முன்னாள் போராளிகளை தேடியலையும் இராணுவம்; தனக்கென்ன போச்சென்று கூட்டமைப்பு எம்.பி-க்கள்!

மட்டக்களப்பு வவுணதீவு சோதனைச் சாவடி மீதான தாக்குதலுக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றிவளைப்பு தேடுதல்கள், வீதிச் சோதனைகள் வீடுகள் தோறும் சோதனை என;று பரவலாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

முன்நாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக முன்னாள் போராளிகள் மீதும் மாவீரர் தினத்தை நடத்தியவர்கள் மீதும் கொலைப்பலியைச் சுமத்தி அவர்களை கைது செய்து வருகின்றனர்.

அடுத்து என்ன நடக்கப்போகிறது? யார் கைது செய்யப்படுவார்கள்? என்ற அச்சத்தில் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கிறார்கள் மட்டக்களப்பு தமிழ் மக்களும் முன்னாள் போராளிகளும்.

இன்நிலையில் பாராளுமன்ற ஜனநாயகத்தை காப்பாற்ற போன த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் தாண்டியடி மாவீரர் தினத்திலும் மட்டக்களப்பில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள அடித்துப்பிடித்து நின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வவுணதீவு கொலைச் சம்பவம் நடைபெற்று ஐந்து நாட்கள் கடந்துள்ள நிலையில் மட்டக்களப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் வாய்திறக்காது இருப்பதுடன் பொதுமக்கள் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள கெடுபிடிகள் குறித்தோ வவுணதீவு படுவான்கரை மக்களின் நிலை குறித்தோ இன்றுவரை சென்று பார்வையிடவும் இல்லை நடவடிக்கை எடுக்கவும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுணதீவு சம்பவத்தை அப்பாவி முன்னாள் போராளிகள் மீது திணித்து அதன் ஊடாக விடுதலைப் புலிகள் மீள் உருவாகுவது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கி தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை இல்லாது செய்து அதன் ஊடாக தமிழ் இளைஞர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடைபெற்றுவரும் சம்பவங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டு காணது இருப்பது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ் மக்களின் பாதுகாப்பு குறித்து தமிழ் அரசியல் தலைவர்கள் அக்கறை இன்றி இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க போராடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஜனநாயகம் பாதிக்கப்படும் போதும் அப்பாவி தமிழர்கள் கைது செய்யப்படும் போதும் வேடிக்கை பார்ப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வீர வசனம் பேசி மகிந்தவுக்கு முட்டுக்கொடுக்கச் சம்மதித்து அரை அமைச்சராக மாறி அதிகாரத்தில் ஏறி அமர்ந்துள்ள உறுப்பினர் கூட இந்த விடயத்தில் அமைதிகாத்து வருவது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: