மட்டகளப்பு வவுணதீவு பகுதியில் நேற்று அதிகாலை பொலிஸ் காவலரண் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியாகியிருந்தமை அறிந்ததே.
இந்த தாக்குதல் தொடர்பில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அண்மையாக உள்ள பொலிஸ் காவலரணில் மூன்று பொலிசார்- இரண்டு தமிழ் பொலிசாரும், ஒரு சிங்கள பொலிஸ்காரரும்- கடமையிலிருப்பது வழக்கம்.
அதில் காரைதீவை சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உடல்நலமின்மையால், காவலரண் பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டு, நள்ளிரவில் அங்கிருந்து திரும்பி சென்றுவிடுவது வழக்கம்.
சம்பவம் நடந்த தினத்தில் அதிகாலை 1.10 மணியளவில் அவர் கையொப்பமிட்டுவிட்டு திரும்பி சென்றதன் பின்னரே இந்த கொலைகள் நடந்துள்ளது.
சுமாரர் நால்வர் கொண்ட குழுவே தாக்குதலை நடத்தியிருக்கலாமென கருதப்படுகிறது.
காவலரணிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள கடை ஒன்றில் இருந்த சிசிடிவி கமெரா பதிவுகளில் அதிகாலை 2 மணிக்கு அண்மித்த சமயத்தில் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. எனினும் அவற்றின் இழக்க தகடுகள் தெளிவாக தெரியவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், உயிரிழந்த பொலிசாரின் உடல்கள் சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டது.
சிங்கள பொலிஸ்காரர் கத்தியால் குத்தப்பட்டும், கழுத்து வெட்டப்பட்டும் கொல்லப்பட்டுள்ளார். இதயம் வரை கத்தி பாய்ந்துள்ளது.
தமிழ் பொலிஸ்காரர் கைகள் பின்னால் கட்டப்பட்டு, நிலத்தில் முகம் குப்புற படுக்க வைத்து, பின்தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
தமிழ் பொலிஸ்காரரின் கை விரல்களில் எலும்புகள் முறிந்துள்ளன. ஆகையால் கொலை செய்ய வந்தவர்களுடன் இவர்கள் மோதியுள்ளமையும் தெரிய வந்துள்ளது.
பொலிசாரிடம் இருந்த ரிவோல்வர்களையும் தாக்குதலாளிகள் அபகரித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை வலயத்தில் மாவீரர்தினத்தை ஒழுங்கமைத்த அணி ஒன்று இடம்பிடித்துள்ளது.
குறித்த விசாரணையை மாவீரர் தினத்துடன் தொடர்பு படுத்தும் வகையில் சில சிங்கள ஊடகங்கள் எத்தனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-athirvu.in