ஜீ- 20 எனும் அனைத்துலக அரசியல் நாடக மேடை

டிசம்பர் மாத ஆரம்பத்தில் அனைத்துலக அரங்கில் தென் அமெரிக்க நாடான  ஆஜென்ரீனாவில் இடம் பெற்ற  உலகின் இருபது பெரிய நாடுகளின் G-20 மாநாடு மிக முக்கிய இடம் பெற்றிருந்தது.

ஜீ-20 எனும் அனைத்துலக மன்றம், உலகின் மிகப்பிரதானமான தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளையும், பொருளாதார ரீதியாக தமது முதன்மை நிலையை எட்ட முயற்சிக்கும் பெரிய நாடுகளையும் ஒரு தளத்திற்கு அழைத்து பேச்சுகளுக்கு வழிவகைகள் செய்வதாகும்.

உலகின் 85 சதவீத, மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் உலகின் மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகையையும் தன்னகத்தே கொண்ட இந்த இருபது பெரிய நாடுகளும் உலக அளவிலும் பிராந்தியங்களின்  அளவிலும் மிக முக்கிய பாத்திரம் வகிப்பனவாக பார்க்கப்படுகின்றன.

நாடுகளுக்கிடையே முக்கிய பொருளாதார வியாபார ஒப்பந்தங்களுக்கு காரணமாக இருக்கும் இந்த மாநாடு அதனோடு சமாந்தரமாக அல்லது  இணைந்ததாக  முறைசாரா அனைத்துலக அரசியல் நிகழ்வுகளை அரங்கேற்றுவதில் வல்லது.

போனஸ் அயர்ஸ் நகரில் இடம் பெற்ற இந்த வருட மாநாட்டில் பல்வேறு நடை முறை அரசியல் விவகாரங்கள் முக்கிய இடம் பிடித்தன. சீன அமெரிக்க வர்த்தகப் போர் குறித்த விடயங்களுக்கு ஒரு சமாதானத்தை ஏற்படுத்துதல், முடிக்குரிய சவுதி அரேபிய இளவரசரின் சம்மதத்துடன் துருக்கியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் படுகொலை குறித்த விவகாரம்,  கருங்கடலில் உக்ரேனுக்கு சொந்தமான இரண்டு பீரங்கிப் படகுகளையும் ஒரு இழுவைப்படகையும் ரஷ்யா கைப்பற்றியதன் பின் இடம்பெற்ற பதட்டநிலை குறித்த விவகாரம் – ஆகிய நடை முறை விவகாரங்களுக்கு மத்தியில் அனைத்துலக அரசியல்  நிலைமை நகர்ந்து சென்றது..

குறிப்பாக தலைவர்கள் மத்தியிலான தனிப்பட்ட இராஜதந்திர தொடர்பாடலின் நிபுணத்துவ காட்சிப்படுத்தலுக்கு ஒரு அரங்காக இந்த மாநாடு அமைந்ததாக மேலைத்தேய ஆய்வாளர்களின் பார்வை இருந்தது.

ஏனெனில் இம் மாநாட்டில் முன் ஒழுங்கு செய்யப்படாத தனிப்பட்ட உரையாடல்களும் முகத்துதிகளும் முக்கிய இடம்பெறுவது வழமை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் ரஷ்ய சீன தலைவர்களை சந்திப்பது அவரது தனிப்பட்ட அனைத்துலக அரசியல் தலைமைத்துவ இராஜதந்திரத்தின் சோதனைக்கான நேரமாக பார்க்கப்பட்டது.

ட்ரம்ப் அவர்கள் தனது சுயஆளுமையின்பாலான விட்டு கொடுப்புகளையும் அதேவேளை அமெரிக்க மேலாதிக்கத்தையும் கையாளும் அதேவேளை, உலக தலைவர்கள் மீதான கொள்கை இலக்குகளை கொண்டு செல்லும் திறமையை பரிசோதிக்கும் களமாக அல்லது ஒரு சந்தர்ப்பமாக இந்த மாநாட்டை ஒட்டி நடைபெற்ற விவாதங்களில் பல ஆய்வாளர்களும் கூறினர்..

ஆனால் இந்த மாநாடு ஆரம்பித்ததும்  சீன தலைவருடன் தனிப்பட்ட சந்திப்பை ஏற்று கொண்ட ட்ரம்ப் அவர்கள் ரஷ்ய தலைவருடனான சந்திப்பை பிற்போட்டு தவிர்த்து கொண்டார்.

கருங்கடலில் இடம் பெற்ற நிகழ்வை கருத்தில் கொண்டு அதனை கையாளுவதில் ட்ரம்ப் அவர்கள் பல்வேறு ஆளுமைச்சிக்கல்களில் தள்ளப்படலாம் என்பதன் அடிப்படையில் இது தவிர்க்கப்பட்டதாக அமெரிக்க செய்தி நிறுவனம் சீ என் என் செய்தி வெளியிட்டது.

ஏற்கனவே கடந்த முறை  ஹெல்சிங்கி நகரில் இவ் இரு தலைவர்களும் சந்தித்த வேளை,  ரஷ்ய தலைவர் புட்டின் அவர்கள் அதிபர் ட்ரம்ப் அவர்களுடன் ஒத்துப்போகாத நிலை உருவாகி இருந்தது.  ரஷ்ய தலைவரின் ஆளுமை மேலான்மை செலுத்திய நிலை இருந்தது.

மீண்டும் தற்பொழுது கருங்கடல் விவகாரத்தில் சற்று அழுத்தமாக பேச்சுகளே எதிர்பார்க்கப்படுவதால், இத்தகைய நிலையை தவிர்த்து கொள்ளும் வகையில் இந்த சந்திப்பு தவிர்க்கப்பட்டதாக வொஷிங்டன் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன அதிபருடனான சந்திப்பில் கடந்த ஒருரிரு மாதங்களாக இடம் பெற்று வரும் வர்த்தகப்போர்  நிலை அல்லது பழிக்குப்பழி வரிஅறவீடு என்பன ஒரு யுத்த நிறுத்த சூழலை அடைந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது .

சீன அதிபர் ஷி ஜின்பின் அவர்கள் கணிசமான அளவு அமெரிக்க தயாரிப்பு பொருட்களை கொள்வனவு செய்வதாக ஏற்று கொண்டதன் பேரில்,  வர்த்தக உபரி நிலையின் அளவு குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் அதிபர் ட்ரம்ப் அவர்கள் தற்காலிகமாக  சீனப் பொருட்கள் மீதான  வரி அறவீட்டை உயர்த்தும் நோக்கத்தை நிறுத்தி  வைக்க சம்மதித்திருக்கிறார்.

அடுத்த தொண்ணூறு நாட்களில் சீனாவில் வர்த்தக கட்டமைப்பு ரீதியான மாற்றம் ஏற்படுத்துவது என ஏற்றுக்கொண்ட போதிலும் கடந்த பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்ட சீன முறைமைகள் அவ்வளவு விரைவாக தீர்க்கப்படும் என எதிர்பார்க்க முடியாது என்பது ஆய்வாளர்களின் நோக்காகும்.

மாநாடு நடந்து கொண்டிருந்த வேளையும், அதன் இடை நடுவிலேயும்  அதிபர் ட்ரம்ப் அவர்கள் தனித்து விடப்பட்டது போன்ற நிலை அனைத்துலக அரங்கில் ஐக்கிய அமெரிக்காவின் தலைமைத்துவத்தை  கேள்விக்குள்ளாக்கி இருந்ததாக பல செய்தி நிறுவனங்கள் விமர்சித்திருந்தன.

பலராலும் பார்வைத் தொடர்பிலிருந்து தவிர்க்கப்பட்ட சவுதி அரேபிய இளவரசருடன் உயர கைகளால் அடித்து கொண்டு கைலாகு கொடுத்த  ரஷ்ய தலைவர் புட்டின் அவர்களின் செயற்பாடு முக்கியமாக பலராலும் பேசப்பட்டது.

மேலும் சீன தலைவர் ஷி ஜின்பின் அவர்கள் உலக அரசியல் தலைவர்களால் இடைவிடாத அளவில் பின்னும் முன்னும் மொய்த்த நிலை சீனாவின் பொருளாதார திடதன்மையின் வெளிப்பாடு என்பது பார்வையாகும்

அதேவேளை இராஜதந்திர நகர்வுகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நகர்வுகளை பல நாட்டு செய்தி ஊடகங்களும் கவனம் செலுத்தி இருந்தன.

மக்கட் தொகையாலும் பொருளாதாரத்தாலும், மூலோபாயத்தாலும்  புவிசார் அரசியல் சார்பாகவும் இந்தியாவின் முக்கியத்துவம் வளர்ந்து வருகிறது. புதுடெல்லியின் ஒத்தாசை இல்லாமல் அல்லது புதுடெல்லியுடன் முரண்பட்ட நிலையில் எந்த அமெரிக்க கனவும் அல்லது  சீனபார்வையும் கூட இலகுவில் பலிக்காது என்பது தற்போதைய அனைத்துலக நிலையாகும்.

ஜப்பானிய அமெரிக்க இந்திய  தாராள பொருளாதார கூட்டாக இணைந்து JAI என்ற கூட்டையும், ரஷ்ய இந்திய  சீன ஏதேச்சாதிகார, வர்த்தக கம்யுனிச நாடுகளுடன்  இணைவது போலான RIC என்ற கூட்டுடனும் சுமூகமான ஒரு கூட்டை ஒத்துக்கொள்வது போலான நிலையையும் இந்தியா எடுத்திருந்தது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எந்த கூட்டில் அதிகம் நாட்டம் கொண்டவர் என்பதை காட்டாத நிலை ஒன்றை கடைப்பிடித்தார்.  இது ஒரு அனைத்துலக அரசியல் நாடக மேடை என்ற பார்வையில் வைத்து பார்த்தால் மட்டுமே இந்தியாவின் போக்கை இந்த மாநாட்டில்  சரிவர புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இந்திய பத்திரிகைகள் தமது இராஜதந்திரத்தின் முதலீடு என்றும் பெருமிதம் கொண்ட செய்திகளை வெளியிட்டிருந்தன. ரஷ்ய ஆய்வாளர்கள் இந்தியா கொப்புகளின் மத்தியிலே ஊசலாடும் போக்கை கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

வட அத்திலாந்திக்கரை ஆய்வாளர்கள் தாராள பொருளாதார கூட்டே இந்தியாவிற்கு சிறந்தது என்ற பார்வையையும் ஜனநாயக நாடுகள் என்றும் ஒன்றாக இணைந்து செயல்படுவதே முறை என்ற கருத்தையும் கொண்டிருந்தனர்.

-லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

-puthinappalakai.net