வீரத்தலைவனின் பேருரை ஒலிக்கும்! மாவீரர்களுக்காய் சுடர்கள் மிலாசும்!!

இது கார்த்திகை மாதம். தமிழர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான காலம். தமிழீழ விடுதலைக்காக களமாடிய வேங்கைகளின் நினைவுக்காலங்கள். அவர்களின் நினைவுகளை ஈழத் தமிழ் மக்கள் நெஞ்சில் நிறைத்து அஞ்சலிக்கும் காலம். எமது வீரத்தலைவனின் பேருரை ஒலிக்கும்காலம். மாவீரர்களுக்காய் சுடர்கள் மிலாசும் காலம். முப்பதாண்டுகளுக்கு மேலாய் சிங்கள அரசுக்கு அடி வயிறு கலக்கிய காலமும் இதுவே. ஆம் மாவீரர்களை நினைவுகூறும் மாவீரர் வாரம் இது.

“…இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது..” -தலைவர் பிரபாகரன்.
(2008 மாவீரர் தின உரை)

இன்றைய தினம், சிங்கள அரசின் தகவல் திணைக்களம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மாவீரர்களை நினைவுகூறும் நிகழ்வுகளுக்கு அரசாங்கம் அனுமதி எதனையும் அளிக்கவில்லை என்றும் அனுமதி அளித்ததாக சொல்லப்படும் பிரசாரங்களில் உண்மையில்லை என்றும் கூறியுள்ளது. முதலில் சிங்கள அரசின் தகவல் திணைக்களம் மாவீரர்களை மாவீரர்கள் என்று அழைத்தமைக்கு எங்கள் நன்றிகள். இன்று சிங்கள தலைவர்கள் மாவீரர்களை நிராகரித்தாலும் மாவீரர்கள் என்றுதான் அழைக்கிறார்கள்.

மாவீரர்கள் சிங்கள அரசாலும், சிங்கள அரசியல் தலைவர்களாலும் துளியவும் கொச்சைப்படுத்த முடியாத ஆன்மாக்கள். அவர்கள் தமிழீழம் என்ற உன்னத இலட்சியத்திற்காக போராடி மாண்டவர்கள். தமது சொந்தங்களை, சொத்துக்களை, ஆசைகளை, பாசங்களை, இளைமையை, எல்லாவற்றையுமே துறந்து தமிழீழ மக்களின் விடுதலை ஒன்றுக்காக, தமிழீழ மக்களின் தேசத்திற்காக தம்மை தாமே ஆகுதி ஆக்கிக் கொண்ட உன்னத பிறப்புக்கள்.

இந்தக் கார்த்திகையில் மழை பொழிகிறது என்றால் அது எங்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவே. எங்கள் மண்ணில் புற்கள் முளைக்கிறது என்றால் அவர்களின் தியாகத்தினாலேயே. தமிழீழ மக்களை ஒன்றிணைக்கும் உன்னத இடம் மாவீரர் துயிலும் இல்லம். உலகில் போராட்டத்தில் மாண்டுபோன வீரர்களுக்காக அவர்களின் வித்துடல்களை விதையுடல்களாக, அவர்கள் உறங்கும் இடத்தை துயிலும் இல்லமாக, ஒரு புனித நினைவிடமாக உருவாக்கியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழீழத் தேசியத் தலைவர்.

உலகில் எந்த ஒரு அரசுக்கும் தோன்றாத எண்ணம் இது. உலகில் எந்த ஒரு போராளி இயக்கத்திற்கும் தோன்றாத சிந்தனை இது. அவன்தான் பிரபாகரன். அது தான் தமிழீழ மண். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தடம் புறாமல் செல்லுவதற்கு அடிப்படையான அத்திவாரங்களும் வழியும் மாவீரர்கள்தான். மாவீரர்களுக்கு துரோகம் இழைக்கும் எவரும் தமிழர்களாகவோ, மனிதர்களாகவோ இருக்க மாட்டார்கள். மாவீரர்கள் எங்கள் தெய்வங்கள்.

நாம் இந்த உலகில் தெய்வங்களை பார்த்தில்லை. ஆனால் மாவீரர்களைப் பார்திருக்கிறோம். வீர, சூர அரசர்களை பார்த்ததில்லை. ஆனால் தலைவன் பிரபாகரனைப் பார்த்திருக்கிறோம். அந்த மாவீரத் தெய்வங்களின் வழிகாட்டலில் தமிழீழம் வெல்வோம். தமிழீழ மக்கள் நாம் பயணிப்போம். ஆயிரம் தடைகள், தோல்விகள், துன்பங்கள் வந்தாலும் மாவீரர்களை மனதில் கொண்டால், எம் இலட்சியப் பாதை வெளிச்சம் பெறும். எங்கள் வாழ்வு எழுச்சி பெறும்.

மாவீரர் துயிலும் இல்லங்களின் சக்தியை அறிந்த சிங்கள அரசு தனது படைகளை கொண்டு துயிலும் இல்லங்களை அழித்தது. 1995இல் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியிருந்த நாட்களில் கோப்பாய் துயிலும் இல்லம் அழிக்கப்பட்டது. தமிழர் தாயகத்தில் மிகவும் பெரிய துயிலும் இல்லமாக பல மாவீரர்கள் அங்கு விதைக்கப்பட்டிருக்கிறார்கள். சமாதான காலத்தில் கோப்பாய் துயிலும் இல்லம் மீண்டும் புனரமைக்கப்பட்டது.

2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை காலத்துடன் தமிழீழத்தின் அனைத்து துயிலும் இல்லங்களும் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டன. உண்மையில், போரில் தமிழ் மக்களை எவ்வாறு சிங்கள அரச படைகள் கொன்றதோ அவ்வாறே துயிலும் இல்லங்களையும் அழித்தது. அதுவும் ஒரு இனப்படுகொலையே. தமிழீழ வரலாற்றில் துயிலும் இல்லங்களை அழித்த கொடூரத்தை மக்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். அப்படி ஒரு வரலாற்று பேரழிவை சிங்கள அரசு செய்தது.

கடந்த மகிந்த ராஜபக்ச காலத்தில் மாவீரர்களை நினைவுகூர்வதை சிங்கள அரசு கடுமையாக தடுத்தது. அன்றைய நாட்களில் வீட்டில் விளக்கு கூட ஏற்ற முடியாத நிலை இருந்தது. ஆலயங்களில் மணி அடிக்க தடை விதிக்கப்பட்டது. தமிழீழத்தையே நவம்பர் 27 அன்று சிங்கள அரசு முற்றுகையிட்டு ஒரு இன அழிப்பு போரைப் பேல நடாத்தியது. ஆனால் அந்த சூழலிலும் மாவீரர்களுக்காக தமிழீழத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டன. ஒவ்வொரு வீட்டிலும் சுடர்கள் மிலாசின.

கடந்த 2016இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர், துயிலும் இல்லங்கள் சீரமைக்கப்பட்டு, 2009இற்கு முன்னர் எவ்வாறு மாவீரர் நாள் நினைவுகூறப்பட்டதோ அவ்வாறே நிகழ்வுகள் இடம்பெற்றன. சிங்கள அரசுக்கும் சில சிங்களப் பேரினவாதிகளுக்கும் ஏன், உலகின் சில நாடுகளுக்கும் தமிழீழ மக்கள் சொன்ன சேதியே மாவீரர் நாள் நிகழ்வு. அது மாபெரும் அறைகூவல். ஆயிரம் அழிவுகளை கடந்தும் எங்கள் தேச விடுதலைக்காக மாண்ட வீரர்களையும் அவர்களின் உன்னத இலட்சியத்தையும் மறவோம் என உலகிற்கு உணர்த்திய தருணங்கள்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் மீண்டும் ஏற்பட்டு, மகிந்த ராஜபக்ச என்ற கொடுங்கோலன் மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ள இன்றைய நாட்களில் வரும் இந்த வருட மாவீரர் தினம், தமிழீழ மக்களின் போர்க்குணத்தையும் புனிதர்களை வழிபடும் மாண்பையும் எடுத்துரைக்கும் புதிய பொறுப்பை கையளித்துள்ளது. கடுமையான சிக்கல் நிறைந்த சூழல் என்ற போதும் தமிழீழ மக்கள் பின்வாங்க மாட்டார்கள். ஒவ்வொரு துயிலும் இல்லத்திலும் சுயாதீனமாக மாவீரர்நாள் நிகழ்வுகள் மக்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இம்முறையும் எழுச்சிகரமாக தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறும். இன்னமும் வெளிப்படையாக மாவீரர் நாளை சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. அத்துடன் புலிகளின் சின்னங்கள், கொடியை பயன்படுத்த தடை என்று அறிவித்துள்ளதுடன், மாவீரர் நாளை கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒருபோதும் குறிப்பிடவில்லை என்றும் அறிவித்துள்ளது. ஆனால் சிங்கள அரசு மாவீரர் நாளை ஒரு நாள் அங்கீகரிக்கும். நிச்சயமாக அந்த நாளில்தான் தமிழர் தேசம் விடியும். தமிழீழம் மலரும். எந்த தடைகள் வந்தாலும் மாவீரர்நாளும் மாவீரர்களின் கனவும் கைவிடப்படாது. உலகம் உள்ளவரை தொடரும்.

ஆசிரியர்,
ஈழம்நியூஸ்.
24.11.2018.

-eelamnews.co.uk

TAGS: