ஒரு நாடு இரு பிரதமர் சர்ச்சை முடிந்து ஒரு நாடு இரு எதிர்க்கட்சி தலைவர் சர்ச்சை வெடித்தது ! ஆம் இலங்கை ஆசியாவின் ஆச்சரியம்

சபாநாயகர் இன்னும் தன்னை பதவியில் இருந்து நீக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தற்போது இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இருவர் வகித்து வருவதாக கருத வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருந்தார்.

ஆளும் கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக உறுப்பினர் கொண்ட கட்சியின் உறுப்பினருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும்.அதற்கமைய அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

எனினும் தாமரை மொட்டு தலைவராகிய மஹிந்த ராஜபக்சவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்குவது எப்படி என ஐக்கிய தேசியக் கட்சியால் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.இந்த நிலையில், மஹிந்தவின் கட்சி விவகாரம் குறித்து ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மஹிந்தவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்திருந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க தானும் பிரதமர் எனத் தெரிவித்து வந்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தற்பொழுது பிரதமர் பதவி யாருக்கு என்ற பிரச்சினை ஓய்வடைந்துள்ள போது, இரு எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளதாக நாடாளுமன்றில் சம்பந்தன் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

-eelamnews.co.uk

TAGS: