மீண்டும் தலைதூக்கும் இனவாதம்; அதிர்ச்சியில் தமிழர்கள்!

கிழக்கு மாகாணசபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பில் இனரீதியிலான பாகுபாடு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

கிழக்கு மாகாணசபையினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நடத்தப்பட்ட முகாமைத்துவ உதவியாளர் பரீட்சையின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட பரிட்சாத்திகளின் புள்ளிகளில் இனரீதியாக பாகுபாடு காட்டப்பட்டு ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் பிரகாரம் ஆட்சேர்ப்பிற்கான வெட்டுப்புள்ளிகள் தமிழ் 130 முஸ்லீம் 120 சிங்களம் 105 என்கின்ற வகையில் இனரீதியாக பிரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது

இது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்தமைக்கு அமைய அவர் இதனை ஆளுனரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

கிழக்கு மாகாணசபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பில் இனரீதியிலான பாகுபாடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

கிழக்கு மாகாணசபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இரா. சம்பந்தன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விண்ணப்பங்கள் கோரப்பட்டு பரீட்சை நடாத்தப்பட்டபோது, இனரீதியில் ஆட்சேர்ப்பு இடம்பெறும் என்பதற்கான எந்தவொரு பிரத்தியேகப் பிரிவுகளும் வழங்கப்படவில்லை எனவும் ஆனால், தற்போது ஆட்சேர்ப்பிற்கான வெட்டுப்புள்ளிகள் இனரீதியில் அமையும் என கிழக்கு மாகாணசபையின் சில நிர்வாக உத்தியோகத்தர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்சேர்ப்பு தொடர்பில் இவ்வாறான நடைமுறைகள் இதற்கு முன்னர் பின்பற்றப்படவில்லை எனவும் அப்பட்டமான பாகுபாடு காட்டும் புதிய நடைமுறை அநீதியான செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, அனைத்து விண்ணப்பதாரிகளும் சமமாக நடத்தப்படுவதையும் இன அடிப்படையில் எந்தவொரு பாகுபாடும் காட்டப்படாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு இரா. சம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கடிதத்தின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

-athirvu.in

TAGS: