அரசியல் நெருக்கடிகளால், சிறிலங்காவுக்கு கடன் வழங்க இணங்கிய பல அனைத்துலக நிதி நிறுவனங்கள், தமது முடிவுகளை இடைநிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள். வெளியாகியுள்ளன.
தற்போதைய அரசியல் இழுபறிகளால், சட்டரீதியான அரசாங்கம் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.
இதனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் வரை, தமது கடன்கள் தொடர்பான முடிவுகளை எடுப்பதை அனைத்துலக நிதி நிறுவனங்கள், நிறுத்தி வைத்துள்ளன.
சிறிலங்கா அரசாங்கம் வரும் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் மாதத்துக்கிடையில், 1.5 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
இதில் 1 பில்லியன் டொலர் வரும் ஜனவரி 15ஆம் நாள் செலுத்தப்பட வேண்டும். இதற்காக, சீன அபிவிருத்தி வங்கியிடம் 500 மில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தன.
ஆனால், அரசாங்கத்தின் சட்டபூர்வ தன்மை தொடர்பான இழுபறியினால், இந்தக் கடனை சீன அபிவிருத்தி வங்கி நிறுத்தி வைத்துள்ளது. ஏற்கனவே சீன அபிவிருத்தி வங்கியிடும் சிறிலங்கா அரசாங்கம் 1 பில்லியன் டொலரை கடனாக பெற்றுள்ளது.
சீனாவிடம் கடனைப் பெறுவதற்கு பேச்சு நடத்தினோம், ஆனால் நாங்கள் நீதிமன்ற உத்தரவுகளுக்காக காத்திருக்கிறோம், என்று சிறிலங்கா அதிகாரி ஒருவர் கூறினார்.
“நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, யாரும் எங்களுக்கு கடன் கொடுக்கப் போவதில்லை. அவர்கள் அரசியல் சூழ்நிலை தெளிவாக உள்ளதா என்பதை அவர்கள் பார்க்க விரும்புகிறார்கள்.
நாங்கள் உங்களுக்கு கடன் கொடுக்கமாட்டோம் என்று நாங்கள் கூறவில்லை, ஆனால் நாங்கள் முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறோம் என அவர்கள் சொல்கிறார்கள்,” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகளினால் அனைத்துலக நாணய நிதியமும், அடுத்த கடன் தவணைக்கான பேச்சுக்களை இடைநிறுத்தி வைத்துள்ளது.
2016இல், அனைத்துலக நாணய நிதியம் சிறிலங்காவுக்கு 1.5 பில்லியன் டொலர் கடனை மூன்று ஆண்டுகளில் கட்டம் கட்டமாக வழங்க இணங்கியிருந்தது.
அதில் 1 பில்லியன் டொலர் இன்னமும் வழங்கப்படாத நிலையில், தெளிவான அரசாங்கம் அமைக்கப்படும் வரை காத்திருப்பதாக அனைத்துலக நாணய நிதியம் அறிவித்துள்ளது.
-puthinappalakai.net