காரைதீவில் ஆலயம் அருகே மீண்டும் மாட்டெலும்புகள் வீசப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதட்டமும் நிலவியுள்ளது. காரைதீவுக் கிராமத்தின் தென்கோடியின் கடற்கரைப்பிரதேசத்தில் அமைந்துள்ள பத்திரகாளியம்பாள் ஆலயமருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காரைதீவு பத்திரகாளியம்பாள் ஆலயமருகே அதிகளவான மாட்டெலும்புகள் இனந்தெரியாத விசமிகளால் வீசப்படுவது இது முதற்றடவையல்ல. இது 4-வது தடவையாகும்.
சம்பவத்தை கேள்விப்பட்டதும் மக்கள் ஒன்றுகூடினர். பதட்டம் நிலவியது. உடனடியாக காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் மு.காண்டீபன் ஸ்தலத்திற்கு விரைந்து தவிசாளருக்கு தகவலை வழங்கினார்.
காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் சம்பவ இடத்திற்கு விரைந்தது பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த தவிசாளர்…
இது இந்துக்களின் புனித தினத்தில் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு இனவிரோதசெயற்பாடாகும். இரு இனங்களிடையே வேண்டுமென்றே பகைமையை மூட்டிவிடும் ஒரு ஈனச்செயற்பாடாகவே இதனைப்பார்க்கிறேன்.
இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்ததுடன் ஆத்திரப்பட்டுள்ளனர். மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இங்கு நிலவிய பதட்டத்தில் இரு இனங்களிடையே முறுகல்நிலை தோன்றுவதற்கு வாய்ப்பிருந்ததாக தெரிவித்தார்.
இது 4-வது தடவையாக இடம்பெற்றிருக்கிறது. இன்னமும் பொறுமை காக்கமுடியாது. எனவே பொலிசார் பக்கச்சார்பின்றி விசாரணை நடாத்தி குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தி இந்துக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றார். உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிசார் தவிசாளரிடம் தெரிவித்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் வீரமுனை கிராமத்திலும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-athirvu.in