புதுக்குடியிருப்பு கைவேலியில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச்செயலகத்தில் இன்றைய (04) தினம் கனடா உயர் ஸ்தானிகர் டேவிட் மெகினனுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையேயான விஷேட சந்திப்பொன்று நடைபெற்றது.
ஐப்பசி 26-க்கு பின்னர் நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அசாதாரண நிலையில் போராளிகளது தற்போதைய பாதுகாப்பு மற்றும் இயல்பு நிலை தொடர்பில் கரிசனையுடன் உயர் ஸ்தானிகரால் கேட்டறியப்பட்டது.
தமிழர்களது பொருளாதார மேம்பாடு கனேடிய தமிழர்களது தாயகமக்கள் நலச்செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. தாயகத்தில் உள்ள 89000 பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களுக்கு கனடா அரசு விசேட நலன்சார் வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பிக்குமாறு எம்மால் கோரப்பட்டது.
அரசியல் கைதிகளின் விடுதலை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காத்திரமான பொறுப்புக்கூறல் தமிழர்களது கௌரவமான தீர்வு முயற்சிகளில் கனடா அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் போராளிகள் சார்பில் கோரப்பட்டது.
தமிழர்கள் அல்லலுற்று ஆக்கிரமிப்புக்களை தாண்டி புலம்பெயர்ந்து கனடாவில் தஞ்சமடைந்தபோது எமது மக்களை அரவணைத்து அவர்களது மொழி கலாச்சார வாழ்வியலில் பூரண சுதந்திரத்துடன் வாழவைத்தமைக்கு எமது தாயக மக்களின் சார்பில் கனடா அரசுக்கு போராளிகளால் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் இனநல்லினக்கமும் சகவாழ்வும் ஏற்படுத்தப்படும் வரை புலம்பெயர்ந்தோர் திருப்பி அனுப்பப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமெனவும் எம்மால் வலியுறுத்தப்பட்டது.
க.துளசி,
ஊடகப்பிரிவு,
ஜனநாயகபோராளிகள்கட்சி.
-athirvu.in