யேமென் போர்: காயமடைந்த ஹூதி கிளர்ச்சியாளர்களை ஐ.நா. விமானம் மீட்கும்

யேமென் போரில் காயமடைந்த ஹூதி கிளர்ச்சியாளர்களை ஐ.நா. விமானம் ஒன்று மீட்கும் என்று அவர்களை எதிர்த்துப் போரிடும் சௌதி தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்துள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அது கூறியுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சானா நகரில் இருந்து திங்கள்கிழமை 50 காயமடைந்த கிளர்ச்சியாளர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஓமன் கொண்டு செல்லப்படுவர்.

சௌதி ஆதரவு பெற்ற அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்னும் சில தினங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போர் சமீக ஆண்டுகளில் ஏற்பட்டதிலேயே மிகப்பெரிய மனிதப் பேரிடரை ஏற்படுத்தியது.

யேமென்

சுமார் நான்கு ஆண்டுகளாக நடந்துவரும் இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல பத்து லட்சம் பேர் பட்டினியில் தள்ளப்படும் நிலைக்கு ஆளாயினர்.

“ஐ.நா. மீட்பு விமானம் ஒன்று சானா சர்வதேச விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை வரும். 50 காயமடைந்த கிளர்ச்சியாளர்கள், மூன்று யேமன் மருத்துவர்கள், ஓர் ஐ.நா. மருத்துவர், ஆகியோர் இந்த விமானத்தில் மஸ்கட் கொண்டுசெல்லப்படுவர்” என்று சௌதி கூட்டுப்படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

யேமெனுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கேட்டுக்கொண்டதற்கு இனங்கவும், ஸ்வீடனில் உள்ள பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவும் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டதாக அந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அதிபர் அப்தராபூ மன்சூர் தலைமையிலான யேமென் அரசுக்கும் , இரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆகியோர் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு ஐ.நா. முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்கள் நாட்டின் வடபகுதியில் பெரும்பான்மையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

ஜெனீவாவில் இந்த இரு தரப்புக்கும் இடையே கடந்த செப்டம்பரில் பேச்சுவார்த்தை நடக்க இருந்தது. ஆனால், ஹூதி கிளர்ச்சியாளர்கள் இதில் பங்கேற்க வராததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

யேமென்

ஏமனில் போர் ஏன்?

2015ம் ஆண்டு ஹூதி கிளர்ச்சியாளர்கள் யேமன் நாட்டின் மேற்குப் பகுதியில் பெரும்பகுதியைக் கைப்பற்றினர். இதையடுத்து, அதிபர் அப்துராபூ மன்சூர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

ஹூதி குழுவுக்குப் பின்னால் இரான் இருப்பதாக குற்றம்சாட்டிய சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட 9 அரபு நாடுகள் கூட்டாகச் சேர்ந்து யேமென் அரசாங்கத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டன.

கிளர்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த ஹொடைடா துறைமுகத்தில் சிக்கிக்கொண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களின் துயரங்கள் குறித்து கவலைகள் எழுந்தன.

இந்த மோதலில் குறைந்தது 6,600 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 10,560 பேர் காயமடைந்தனர் என்கிறது ஐ.நா. நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதாரப் பிரச்சனைகள் போன்ற தடுத்திருக்கக்கூடிய காரணங்களால் மேலும் பல்லாயிரம் பொதுமக்கள் இறந்தனர்.

இங்கு ஒவ்வொரு வாரமும் 10 ஆயிரம் பேர் புதிதாக காலரா பாதிப்புக்கு உள்ளாவதாக அக்டோபர் மாதம் உலக சுகாதார நிறுவனம் கூறியது. -BBC_Tamil