பொலீசார் மீதான தாக்குதலுக்கு இவர்கள்தான் காரணம்; விடுதலைப்புலிகள் கட்சி!

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களைய அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது.

மட்டக்களப்பு,கல்லடியில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பொன்று இன்று மாலை நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் க.இன்பராஜா,ஊடகப்பேச்சாளர் ஜோன்சன் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தெரிவிக்கையில்

கிழக்கு மாகாணத்தில் கருணா குழு பிள்ளையான் குழு புளெட், டெலோ ஜிகாத் முஸ்லிம் ஆயுதக்குழு உள்ளிட்ட அனைவரிடமும் ஆயுதங்கள் உண்டு அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அவர்களது ஆயுதங்களே வவுணதீவு போன்ற சம்பவங்களுக்கு காரணமாக உள்ளது

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இன்று முன்னாள் போராளிகளும் அவர்களின் குடும்பமும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதன்போது கடந்த 30ஆம் திகதி வவுணதீவில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாருக்கும் அஞ்சலி செய்யப்பட்டதை தொடர்ந்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் படுகொலை தொடர்பில் தமது கட்சி கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வண்ணம் அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி வேண்டுகோள்விடுத்துள்ளது.

குறித்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின்போது போராளிகள் பாதிக்கப்படுவது தொடர்பில் தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் முன்னாள் போராளிகள் மீதான விசாரணைகள் காரணமாக முன்னாள் போராளிகளும் அவர்களின் குடும்பமும் பெரும் அச்ச நிலையில் வாழ்வதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

முன்னாள் போராளிகள் இந்த நாட்டில் அச்சமற்ற சூழ்நிலையில் வாழும் சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

புலம்பெயர்ந்துவாழும் சிலர் மாவீரர் தினத்தின்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இவ்வாறான செயற்பாடுகளில் தாக்கம் செலுத்துவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மட்டக்களப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலமை இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள முன்னாள் போராளிகளை அச்சம்கொள்ளச்செய்துள்ளதாகவும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் வெளிப்படுத்தப்படும்போதே முன்னாள் போராளிகளின் அச்சம் நீக்கப்படும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

முன்னாள் போராகள் இன்று மீண்டும் ஆயுதம் தூக்கி போராடக்கூடிய மன நிலையில் இல்லை,யாரையும் சுட்டுக்கொல்லவேண்டிய தேவையும் இல்லையெனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் மீது சந்தேகம் கொண்டு அவர்களை கைது செய்வதை பாதுகாப்பு தரப்பினர் கைவிட்டு விட்டு வவுணதீவு சம்பவத்துடன் தொடர்பு பட்ட உண்மையான குற்றவாளிகளை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்ய வேண்டும்.

குறித்த சம்பவம் தொடர்பான நீதியானதும் உண்மையை கண்டுபிடிக்க கூடிய வகையில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.தற்போது முன்னாள் போராளிகள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்கள் முன்னாள் போராளிகளுடன் பேச அச்சப்படுகின்றனர்.

வவுணதீவு சம்பவத்திற்கும் முன்னாள் போராளிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு யாரையும் கொல்லவேண்டிய தேவையில்லை அவர் மிகுந்த கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசின் கடமை ஆனால் எதற்கெடுத்தாலும் முன்னாள் போராளிகளையே கைது செய்கின்ற நிலை காணப்படுகிறது. இந்த நாட்டிற்கு பிரச்சினை முன்னாள் போராளிகள் தான் என்றால் அவர்களை நாடு கடத்தி விடுங்கள். முன்னாள் போராளிகள் ஜனநாயக வழியில் அரசியல் ரீதியாக தங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும்.

என்பதற்காகவே நாங்கள் அரசியல் கட்சியை பதிவு செய்தோம். ஆனால் நாங்கள் அரசியல் ரீதியாக கூட இந்த நாட்டில் செயற்பட முடியாது உள்ளது. கடந்த முதலாம் திகதி மட்டக்களப்பிற்கு வாகனத்தில் வருகை தந்த எம்மை காத்தான்குடி பொலீசார் சுற்றி வளைத்து தீவிரவாதிகளை கைது செய்வது போன்று கைது செய்து வாகனத்திற்குள் தள்ளி ஏற்றினார்

எமது கட்சி அடையாள அட்டையை காட்டியும் எம்மை குற்றவாளிகளை போல் நடத்தினர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: