ரணில் தொடர்பில் டெலோவின் சூளுரை; இந்த வருடத்தின் மிகப்பெரும் நகைச்சுவை இதுதான் தமிழர்களே!

ஸ்ரீலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்கிவிட்டு கை கட்டி நிற்கும் செயற்பாட்டை செய்யமாட்டோம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோ சூளுரைத்துள்ளது.

தெனன்னிலங்கை அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும், அதற்காகவே ரணிலுக்கு ஆதரவு வழங்கியதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், டொலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருக்கின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், வவுனியா – கோமரசங்குளம் பிரதேச மக்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எதற்காக கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தது என்பதை தெளிவபடுத்தினார்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளாது உதாசீனமாக ரணில் தலைமையிலான புதிய அரசாங்கம் செயற்படுமாக இருந்தால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை மீளப்பெற்றுக்கொள்ளும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய ஒருவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இருக்கும் நிலையில், தமிழ்த் தேசிய கூட்டைமைப்பு மஹிந்தவுக்கு எந்த விதத்திலும் ஆதரவு வழங்காது என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

-athirvu.in

TAGS: