு இரத்துசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-athirvu.in