டிசம்பர் 8 பேரணியில் சினமூட்டுதல், தேச நிந்தனை பேச்சுகள், குழந்தைகள் இருக்கக்கூடாது, போலீஸ் நிபந்தனை

 

சனிக்கிழை நடத்தப்படும் ஐசெர்ட் எதிர்ப்பு பேரணியில் சினமூட்டுதல் மற்றும் தேச நிந்தனை பேச்சுகள் இருக்கக்கூடாது என்று போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேரணிக்குச் சென்று பொது ஒழுங்கிற்கு கெடுதல் விளைவிப்பவர்கள் மற்றும் தேச நிந்தனையானது என்று கருதப்படும் உரைகளை ஆற்றும் பேச்சாளர்கள் ஆகியோருக்கு எதிராக தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோலாலம்பூர் போலீஸ் அதிகாரி மஸ்லான் லாஸிம் கூறினார்.

பேரணியில் பங்கேற்பவர்கள் குழந்தைகளை தங்களோடு கொண்டுவர வேண்டாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

பிற்பகல் மணி 2.00-க்கு தொடங்கும் அப்பேரணி மாலை மணி 6.00-க்கு நிறைவு பெறாவிட்டால், அப்பேரணியின் ஏற்பாட்டாளர்கள் அழைக்கப்படுவார்கள் என்று மாநகர் போலீஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார்.

டாத்தாரான் மெர்தேக்காவிற்கு இட்டுச் செல்லும் ஆறு சாலைகள் – ஜாலான் லெபோ பாசார், ஜாலான் துன் பேராக், ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான், ஜாலான் ராஜா லாவுட் மற்றும் ஜாலான் டத்தோ ஓன் – சனிக்கிழமை காலை மணி 6.00-க்கு மூடப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இனவாத நெருக்கடி ஏற்படும் சாத்தியம் இருப்பதாலும் இந்த ஐசெர்ட்டை அங்கீகரிப்பதில்லை என்று அரசாங்கம் முடிவு செய்து விட்டதாலும், இந்தப் பேரணியை இரத்து செய்ய பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தப் பேரணி எந்த ஓர் இனத்தையும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பேரணி அமைதியானதாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

500,000-க்கும் கூடுதலான மக்கள் இப்பேரணியில் பங்கேற்பார்கள் என்று பாஸ் எதிர்பாக்கிறது. இப்பேரணிக்கு அம்னோ ஆதரவு அளித்துள்ளது.