கிளிநொச்சியில் வௌ்ளம்: மீட்புப் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சியில் பெய்த கடும் மழையை அடுத்து ஏற்பட்ட வௌ்ளத்தில் மூழ்கிய பல கிராமங்களில், இராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று (21) இரவு பெய்த மழையால், மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதோடு, பல கிராமங்களுக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

வழமைக்கு மாறாக  225 தொடக்கம் 370 மில்லிமீற்றர் வரை மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு, மாவட்டத்தில் உள்ள அனைத்துக் குளங்களும் வான் பாய்கின்றமையால்  வீதிப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு, மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த மக்கள், இராணுவத்தால், படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 38 அடியாக உயர்ந்துள்ளதோடு, அனைத்து வான் கதவுகளும் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளன. அத்தோடு, மூன்றடிக்கு வானும் பாய்கிறது. இரணைமடு குளத்தின் நீர்  கொள்ளளவு உயரம்  36 அடி என்பது குறிப்பிடத்தக்கது.

-tamilmirror.lk

TAGS: