“புதிய அரசியலமைப்பின் கீழ் பிரிக்கப்படாத ஒரு நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ், அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை நாங்கள் முன்வைப்போம்.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவினால் இன்று புதன்கிழமை சபையில் முன்வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. குறித்த வாக்கெடுப்பில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றிபெற்றது.
இதனையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள். மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்ற அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் கூற்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
அரசியலமைப்பின்படி நாம் அரசியல் பேதங்களுக்கு அப்பால் செயற்பட வேண்டும். 19வது திருத்தம் செய்து நாம் பல சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவினோம். அதனால் இன்று ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் முன்வரக்கூடிய நிலையயேற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என்ற இன பேதங்களை களைந்து நாமெல்லோரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் நாட்டை முன்கொண்டுசெல்வோம்.
இதேவேளை, வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய அரசியலமைப்பினூடாக பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை நாங்கள் முன்வைப்போம்.” என்றுள்ளார்.
-4tamilmedia.com