பிரபாகரனுக்குப் பின் : இலங்கையில் ஈழ தமிழர்கள் நிலை?

இலங்கை, இந்தியா மட்டுமல்ல உலகமே உற்று நோக்கும் பிரபாகரனின் மாவீரர் தின உரை மட்டுமல்ல, பிரபாகரனே இல்லாத ஒன்பதாவது ஆண்டு மாவீரர் தின நிகழ்வுகள் ஈழத்திலும் இந்தியாவிலும் புலம் பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ஏற்பாடாகி கொண்டிருக்கின்றது .

பிரபாகரன் இல்லையென்றே தெரிந்தும் மீண்டும் வருவாரென கருத்து சொல்லிக்கொண்டிருந்த தமிழ் தலைவர்களும் அவர் இருக்கிறாரா இல்லையா என்று குழப்பத்திலிருந்த மக்களுக்கும் அவர் இல்லை என்பது இப்போ தெளிவாகி விட்டிருக்கலாம் ,இல்லை அவர் வருவார் என சொல்லிக்கொண்டிருப்பவர்களை அப்படியே கடந்துபோக வேண்டிய நிலைஏனெனில் அவர்களின் தேவைகள் வேறானவை.

இவற்றையெல்லாம் விட்டு விடுவோம் ,அவர் இல்லாத இத்தனையாண்டுகள் ஈழ தமிழர் மத்தியில் எப்படியிருக்கின்றது . சொல்லப்போனால் யுத்தம் இல்லை, இழப்புகள் இல்லை, யுத்த சத்தம் ஓய்ந்து விட்டிருக்கின்றது . ஆனால் மக்கள் மனதில் நிம்மதியிருக்கின்றதா என்றால் சிலர் எதோ நிம்மதியாக வாழ்கிறோம் என்கிறார்கள், யுத்தம் இல்லைதான் ஆனால் நிம்மதியில்லாத வாழ்வு என்கிறார்கள் சிலர், யுத்தம் இல்லாத வாழ்வு நிம்மதியாகத்தானே இருக்க வேண்டும். ஏன் நிம்மதியில்லை ?

யுத்தம் இருந்த போது வெளியில் இருந்து பயமிருந்தது. அதனை எப்படியும் புலிகள் தடுத்து விடுவார்கள் என்கிற நிம்மதியும் இருந்தது அல்லது அதற்கு மாற்றாக ஏதாவது செய்வார்கள் என்கிற நம்பிக்கையிருந்தது. இப்போ பயம் உள்ளேயிருக்கிறது , யுத்த காலம் முடிவடைந்த பின்னர் ஊரில் நடந்த பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், பெருகிவிட்ட போதைப்பொருள் பாவனை, அதனால் நடக்கும் அன்றாட வன்முறைகள், நிர்வாக சீர்கேடு.

இவை எதையும் வெளியிலிருந்து யாரும் வந்து செய்யவில்லை அனைத்துமே உள்ளூரில் இருப்பவர்களால்தான் நடக்கின்றது இப்படியொரு தரப்பு. யுத்தம் நடந்துகொண்டிருந்தால் எங்கள் பிள்ளைகள் யுத்தத்துக்காக கொண்டு செல்லப்பட்டிருப்பார்கள், அவர்கள் அப்படி கொண்டு செல்லப்பட்டு இறந்து போவதை விட எங்களோடு எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும் என்கிறது மறு தரப்பு.

விடுதலை புலிகள் பிரபாகரன்

இது இப்படியென்றால் அரசியல் பற்றி பார்த்தால் புலிகளுக்கு அரசியல் தெரியாது அல்லது அவர்கள் அரசியலே செய்யவில்லை என்கிற ஒரு குற்றச்சாட்டு உண்டு .

அவர்களுக்கு அரசியல் தெரியாதேன்றோ செய்யவில்லை என்றோ சொல்லிவிட முடியாது. அவர்கள் செய்த அரசியலானது ஒவ்வொரு தடவையும் பேச்சுவார்த்தை காலங்களில் எதிர் தரப்பை ஏமாற்ற மட்டுமே பயன்படுத்தினார்கள். அதனால் பல தடவை வெற்றி பெற்றாலும் அதில் மாற்றங்கள் கொண்டு வராமல் விட்டதால் அதே ஏமாற்று அரசியலால் தோற்கடிக்கப் பட்டார்கள்.

சனநாயக அரசியல் மூலம் தமிழீழத்தை பெற்றுவிட முடியாதென்பதை பிரபாகரன் உறுதியாக நம்பினார். அப்போ ஆயுதப்போராட்டம் மூலமே ஈழத்தை பெற்றுவிடலாமென அவர் இறுதிவரை நம்பினாரா என்றால் இறுதி யுத்த முடிவுகளின் அனுபவங்களூடாக பார்க்கும்போது அதுவுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும் .

கொண்ட கொள்கைக்காக உயிரை விலையாக கொடுத்தாலும் எந்தவித சமரசத்தையும் செய்துகொள்ள விரும்பவில்லை. ஒரு மக்கள் தலைவனாக அந்த மக்களையும் அவர்களையும் பாதுகாக்கும் பொறுப்புள்ள ஒரு தலைவனாக உலக உள்ளூர் அரசியலுக்குள் உள்ள நெளிவு சுளிவுகளுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து மக்களை காப்பாற்றி அவர்களின் தேவைகளை ஓரளவுக்கேனும் நிறைவேற்றுபவனே உண்மையான மக்கள் தலைவன். அந்த விடயத்தில் பிரபாகரன் தவறிழைத்து விட்டார் என்கிற கருத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே .

ஆனாலும் அவர்கள் தமிழர்களுக்கு எந்த அரசியல் வழிகாட்டலையும் செய்து விடாமல் போகவில்லை, 2001-ஆம் ஆண்டு தமிழர்களுக்கு ஒரு பலமான அரசியல் தளம் வேண்டுமென்கிற நோக்கோடு கிழக்குப்பத்திரிகையாளர் சங்கத்தின் முயற்சியால் நான்கு கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை 2002-ஆம் ஆண்டு உள்வாங்கிய புலிகள் அமைப்பு சன நாயக அரசியல் ஒன்றை ஈழத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டி விட்டே சென்றுள்ளார்கள்.

வேலுப்பிள்ளை பிரபாகன்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இன்று இலங்கையில் எதிர் கட்சியாக அமர்ந்திருந்தாலும் தமிழர் பகுதிகளில் புனரமைப்பு புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தாமையால் வேலை வாய்ப்பின்மை அபிவிருத்தி என்று எதுவும் பெரியளவில் நடக்காதது மட்டுமல்ல தமிழருக்கான தீர்வுத்திட்டத்தை பெற்றுக்கொள முடியாமல் கால விரயம் செய்கிறார்கள் என்று அவர்கள் மீது காட்டமான விமர்சனங்களும் கோபமும் இருந்தாலும் இன்றுவரை மக்கள் தொடர்ந்தும் அவர்களுக்கே ஆதரவளிப்பது புலிகளால் கை காட்டி விடப்பட்ட அமைப்பு என்கிறதும் முக்கிய காரணம் .

ஆனாலும் இலங்கை தீவில் இறுக்கமான மக்கள் எப்போதும் அச்சத்துடனும் யுத்தத்தில் இறந்துபோன மக்களுக்கோ மாவீரர்களுக்கோ பகிரங்கமாக ஒரு அஞ்சலி கூட செலுத்தமுடியாத மகிந்த ராஜபக்சவின் அரசை மாற்றியமைத்து மக்கள் மனங்களிலிருந்த அச்சத்தை போக்கியத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்கு முக்கியமானது என்பதை யாரும் மறுத்து விடவும் முடியாது.

முப்பதாண்டு கால கொடிய யுத்தத்தால் இரண்டு நாடுகளாக பிரிந்து கிடந்த தேசத்தில் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து தீர்வுகளை பெற்றுக்கொள்ள கால அவகாசம் எடுக்கும் என்கிற யதார்த்தத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் .

எது எப்படியோஇந்த வருடமும் பிரபாகரனோ அவரது மாவீரர் தின உரையோ வரப்போவதில்லை என அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அவரை மக்கள் மனது தேடிக்கொண்டேயிருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். நிச்சயமாக அது இன்னொரு ஆயுதப்போராட்டதுக்காக அல்ல… சுயநலமில்லாத கொண்ட கொள்கைக்காக இறுதிவரை போராடும் நல்லவொரு தலைமை வேண்டுமென்பதற்காக. -BBC_Tamil

TAGS: