யேமனில் செளதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கு ராணுவ உதவியை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க செனட் வாக்களித்தது மற்றும் செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலைக்கு செளதி பட்டத்து இளவரசரை குறைகூறிய அமெரிக்க செனட்டின் தீர்மானம் ஆகியவற்றுக்கு செளதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது பொய்யான குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தலையீடு என்று செளதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமையன்று நிறைவேற்றப்பட்ட இந்த அமெரிக்க செனட்டின் தீர்மானங்கள் சட்டமாவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றும், அவை விவகாரங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுவதற்கானது என்றும் கருதப்படுகிறது.
ஆனால் செளதி அரேபியா தொடர்பான கொள்கைகள் மீது அமெரிக்க எம்.பிக்களின் கோபத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு உணர்த்துவதாக இந்த தீர்மானம் பார்க்கப்படுகிறது.
செளதி அரேபியா என்ன சொல்கிறது?
செளதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்ததாக அந்நாட்டு அரசு செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “அமெரிக்க செனட்டின் தற்போதையை நிலைப்பாட்டிற்கு செளதி அரேபியா கண்டனம் தெரிவிக்கிறது. பொய்யான குற்றச்சாட்டுகளின் மீது கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம், எங்கள் நாட்டின் உள் விவகாரத்தில் தலையீடு செய்வதாக இருக்கிறது”.
“செளதி அரேபியா ஏற்கனவே குறிப்பிட்டது போல், செளதி குடிமகன் ஜமால் கஷோக்ஜியின் கொலை வருத்தத்திற்கு உரியது; இந்தக் கொலை, செளதி அல்லது அதன் அமைப்புகளின் கொள்கையை பிரதிபலிக்கவில்லை. மேலும், கஷோக்ஜி கொலை வழக்கில் விசாரணை நியாயமாக நடப்பதில் தலையீடு செய்யலாம் என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செளதியின் இந்த அறிக்கைக்கு அமெரிக்கா இதுவரை வெளிப்படையாக எந்தவித பதிலையும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்க செனட்டின் தீர்மானம் என்ன சொல்கிறது?
வியாழனன்று அமெரிக்க செனட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், நாட்டில் நடைமுறையில் உள்ள ‘1973 போர் அதிகாரங்கள்’ சட்டத்தை பயன்படுத்தி நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் சௌதியுடனான உறவு பாதிக்கப்படும் என்று தெரிவித்தாலும், அவர்களது குடியரசு கட்சியை சேர்ந்தவர்களே தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க 56-41 என்ற கணக்கில் அந்நாட்டு வரலாற்றில் முதல் முறையாக அதன் வெளிநாட்டு ராணுவ செயல்பாடு முடக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டாகியுள்ளது.
ஆனால், இந்த தீர்மானம் ஒருவித கண்துடைப்பாக பார்க்கப்படுவதால் இது சட்டமாக மாற்றப்படாது என்றே கருதப்படுகிறது.
இந்த ‘போர் அதிகார தீர்மானம்’ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை யேமனில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருபவர்களை தவிர்த்து மற்ற அனைத்து அமெரிக்க ராணுவ வீரர்களும் விலக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன், அமெரிக்க நாளிதழான வாஷிங்டன் போஸ்ட்டின் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டதற்கு, சௌதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை குற்றஞ்சாட்டும் தீர்மானம் ஒருமனதாக செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த மாதம் சௌதி அரேபியாவின் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணியை அமெரிக்கா நிறுத்திக்கொண்ட நிலையில், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானம் சட்டமாக இயற்றப்பட்டால் மீண்டும் அமெரிக்காவால் சௌதியின் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணியை மேற்கொள்ள முடியாது.
அக்டோபர் இரண்டாம் தேதியன்று துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணைத் தூதரகத்துக்கு சென்றிருந்த ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டார்.
சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி திட்டமிட்டே கொல்லப்பட்டார் என்கிறார் சௌதி அரேபிய அரசு வழக்குரைஞர் அல்-ஏக்பாரியா தெரிவித்துள்ளார்.
அக்டோபர் இரண்டாம் தேதி நடந்த கொலைக்குப் பிறகு, அந்த கொலை சம்பவத்தின்போது பதிவு செய்யப்பட்ட ஆடியோ பதிவு தங்களிடம் இருப்பதாக துருக்கி அதிகாரிகள் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஆனால், அந்த ஆடியோவில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றியோ, அது அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பது பற்றியோ எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இதுவரை ஜமால் கஷோக்ஜியின் சடலம் கண்டெடுக்கப்படவில்லை.
- கஷோக்ஜி கொலை: ‘இளவரசரை நீக்குவதா? சாத்தியமே இல்லை’ செளதி அமைச்சர் கண்டிப்பு
- செளதி அரேபியா – அமெரிக்கா முரண்: எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?
செனட் தீர்மானம் சட்டமாகுமா?
இந்த தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்படாது என்பதால் சட்டமாவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே இருக்கிறது. ஏனெனில் புதன்கிழமையன்று இந்த விவகாரம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு பிரதிநிதிகள் சபை மறுத்துவிட்டது.
அமெரிக்காவின் வெர்மாண்ட் மாகாணத்தை சேர்ந்த செனட் உறுப்பினரான பெர்னி சாண்டர்ஸ், குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர் மைக் லீயால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை பாராட்டினார். இடைக்கால தேர்தல் வெற்றிக்கு பிறகு ஜனவரி மாதம் குடியரசு கட்சி பிரதிநிதி சபையில் பொறுப்பேற்கும்போது தீர்மானம் சட்டமாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
யேமனில் இரானின் ஆதரவு பெற்ற ஹுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டுவரும் செளதி தலைமையிலான கூட்டணிப் படைக்கு வழங்கிவரும் ஆதரவை குறைக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை அதிகாரிகள் செளதி அரேபியாவுடனான அமெரிக்காவின் பொருளாதார உறவுகளை வலியுறுத்தி வருவதாகவும், டிரம்பின் ஆலோசகரும், மருமகனுமான ஜரேத் குஷ்னர், செளதி பட்டத்து இளவரசுடன் தொடர்ந்து நெருக்கமான உறவு கொண்டிருப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. -BBC_Tamil