ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் வடக்கில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நாமும் பேச வேண்டியது அவசியமாகியுள்ளது. கருணா நித்திரையில் இருந்து எழுந்து மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார். இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
திடீரென உத்வேகம் பெற்றுள்ள நபர்கள் தொடர்பாக உண்மையில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு பின்னர் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி அணியினர் தற்போது உத்வேகம் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தாக்குதல் ஒன்று நடந்துள்ளது. அமைச்சர் என்று கூறிக்கொள்ளும் ஒருவர் “நான் மறுபடியும் வந்துட்டேனு செல்லு”என்று தமிழ் திரைப்பட வசனத்தை கூறுகிறார்.
அது மக்களை அச்சுறுத்த கூறும் வார்த்தை. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என சுமந்திரன் குறிப்பிடடுள்ளார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிப்பதாகவும் நிலைமையை தெளிவுப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
அதேவேளை மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் காவலரணில் இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கருணா நடவடிக்கையின் கீழ் நடந்த சம்பவம் என நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பை திசை திருப்ப இனவாத கலவரம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியும் இதன் பின்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் மட்டக்களப்பு வவுணதீவில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் விசேட பொலிஸ் குழு என்பன மட்டக்களப்பு விரைந்துள்ளதுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
-eelamnews.co.uk